மொச்சை கிரேவி என்பது காய்ந்த மொச்சை விதைகள், கத்தரிக்காய் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் தொட்டுக் கறியாகும்.
இது புலாவ் சாத வகைகள், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை ஆகியவற்றிற்கு தொட்டுக் கொள்ள மிகவும் பொருத்தமானது. இனி சுவையான மொச்சை கிரேவி செய்முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
காய்ந்த மொச்சை விதைகள் – 1 கப் (100 கிராம்)
கத்தரிக்காய் – 4 எண்ணம் (மீடியம் சைஸ்)
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் பொடி – ½ ஸ்பூன்
கொத்த மல்லி இலை – தேவையான அளவு
அரைக்க தேவையானவை
பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)
தக்காளி – 3 எண்ணம்
இஞ்சி – பாதி சுண்டுவிரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 4 பற்கள் (மீடியம் சைஸ்)
மிளகாய் வற்றல் – 4 எண்ணம்
மசால் பொடி தயாரிக்க
வெள்ளைச் சோளம் – 2 டேபிள் ஸ்பூன்
மல்லி விதை – ½ டேபிள் ஸ்பூன்
பட்டை – சிறு துண்டு
கிராம்பு – 2 எண்ணம்
ஏலக்காய் – 1 எண்ணம்
தாளிக்க
நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
கடுகு – ½ ஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கீற்று
மொச்சை கிரேவி செய்முறை
முதலில் காய்ந்த மொச்சை விதைகளை எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதனுடன் மஞ்சள் பொடி சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
கத்தரிக்காயை மெல்லிய நேர் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளை சோளம், மல்லி விதை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
பெரிய வெங்காயம், இஞ்சி, வெள்ளைப்பூண்டு போன்றவற்றை தோலுரித்து சுத்தம் செய்யவும்.
பின் பெரிய வெங்காயம், இஞ்சி, வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
தக்காளியைக் கழுவி சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
பின் நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, வெள்ளைப் பூண்டு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கொத்தமல்லி இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் நல்ல எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.
அதனுடன் சிறுதுண்டுகளாக்கிய கத்தரிக்காயினைச் சேர்த்து வதக்கவும்.
கத்தரிக்காய் நன்கு வதங்கியதும் அதனுடன் விழுதாக அரைத்துள்ள தக்காளி, வெங்காயக் கலவையைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
பின் அவித்த மொச்சை சேர்த்து கிளறி, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்க்கவும். பின் அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாப் பொடி, தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் கலவையை சிம்மில் வைத்து அடிக்கடி கிளறி விடவும். கலவையானது கெட்டியாகி கிரேவிப் பதம் வந்ததும் இறக்கி விடவும்.
இதனுடன் நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்த்து அலங்கரிக்கவும்.
சுவையான மொச்சை கிரேவி தயார்.
குறிப்பு
மொச்சை கிரேவி தயார் செய்ய வெள்ளை மொச்சையைப் பயன்படுத்தவும்.
சமையல் கலைஞர் பாடம் சொல்வது போல் இருந்தது.