வாயு – வளியின் குரல் 1

“அனைவருக்கும் வணக்கம். எல்லோரும் நலம் தானே? நீங்கள் நலமுடன் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களிடம் பேச விழைகிறேன்.

‘பேசுற‌து யாரு?’ என நீங்கள் திகைக்கிறீர்களா?

குழப்பமோ, திகைப்போ வேண்டாம். நான் தான் வாயு. ஆங்கிலத்தில் ′gas′ என அழைப்பீர்களே, அதுவே தான். எனக்கு ′வளிமம்′ என்ற மற்றொரு பெயரும் உண்டு.

கடந்த சில நாட்களாகவே, நான் உங்களிடம் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இதற்கு காரணங்கள் பல இருக்கின்றன.

சரி, நான் கூறப்போவதை கேட்பீர்களா?

நிச்சயம் நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று அன்போடும், உரிமையோடும் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

″எல்லாம் சரி, வாயுக்கள் பல இருக்கின்றனவே, நீ எந்த வாயு?″ என நீங்கள் எண்ணுவதை என்னால் உணர முடிகிறது.

நான் எந்த வாயுவாக இருந்தால் என்ன? ஆனால் ஒன்று மட்டும் உண்மை. ஒட்டுமொத்த வாயுக்களின் சார்பாக தான், நான் உங்களிடம் பேசுகிறேன் என்பதை மட்டும் இப்போது தெரிவித்துக் கொள்கிறேன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

எனும் திருகுறளின்படி, எனது பேச்சில் இருக்கும் உண்மையை நீங்கள் அறிவீர்கள் என்பதை நான் நம்புகிறேன். நீங்கள் தான் அறிவுடைய மனிதர்கள் ஆயிற்றே.

உங்களிடம் பல செய்திகளைப் பற்றி பேச வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கூற முடியுமா?. முடியாதே! அப்படியே நான் பேசினாலும் அவற்றை எல்லாம் கேட்க உங்களுக்கு நேரம் இருக்குமா? நிச்சயம் இருக்காது.

ஒரு உண்மையை ஒத்துக்கொள்கிறேன். முதல் முறையாக உங்களிடம் பேசுவதால் எனக்குள் சிறு தடுமாற்றம் இருக்கிறது.

எதை முதலில் பேசுவது? எவ்வளவு நேரம் பேசுவது? எனக்கு தெரியவில்லை. நான் ஒன்றும் பேச்சாளர் இல்லையே.

சரி, முதலில் என்னைப் பற்றி கூறட்டுமா?

மூன்று நிலைமைகளில் ஒன்று

நான் மூன்று நிலைமைகளில் ஒன்று. நிலைமை என்பது பொருட்களின் ஒரு அடிப்படை பண்பு தான்.

இந்த உலகில் இருக்கும் எல்லாப் பொருட்களும் திட நிலையிலோ, திரவ நிலையிலோ அல்லது வாயு நிலையிலோ இருக்கின்றன. அதில் மூன்றாவதாக சொன்னேனே, ஆம் அதே தான், அந்த வாயு நிலையில் தான் நான் இருக்கிறேன்.

இப்படியும் சொல்லலாம், எனது நிலைமையானது திரவ மற்றும் அயனிமம் நிலைகளுக்கு இடைப்பட்ட நிலையாகும்.

அயனிமம் என்பதை மின்மமாக்கப்பட்ட வளிம நிலை எனவும் கூறலாம். பூமியில், இத்தகைய நிலைமையை செயற்கை முறையில் மட்டுமே உருவாக்க முடியும்.

இருக்கட்டும், நீங்கள் ஏற்கனவே அறிந்தது போன்று வாயுக்கள் பல இருக்கின்றன.

சில வாயுக்கள் ஒற்றை அணுக்கருவால் ஆனவை. அவற்றை தனிம நிலையிலுள்ள வாயுக்கள் என்று அழைக்கலாம்.

தனிமநிலை வாயுக்களின் பெய‌ர்களை கேட்கிறீர்களா? சொல்கிறேன். ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், மற்றும் செனான் போன்றவற்றைச் சொல்லலாம்.

புரிதலுக்காக சொல்கிறேன். ஹீலியம் வாயுவின் குறியீடு ″He″. ஒரு கொள்கலனில் ஹீலியம் வாயுவை மட்டும் எடுத்துக் கொண்டால், அதில் எண்ணற்ற ஹீலியம் (He) அணுக்களே இருக்கும்.

ஆனால் சில வாயுக்கள் மூலக்கூறு நிலையிலும் இருக்கின்றன.

மூலக்கூறு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கூட்டாக சேர்ந்து நிலைப்புத்தன்மையுடன் இருக்கும். உதாரணத்திற்கு ஹைட்ரஜன் வாயுவை சொல்லலாம்.

ஹைட்ரஜன் வாயுவின் குறியீடு ″H″. ஆனால் ஹீலியத்தைப் போல ஹைட்ரஜன் வாயு அணுவாக இருப்பதில்லை. மாறாக, ″H2″ என்ற ஈரணுக்கரு மூலக்கூறு நிலையிலேயே இருக்கும். நைட்ரஜன் (N2), ஆக்சிஜன் (O2) மற்றும் குளோரின் (Cl2) போன்ற வாயுக்களும் ஈரணுக்கரு மூலக்கூறாகவே இருக்கின்றன.

மூவணு மூலக்கூறு வாயுவும் இருக்கிறது. எது தெரியுமா?

ஓசோன் தான். மூன்று ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்து ஓசோன் உருவாகிறது. எனினும் ஈரணு மூலக்கூறு ஆக்சிஜன் வாயுவைப் போல இது நிலைத்தன்மை கொண்டதல்ல.

எப்படி தனிம நிலையில் இருக்கும் வாயுக்கள் ‘தனிமநிலை வாயுக்கள்‘ என்று அழைக்கப்படுகின்றனவோ, அதேபோல் மூலக்கூறு நிலையில் இருக்கும் வாயுக்கள் ‘மூலக்கூறு வாயுக்கள்‘ என அழைக்கப்படுகின்றன.

வாயுக்களைத் தவிர்த்து, மற்ற நிலைமைகளில் இருக்கும் பொருட்களும், அதாவது திட மற்றும் திரவ நிலையில் இருக்கும் பொருட்களும் வெப்பநிலையைப் பொறுத்து வாயு நிலைக்கு வரலாம். அல்லது வாயுக்களை வெளியிடலாம்.

என்ன புரியவில்லையா?

திரவ நிலையில் இருக்கும் நீரை வெப்பப்படுத்தும் போது திரவ நீர், நீராவியாக அதாவது வாயு நிலைக்கு மாற்றம் அடைகிறது.

′நீராவி′ வாயு தான்.

திட நிலையில் இருக்கும் மரக்கட்டையை எரிக்கும் போது, அது வாயுக்களை வெளியிடும்.

அதாவது மரக்கட்டை கரிம சேர்மங்களால் ஆனவை. அது எரியும் போது, மரக்கட்டையில் இருக்கும் கரிமச் சேர்மங்கள் சிதைந்து கார்பன் டை ஆக்சைடு வாயுவாகவும், நீராவியாகவும் மற்ற பிற வாயுக்களாகவும் மாறுகின்றன.

ஆமாம், உங்களால் என்னைப் பார்க்க முடிகிறதா?

பார்க்க முடியாது

நான் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை தானே?

ஏன் தெரியுமா?

ஒளியும் உங்களது பார்வை திறனும் தான் காரணம். ஆம், பொதுவாக ஒரு பொருளை உங்களால் பார்க்க முடிகிறது என்றால், அதற்கு காரணம், சூரிய ஒளியில் இருக்கும் கண்ணுறு ஒளி அலைகள் பொருளின் மீது பட்டு பிரதிபலிக்க, அது பின்னர் உங்களது கண்களை அடைந்து பிம்பத்தை உண்டாக்குகிறது.

கண்ணுறு ஒளி அலைகள் என்பவை மழைக்காலத்தில் வானத்தில் தோன்றும் வானவில்லில் இருக்கும் ஏழு நிற ஒளிகளே.

ஹைட்ரஜன், ஆக்சிஜன் போன்ற வாயுக்கள் கண்ணுறு ஒளியினை பிரதிபலிப்பதில்லை. அதனால் தான் உங்களால் இந்த வாயுக்களை பார்க்க முடிவதில்லை.

எனினும் எல்லா வாயுக்களும் உங்கள் கண்களுக்கு தெரியாதவை அல்ல. ஆம், சில வாயுக்களை உங்களால் பார்க்க முடியும்.

எவை என்று யோசிக்கிறீர்களா?

நானே சொல்கிறேன்.

நைட்ரஜன் டை ஆக்சைடு பழுப்பு நிற ஆரஞ்சு நிறத்திலும், அயோடின் வாயு ஊதா நிறத்திலும், குளோரின் வாயு பச்சை நிறத்திலும் இருக்கும்.

நிறமுடைய பிற வாயுக்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவற்றை காணும்போது நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் தானே?

உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கும் மகிழ்ச்சி தான்.

அப்படியே, எனது குரலை கேட்டும் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் என்ற நம்பிக்கையில், உங்களுடன் தொடர்ந்து பேசுவேன்.

(குரல் ஒலிக்கும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.