கீழ்போர்ஷனில் ஹவுஸ் ஓனரும் மாடி போஷனில் வசுமதியும் குடியிருந்தார்கள்.
அந்த வீட்டுக்கு குடிவந்த நான்கைந்து மாதங்களுக்குள்ளேயே ஹவுஸ் ஓனர் செண்பகத்தின நடவடிக்கைகள் பிடிக்காமல் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தாள் வசுமதி.
காரணம் ‘செண்பகம் சரியான பொறாமைக்காரி’ என அக்கம் பக்கத்தினர் மூலம் கேள்விப்பட்டது மட்டுமல்ல; அவளது நடவடிக்கைகள் வசுமதியையும் வெறுப்பேற்றியிருந்ததுதான்.
வசுமதியின் கணவன் வேலைக்குக் கிளம்பியதும் உடனே மாடி ஏறி வந்துவிடுவாள் செண்பகம்.
மணிக்கணக்கில் பேசிக்கொண்டு வீட்டிலிருக்கும் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுவாள். விலையுயர்ந்த சாதனங்களைத் தொட்டுப் பார்த்து பெருமூச்சு விடுவாள்.
அவள் வந்து விட்டுப் போனாலே வீட்டில் ஏதாவது ஒரு களேபரம் நடக்கும். யாருக்காவது உடல்நலம் பாதிக்கும். அல்லது ஏதாவது ஒரு சாதனம் மக்கர் செய்யும். அவ்வளவு ராசியானவள் செண்பகம்.
முகத்திலடித்தாற்போல் ‘அடிக்கடி வீட்டுக்கு வர்ற வேலையை வச்சுக்காதீங்க’ என்று சொல்லவும் வசுமதியால் முடியவில்லை.
அவளுடைய இயல்பே அப்படித்தான். அதோடு வீட்டு ஓனராச்சே எனப் பொறுமையைக் கடைப்பிடித்தாள்.
அன்று காலை செண்பகம் மாடி ஏறி வருவதைக் கவனித்த வசுமதி, இன்று இந்த பிரச்சினைக்கு எப்படியாவது ஒரு முடிவு கட்டியே தீருவது எனத் தீர்மானித்தவளாய்,
“வாங்கம்மா! வாங்க… எங்கே வராமல் போயிடுவீங்களோன்னு பயந்திட்டேன். நீங்க மேல வந்து, உங்களோட ஓரிரு வார்த்தைகளாவது பேசினால்தான் எங்களுக்கு ராசி.
அவருக்குப் பிரமோஷன் கிடைச்சிருக்கு. ஃப்ளாட் ஒண்ணு பாத்திருக்கோம். இன்று ரிஜிஸ்ட்ரேசன்.
உங்களைப் பார்த்துட்டுப் போனால் ராசியாயிருக்குமேன்னுதான் காத்துக்கிட்டிருந்தேன்’ என்றாள் சந்தோஷமாக.
செண்பகத்தின் மனதில் பொறாமைத்தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
“பால்காரர் வர்ற நேரமாச்சு. அவருக்குப் பணம் வேறக் கொடுக்கணும். மறந்தே போய்விட்டேன்.” என்று முணுமுணுத்தவாறு, வந்த வேகத்தில் மாடிப்படிகளில் இருந்து இறங்கிப் போகும் செண்பகத்தை புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டு நின்றாள் வசுமதி.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998