வழித்துணை – சிறுகதை

வழித்துணை சிறுகதை

மாறன் காதலைச் சொல்லி விட்டான்.

கவிதாவுக்கும் அவன்மீது கொஞ்சம் ஈர்ப்பு இருந்தது. இப்போது காதலை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்துவிட்டாள். ஆனாலும் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தாள்.

இதைத் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான், கவிதாவை ஒருதலையாகக் காதலிக்கும் கார்த்திக்.

அந்த ஒரு நொடியில் காலம் கார்த்திக்கையும் மாறனையும் பகைவர்களாக மாற்றிவிட்டது.

மாறனை வேலையை விட்டு அனுப்புவதற்குத் திட்டம் போட்டான், கார்த்திக்.

மேனேஜரிடம் மாறனை எப்படியெல்லாம் மாட்டிவிட முடியுமோ, அப்படியெல்லாம் மாட்டி விட்டான்.

மறுநாள் கம்பெனி நஷ்டத்தில் செல்வதாகவும் அதனால் ஆள் குறைப்பு நடத்த இருப்பதாகவும் எல்லோரிடமும் அறிவித்தார் மேனேஜர்.

அதனால் தனது துறையில் இருந்து மூன்று பேர்களை வெளியே அனுப்ப இருப்பதாகத் தெரிவித்தார். அந்த மூன்று பேர்களில் கடைசி ஆளாக, வெளியே அனுப்படுவோர் வரிசையில் சேர்ந்தான் மாறன்.

மேனேஜரிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான். அவர் மனம் இளகவே இல்லை. அடுத்த பத்தாவது நாளில் மாறனை வேலையை விட்டு அனுப்பினார்கள்.

நடந்தது எதுவுமே தெரியாமல் அப்பாவியாக அலைந்து கொண்டிருந்த மாறன் ‘ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது?’ என்று எல்லோரையும் போல் இறைவனிடம் கேள்வி கேட்டான்.

எப்போதும் போல் இறைவனும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார். இறைவனைத் திட்டிவிட்டு எப்போதும் வரும் சாலையில் அழுது கொண்டே வந்தான், மாறன்.

அன்று மழை பெய்து கொண்டிருந்தது.

அப்பொழுது சாலையைக் கடக்க முடியாமல் மழையில் நனைந்து குளிரில் நடுங்கிய நாய்க் குட்டியைப் பார்த்தான் மாறன்,

தன் வேலை போனது பற்றிக்கூடக் கவலைப்படாமல், அதைத் தூக்கிக் கொண்டு வந்து ஓர் இதமான இடத்தில் கிடத்தினான்.

பக்கத்து டீக்கடையில் பால் வாங்கி வந்து கீழே கிடந்த தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றி வைத்தான். அது சூட்டையும் பொருட்படுத்தாமல் ‘லபக் லபக்’ என்று குடித்தது.

அதன் ஏறி இறங்கிய வயிற்றைப் பார்த்து ‘இதுதானோ வாழ்க்கை’ என்று நினைத்துக் கொண்டான்.

நாயின் வயிற்றில் வெளியே தெரிந்த நெஞ்செலும்புகளின் எண்ணிக்கை மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியது. மனசு நிறைந்ததும் அங்கிருந்து தன் அறைக்குக் கிளம்பினான்.

அறையில் அவனுக்குத் தெரிந்த ஒரே உணவான நூடுல்ஸைச் சமைக்கத் தயாரானான். நூடுல்ஸைக் கிண்டி இறக்கி வைக்கும் போது, சுவிட்ச் போடாமல் சார்ஜில் போட்டிருந்த செல்போனில் மணி அடித்தது.

“ஹலோ…ஹலோ…”

“டேய்! மாறா… கேட்குதா.. மாரடைப்பு வந்து அம்மா இறந்துட்டாங்கடா, சீக்கிரமா ஊருக்கு வாடா.”

சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள், மாறனின் அத்தை.

சிறுவயதிலேயே அப்பாவை இழந்த மாறன், இப்பொழுது அம்மாவையும் இழந்த துக்கத்தில் அநாதையாய் நின்று கொண்டிருந்தான்.

அப்பா இறந்த பிறகு அம்மாதான் மாறனைச் சித்தாள் வேலைக்குச் சென்று படிக்க வைத்தாள்.

கல்லையும் மண்ணையும் சிமிண்ட் மூட்டையையும் தூக்கித் தூக்கி உடல் மெலிந்து தான் போயிருந்தாள், மாறனின் அம்மா.

ஏற்கெனவே இதற்கு முன் ஒரு முறை அட்டாக் வந்திருக்கிறது. ஆனால், அவள் இதை மாறனிடமிருந்து மறைத்து விட்டாள்.

சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற தன் அம்மாவின் கனவை நிறைவேற்றத்தான் சென்னை வந்திருந்தான்.

இப்பொழுது ஊருக்குச் செல்லக்கூட அவனிடம் காசு இல்லை. எத்தனை முறை போனடித்தும் நெருங்கிய நண்பர்கள் யாரும் எடுக்கவே இல்லை.

கம்பெனியில் தன்னுடன் வேலை பார்க்கும் நண்பனிடம் பணம் கேட்டான்.

“கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடிதான்டா அப்பாவோட அக்கவுண்டுக்கு அனுப்பிவிட்டேன். சாரிடா” என்றான்.

வேறு வழியில்லாமல் கவிதாவிடமே சென்று நடந்ததை எல்லாம் கூறி, பணத்தை வாங்கிக் கொண்டு சரியான நேரத்தில் ஊருக்குச் சென்றான்.

பச்சைத் தென்னை ஓலையில் அம்மாவைக் கிடத்தியிருந்தார்கள்.

நனைத்து வைத்திருந்த பச்சரிசியை இடது கையால் அம்மாவின் வாயில் போடச் சொன்னார்கள். சந்தனம் கொண்டு அம்மாவின் கண்களை மூடியிருந்தார்கள்.

‘அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது’ என்று நினைத்து அழுதான்… அழுதான்… அழுதுகொண்டே இருந்தான்…

உப்புப் போடாத சுண்டலை அவன் கையில் யாரோ கொடுத்தார்கள்… இருந்த பசியில் அதைச் சாப்பிட்டான்.

பதினாறாம் நாள் விசேஷம் முடிந்து, மீண்டும் வேலை தேடிச் சென்னைக்கே கிளம்பினான்.

சோகங்களுக்கிடையே நடந்த இண்டர்வியூவில் தட்டுத் தடுமாறி வெற்றி பெற்றான். இந்தச் செய்தியைக் கவிதாவிடம் தெரிவிக்க ஆவலாகச் சென்றான்.

ஆனால், அவளோ இவனைக் கண்டுகொள்ளாமல் கார்த்திக்கோடு பைக்கில் சென்றுகொண்டிருந்தாள்.

பத்துத் தடவைக்கு மேல் போன் அடித்தும் அவள் எடுக்கவே இல்லை. இனிமேல் என்ன செய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை.

வாழ்க்கையை ஒருமுறை திரும்பிப் பார்த்தான். கண்களை மூடினான். நடந்தவையெல்லாம் கண்முன்னே ஓடிக்கொண்டிருந்தன.

கிராமத்தில் அவன் வசித்த பழைய ஓலைக் குடிசையில் அம்மாவின் மடியில் படுத்துக் கிடந்த காட்சி கண் முன் விரிந்தது.

குடிசையிலிருந்து சொட்டுச் சொட்டாக மழைநீர் உள்ளேயும் வெளியேயும் வடிந்து கொண்டிருந்தது. கீழ் வைத்திருந்த பாத்திரத்தில் விழும் ஒவ்வொரு சொட்டுக்கும் “டக் டக்” சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

‘அடுத்து என்ன செய்யப் போகிறோம் ?’என்கிற கேள்வி மூளையை அரித்துக் கொண்டிருந்தது.

அவசர அவசரமாக வீட்டுக்கு வந்தவன், அறைக்குச் சென்று தாழ்ப்பாள் போட்டான். கடைசியாகத் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் அழுதான்.

திடீரென யாரோ கதவு தட்டும் சத்தம். அழுகையை நிறுத்தினான். கண்ணீரைத் துடைத்துவிட்டு, கதவைத் திறந்தான்.

தம்பி! “என்ன நெனச்சுட்டு இருக்கீங்க. தேதி பதினஞ்சு ஆகுது இன்னும் வாடக பணம் வந்து சேரல. இன்னும் ரெண்டு நாள்ல பணம் வந்து சேரணும். இல்லன்னா குடுத்த அட்வான்ஸ்ல இருந்து பணத்த கழிச்சுட்டு வீட்ட சீக்கிரமா காலி பண்ணுங்க” என்றார், ஹவுஸ் ஓனர்.

அவர் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிவிட்டு மீண்டும் கதவைச் சாத்திக் கொண்டான். அறையில் சீலிங் பேன் சுற்றிக்கொண்டே இருந்தது. அதைக் கவனித்துக் கொண்டே இருந்தான்.

அறையில் கயிறு எதுவுமே இல்லை. இரண்டு லுங்கிகளை முடிச்சுப்போட்டு ஒன்றாக்கினான்.

பின்பு நம்மால் நம் நண்பனுக்கு எதுவும் பிரச்சனை வந்து விடக் கூடாது என்று இந்த முடிவைக் கைவிட்டான். வெகு நேரம் யோசித்து இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான்.

வாழ்க்கை வெறுத்துப் போய் தற்கொலை செய்து கொள்ளலாமென சாலையோரம் நின்றான்.

மூன்றாவதாக வந்து கொண்டிருந்த பெரிய லாரியில் விழலாம் என்று பயத்தோடு ஓரடி முன்னே எடுத்து வைத்தான்.

யாரோ தன்னைத் தொடுவது போல் உணர்ந்து திரும்பினான்.

தனக்கென யாருமே இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கையில், பின்னால் இருந்து கால்களை நக்கியபடி வாலாட்டிக் கொண்டிருந்தது, அன்று குளிரில் நடுங்கிய நாய்க்குட்டி.

திசை சங்கர்

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.