யாரோ மனிதர்களாம் – கவிதை

எனக்குக் கொஞ்சமும்
தொடர்பில்லாத
இசையின் ஓலம்

நாய்களின் வழி
நற நறவென்று
உச்சி பிடித்துத்
தீர்ந்து விட வழிகிறது பேரருவியாய்….
தீர்ந்த பாடில்லை

சாகாத நரம்புகள்
புடைத்து எழுகின்றன
வீணையின் தெறிப்பிலிருந்து
கிளம்பிய இசை போல்

கருகிய மலடியின்
வயிற்றிலிருந்த கருவிலிருந்து
புலம்பும் ஓசை ஒத்து

மல்லாந்து கால்மடக்கி
சோம்பல் முறிக்கும்
வீட்டுநாயின்
முந்தைய நாள் கனவில்…
குரைத்து ஒய்ந்த
நடு நசியில்-
அது கண்ட
புளியமரக் கிளையொன்றில்
அழுகித் தொங்கிய
பிணத்தின்
அகோரப் பயமுறுத்தல்

எதிர்வீட்டுச்
சிப்பிப்பாறை நாயின் வாயில்
வசமாய்க் கவ்விச் சுழற்றியடித்த
குரூரம் நினைத்து…
தெரு நாய்கள்
வெருண்டு, கத்தித் தொலைத்தன
குடல் தெறித்த வெறியுடன்
கூடவே ஈனக் குரலெடுத்து

காட்சிகள் இரண்டு பக்கமும்
விரிகின்றன

மருண்ட பார்வையில்
அசைந்த கிளையினூடே
அதே துர்நாற்றம் தாங்காது
தெறித்த ஊர் நாய்
குட்டிச்சுவர் முகடேறி
மூன்றாம் தெருக்கோடி
வழிப்பிள்ளையார் சிலை பின்னே
உடல் சுருட்டி
வானம் பார்த்துக் கேவியது

நாய்களுக்கும் கூட
வீதிகள் சொந்தம் – அதில்
மனிதர்கள் குரைக்கிறார்கள்
நாக்குத் தொங்க….

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
தமிழ்ப் பேராசிரியர்
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி
ஆவடி, சென்னை – 600062
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com

8 Replies to “யாரோ மனிதர்களாம் – கவிதை”

 1. காசு என்றும் பணம் என்றும் புகழென்றும் பெண் என்றும் மண்ணென்றும்
  தருக்கித் திரியும் மனிதர்களை நாய் மூலம் நைய புடைக்கிறது இந்த கவிதை
  எப்போதும் போல் இரண்டு மூன்று முறை படிக்க வைத்து புரிந்து கொள்ள சொல்கிறது சந்திரனின் சந்தம்..
  ஆரம்பத்தில் இருந்த சங்கடம் இப்போது இல்லை உங்கள் எழுத்துக்களுடன் நான் உறவாடி கலந்து விட்டேன்
  நீங்கள் எங்கே ஒளித்து வைத்தாலும் மோப்பம் பிடித்துக் கொண்டு போய் எடுத்து வரும் நாய் போல் நான் எல்லாவற்றையும் கவ்விக் கொள்கிறேன்.
  யாரோ மனிதர்களில் நான் இருக்க விரும்பவில்லை
  நாய் குடிலில் நான் மட்டும்..

  எந்த நாற்றமும் அற்ற ஏகாந்த வெளியில் நான் தனி ஆவர்த்தனம் செய்ய முயல்கிறேன்.. வேண்டுமானால் சந்திரன் வந்து விட்டுப் போகட்டும் சந்திரனை யார் மறைப்பது? எப்படி மறைப்பது..

 2. நாய்களின் அறிவு மனிதனை விட குறைவு. அதனால் வழி தவறி வரலாம் சாலைகளில். மனிதனின் அறிவு எத்தகையது அதனை ஏற்றி கொன்று செல்கையில்…. !!!?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.