ராகி ரவா உப்புமா அருமையான சிற்றுண்டி. இதனைத் தயார் செய்ய மிகக்குறைந்தளவு நேரமே ஆகும். ராகியை (கேழ்வரகு) வாரம் ஒருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவது அவசியமான ஒன்று.
ராகியைப் பயன்படுத்தி ராகி பூரி, ராகி இனிப்பு அடை, ராகி கார அடை, ராகி புட்டு, ராகி இடியாப்பம் உள்ளிட்ட உணவு வகைகளைச் செய்யலாம்.
அந்த வகையில் ராகியைப் பயன்படுத்தி உப்புமாவும் செய்யலாம்.
ராகி உப்புமா செய்யும் போது ராகி மாவு நன்கு வேக வேண்டும் என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். ராகி நன்கு வேகவில்லை எனில் செரிமானத்தில் பிரச்சினை உண்டாகக் கூடும்.
இனி சுவையான ராகி உப்புமா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
ராகி – 1/2 கப் (100 கிராம்)
ரவை – 1/2 கப்
பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (பெரியது)
தக்காளி – 1 எண்ணம் (சிறியது)
பச்சை மிளகாய் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)
மிளகாய் வற்றல் – 2 எண்ணம் (நடுத்தர அளவு)
கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கீற்று
முந்திரிப் பருப்பு – 5 எண்ணம்
இஞ்சி – சுண்டு விரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 1 எண்ணம் (பெரியது)
தண்ணீர் – 1 1/4 கப் (1 கப் ரவை மற்றும் 1 கப் ராகிக்கு
2 1/2 கப் அளவு)
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
ராகி ரவா உப்புமா செய்முறை
வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், அதில் ரவை மற்றும் ராகி மாவைச் சேர்த்து நன்கு வாசம் வரும் வரை தீய விடாமல் கைவிடாது வறுக்கவும்.



ராகி நன்கு வறுபட்டால்தான் எளிதில் வேகும் என்பதை நினைவில் கொள்ளவும்.
வறுத்த மாவினை ஆற விடவும்.
பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி நேராக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியை அலசி சதுரத்துண்டுகளாக்கவும்.
பச்சை மிளகாயை அலசி வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றலை காம்பு நீக்கி ஒடித்துக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
கொத்த மல்லி இலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, சீரகம், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிதம் செய்யவும்.
அதனுடன் முந்திரிப் பருப்பு சேர்க்கவும்.


அதனுடன் இஞ்சி பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்கவும்.

1/2 நிமிடம் கழித்து பச்சை வாசனை நீங்கியதும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து ஒரே சேரக் கிளறவும்.

பின்னர் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி மசிய வெந்ததும் அதில் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் வறுத்து ஆற வைத்துள்ள ராகி மற்றும் ரவைக் கலவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கொண்டே கட்டிகள் விழாதவாறு கிளறி விடவும்.

அடுப்பினை மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.
கிளறும் போது கட்டிகள் இருந்தால் கரண்டியால் அதனை நசுக்கி விட்டு கட்டிகள் இல்லாமல் ஒருசேரக் கிளறி மூடி இடவும்.

அடுப்பினை சிம்மிற்கும் சற்று அதிகமாக வைத்து ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.
ஆவ்வப்போது மூடியினை எடுத்து கிளறி விடவும்.
பின்னர் அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி மூடி இடவும்.

இரண்டு நிமிடங்கள் கழித்து அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.

தற்போது கலவையானது ஒருசேரத் திரண்டு வரும்.
அடுப்பினை அணைத்து விடவும்.
சுவையான ராகி ரவா உப்புமா தயார்.
இதனை தேங்காய் சட்னி மற்றும் வேர்க்கடலை சட்னியுடன் இணைத்துச் சுவைக்கலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் காரட், பீன்ஸ், குடைமிளகாய் உள்ளிட்ட காய்கறிகளை சேர்த்து வதக்கியும் ராகி உப்புமா தயார் செய்யலாம்.