பிரபல எழுத்தாளர் வைதேகி தன் வீட்டின் ஹாலில் சோபாவில் அமர்ந்து டிவி நிகழ்ச்சியில் ஆர்வமுடன் லயித்திருந்தாள்.
டிவி தொகுப்பாளர் அடுத்து வரும் நிகழ்ச்சியை ஸ்டைலான உச்சரிப்பில் விளக்கிக் கொண்டிருந்தார்.
“அடுத்து நாம் பார்க்க உள்ள நிகழ்ச்சி பிரபலங்களின் மாமியார்களுடன் ஒரு நேர்காணல்.
அந்த வரிசையில் இன்று நாம் சந்திக்க உள்ள நபர் பிரபல முன்னணி எழுத்தாளர் வைதேகி அவர்களின் மாமியார் கமலம் அவர்களை.”
டிவித் திரை கமலத்தை பளிச்சிட்டது.
முகம் நிறைந்த மலர்ச்சியுடன் வைதேகி நிகழ்ச்சியில் ஆர்வமானாள்.
“வணக்கம்மா”
தொகுப்பாளரின் வணக்கத்தை ஏற்று பதிலுக்கு கைகூப்பினாள் கமலம்.
“உங்கள பத்தி சொல்லுங்கம்மா..”
“என் பேரு கமலம். நான் வைதேகியின் மாமியார்ன்னு சொல்லறதுதான் எனக்கு பெருமையா இருக்கு.”
வயதின் காரணமாக அவள் குரல் சற்று நடுங்கியது,
“உங்கள பேட்டி எடுக்க அனுமதி கேட்டப்ப உங்க மருமகள் சொன்னாங்க, உங்க உடல் நிலையில் தீராத பிரச்சனை இருப்பதா, அதப் பத்தி சொல்ல முடியுமா?”
“35 வயசுல எனக்கு ஒரு ஆபரேஷன் நடந்தது. அதுல தவறுதலா ஒரு நரம்பு கட்டாயிடுச்சி. அன்னைலேர்ந்து எனக்கு சிறுநீர் தன்னாலேயே வெளியேறிடும். அந்த. உணர்வே எனக்கு வராது. அதுதான் தம்பி பிரச்சனை.”
“சரிங்கம்மா. உங்க மருமகளைப் பத்தி சொல்லுங்களேன். உங்களோட இந்த பிரச்சினைல அவங்க எந்த அளவுக்கு அக்கறை எடுத்துக்குறாங்க..”
“இன்னொரு முற மருமகள்ன்னு சொல்லாதீங்க. எனக்கு அவ மகள் தான்.
எனக்கு பிறந்தது ஒரு பையன் மட்டுந்தான். பொண்ணு இல்லியேன்னு ரொம்ப நாளா வருத்தப்பட்டுட்டு இருந்தேன்.
ஆனா வைதேகி வந்ததற்கு அப்புறமா அந்த வருத்தமே மாறிடிச்சி. மாத்தினது வைதேகிதான்.
எனக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தா கூட இந்தளவுக்கு சகிப்புத் தன்மையோட இருந்திருக்க மாட்டா, ஆனா வைதேகி …”
மேற்கொண்டு சொல்ல முடியாமல் பொங்கி வந்த அழுகையுடன் திணறினாள்.
டிவி தொகுப்பாளர் தொடர்ந்தார்,
“நல்லா ஆரோக்கியமா இருக்குற மாமனார், மாமியாரையே முதியோர் இல்லத்துக்கு அனுப்புற இந்த காலத்துல, உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையிலும் தன் கூடவே வச்சு பராமரிக்கிற, நம்ம எல்லோரோட ஃபேவரிட் எழுத்தாளர் திருமதி வைதேகி வாசுவிற்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்களை நம் அனைவரின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உங்களுக்கும் மிகவும் நன்றிங்கம்மா.”
நிகழ்ச்சி முடிந்தது.
பார்த்துக் கொண்டிருந்த. வைதேகிக்கு உற்சாகம் கரை புரண்டோடியது.
நிகழ்ச்சி முடிந்த அடுத்த வினாடி யே வீட்டிலுள்ள அனைத்து போன்களிலும் வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தது.
முகத்தில் மலர்ந்த அளவற்ற சிரிப்புடன் அனைவர்க்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருந்தாள் வைதேகி.
ஒரு சின்ன பிளாஷ்பேக்.
பேட்டி எடுப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு,
வைதேகியின் பங்களா.
பங்களாவின் காம்பௌன்ட் சுவரையொட்டி ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட ஒரு சிறிய அறை.
அந்த அறையிலுள்ள கயிற்றுக் கட்டிலில் தளர்வாய் படுத்திருந்தாள் கமலம்.
அவளுக்கு எதிரே நின்றுகொண்டிருந்த வைதேகி மாமியாரைப் பார்த்து கேட்டுக் கொண்டிருந்தாள்,
“சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா. கரெக்டா சொல்லிடுவீங்க இல்ல,”
“நீ எதுவும் கவலப்படாதம்மா, நான் ஒழுங்கா நீ சொல்லிக் கொடுத்த மாதிரியே டிவியில பேசிடறேன்”
“என்ன கேள்வி கேட்பாங்கன்னு அவங்க ஏற்கனவே சொல்லிட்டாங்க. இருந்தாலும் அந்த நேரத்துல திடீர்ன்னு குறுக்க எதாவது கேப்பாங்க.” சொல்லிக் கொண்டு போன. மருமகளை இடைமறித்தாள் கமலம்
“அவங்க எப்படி கேட்டாலும் உன்னோட பேருக்கு களங்கம் வர்ற மாதிரி நான் எதுவும் சொல்ல மாட்டேம்மா. இதுவரைக்கும் என்னோட ரூம் பக்கமே வராத நீ, இத சொல்லறதுக்காக நாலு நாளா இங்க வந்து வந்து போயிட்டிருக்க. அதுக்காக வேண்டியாவது நான் சரியா சொல்லிடறேம்மா.”
“சரி சரி போதும். நான் சொல்லிக் கொடுத்தத, திரும்பத் திரும்ப மனசுக்குள்ள சொல்லிப் பாத்துக்குங்க.என்னால இந்த ரூமுக்கு அடிக்கடி வந்திட்டிருக்க முடியாது. ஒரே நாத்தம்; கர்மம் தாங்க முடியல.”
சேலைத் தலைப்பால் மூக்கைப் பொத்திச்செல்லும் மருமகளையே வேதனை நிறைந்த விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் கமலம்.
மஞ்சுளா ரமேஷ்
ஆரணி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!