வாழைக்காய் பொளிச்சது செய்வது எப்படி?

வாழைக்காய் பொளிச்சது அருமையான தொட்டுக்கறி ஆகும். இதனை சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் ஆகியவற்றுடன் இணைத்து உண்ணலாம்.

மீன் பொளிச்சது என்பது கேரளாவில் மிகவும் பிரபலமான உணவு. இப்பதிவில் மீனிற்குப் பதிலாக வாழைக்காயைப் பயன்படுத்தி வாழைக்காய் பொளிச்சது செய்யப்பட்டுள்ளது.

வாழையிலை மசாலா வாழைக்காய் என்றும் இதனைச் சொல்லாம். தேங்காய் எண்ணெய் மற்றும் வாழையிலைப் பயன்படுத்தி இது தயார் செய்யப்படுவதால் இதனுடைய சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.

விழாக்காலங்களிலும் விருந்தினர்களின் வருகையின் போதும் இதனைச் செய்து அசத்தலாம். சைவப் பிரியர்களுக்கான அருமையான மசாலா விருந்து இது என்றும் இதனைச் சொல்லலாம்.

இனி சுவையான வாழைக்காய் பொளிச்சது செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 3 எண்ணம் (மீடியம் சைஸ்)

தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

வாழையிலை – 1 எண்ணம்

வாழைக்காய் மீது தடவ தேவையான மசாலா செய்ய

கொத்தமல்லிப் பொடி – 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் வற்றல் பொடி – 3/4 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா பொடி – 1 ஸ்பூன்

மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மசாலா தயார் செய்ய

பெரிய வெங்காயம் – 2 எண்ணம் (பெரியது)

நாட்டுத் தக்காளி – 2 எண்ணம் (பெரியது)

இஞ்சி – 2 இன்ச் அளவு

வெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது)

மசாலா பொடி – 2 ஸ்பூன்

கரம் மசாலா பொடி – 1/2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – 2 கீற்று

தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி இலை – 1 கொத்து

வாழைக்காய் பொளிச்சது செய்முறை

வாழைக்காயைத் தோல் சீவிக் கொள்ளவும்.

பின்னர் 1/2 இன்ச் தடிமனுக்கு வாழைக்காயை நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போட்டுக் கொள்ளவும்.

நீளவாக்கில் நறுக்கிய வாழைக்காய்
நீளவாக்கில் நறுக்கிய வாழைக்காய்

சின்ன வாழைக்காய் எனில் மூன்று துண்டுகளாகவும், பெரிய வாழைக்காய் எனில் நான்கு துண்டுகளாகவும் வெட்டிக் கொள்ளலாம்.

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறிய சதுரத் துண்டுகளாக வெட்டவும்.

தக்காளியை அலசி சதுரத் துண்டுகளாக்கவும்.

கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலையை அலசி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

இஞ்சி மற்றும் வெள்ளைப்பூண்டினைச் சுத்தம் செய்து விழுதாக்கிக் கொள்ளவும்.

வாழைக்காய் மீது தடவத் தேவையான மசாலாப் பொருட்களான கொத்தமல்லிப் பொடி, மிளகாய் வற்றல் பொடி, மஞ்சள் பொடி மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றை ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதனை நெகிழ்வாக பிசைந்து கொள்ளவும்.

தேவையான மசாலாப் பொருட்களை எடுத்துக் கொண்டதும்
தேவையான மசாலாப் பொருட்களை எடுத்துக் கொண்டதும்
மசாலாப் பொருட்களை விழுதாக்கிக் கொண்டதும்
மசாலாப் பொருட்களை விழுதாக்கிக் கொண்டதும்

பிசைந்த மசாலா விழுதினை வாழைக்காய் முழுவதும் நன்கு தடவிக் கொள்ளவும்.

பின்னர் அதனை அரைமணி நேரம் ஊற விடவும்.

மசாலா தடவிய வாழைக்காய்
மசாலா தடவிய வாழைக்காய்

வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், அதில் ஊற வைத்த வாழைக்காய் துண்டுகளை படத்தில் உள்ளபடி ஒவ்வொன்றாகச் சேர்க்கவும்.

தேங்காய் எண்ணெயில் வாழைக்காயினைச் சேர்த்ததும்
தேங்காய் எண்ணெயில் வாழைக்காயினைச் சேர்த்ததும்

அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும்.

வாழைக்காய் துண்டுகள் சிவந்ததும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாழைக்காய் வெந்ததும்
வாழைக்காய் வெந்ததும்

மீண்டும் தேங்காய் எண்ணெயை சிறிதளவு சேர்த்து, மீதமுள்ள ஊறிய வாழைக்காய்த் துண்டுகளைச் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து கண்ணாடிப் பதம் வரும் வரை வதக்கவும்.

பெரிய வெங்காயத்தை வதக்கும் போது
பெரிய வெங்காயத்தை வதக்கும் போது

பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு விழுதினைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்ததும்
இஞ்சி பூண்டு விழுதினைச் சேர்த்ததும்

பின்னர் அதனுடன் நறுக்கிய தக்காளிச் சேர்த்து வதக்கவும்.

தக்காளியைச் சேர்த்ததும்
தக்காளியைச் சேர்த்ததும்

30 விநாடிகள் கழித்து அதில் மசாலா பொடி, கரம் மசாலா பொடி, உப்பு, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை ஆகியவற்றைச் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கி, அதில் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

கலவையானது விழுதாக வரும்வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.

பொடி வகைகளைச் சேர்த்ததும்
பொடி வகைகளைச் சேர்த்ததும்
தண்ணீர் சேர்த்ததும்
தண்ணீர் சேர்த்ததும்
விழுதாக்கியதும்
விழுதாக்கியதும்

அடுப்பினை சிம்மில் வைத்து வாழையிலையை லேசாக வாட்டிக் கொள்ளவும். இவ்வாறு செய்வதால் வாழையிலையினை மடிக்கும்போது கிழியாது.

வாட்டிய வாழையிலையை விரித்து, அதனுடைய மையத்தில் வதக்கிய விழுதினை 1 ஸ்பூன் அளவு எடுத்து விரித்துக் கொள்ளவும்.

அதன் மீது வதக்கிய வாழைக்காயினை மூன்றாகவோ ஐந்தாகவோ விரித்து அடுக்கிக் கொள்ளவும்.

மசாலா விழுதினை விரித்ததும்
மசாலா விழுதினை விரித்ததும்
வாழைக்காயினை அடுக்கியதும்
வாழைக்காயினை அடுக்கியதும்

மீண்டும் வாழைக்காய்கள் மீது வதக்கிய கலவையினை சிறிதளவு எடுத்து விரித்துப் பரப்பவும்.

மசாலா விழுதினைப் பரப்பியதும்
மசாலா விழுதினைப் பரப்பியதும்

மீண்டும் வாழைக்காய்களை அதன்மீது விரித்து அடுக்கிக் கொள்ளவும். பின்னர் அதன்மீது கலவையை விரித்துக் கொள்ளவும்.

இலையினை ஒன்றுபோல் சேர்த்து பொட்டலமாக மடித்துக் கொள்ளவும். வாழையிலை பொட்டலத்தை நூலினையோ, வாழை நாரினையோ கொண்டு கட்டிக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் மடித்த பொட்டலத்தைச் சேர்க்கவும்.

வாழையிலைச் சுற்றிலும் இரண்டு கையளவுக்கு தண்ணீரைச் சேர்க்கவும். அடுப்பினை சிம்மில் வைத்து மூடி வைக்கவும்.

வாழையிலை பொட்டலத்துடன் தண்ணீர் சேர்த்து மூடத் தயார் நிலையில்
வாழையிலை பொட்டலத்துடன் தண்ணீர் சேர்த்து மூடத் தயார் நிலையில்

நான்கு நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து வாழையிலையினைத் திருப்பிப் போட்டு, மூடி போட்டு தண்ணீர் தெளித்து நான்கு நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

திருப்பிப்போட்டு வேகவிடும் போது
திருப்பிப்போட்டு வேகவிடும் போது

வாழையிலையினை ஒரு தட்டில் வைத்து நூலினைப் பிரித்து விரிக்கவும்.

சுவையான வாழைக்காய் பொளிச்சது தயார்.

சுவையான வாழைக்காய் பொளிச்சது
சுவையான வாழைக்காய் பொளிச்சது

குறிப்பு

வாழையிலையைத் தேர்வு செய்யும்போது மிகவும் இளம் இலையாகவோ, முதிர்ந்த இலையாகவோ இருக்கும்படி தேர்வு செய்யக் கூடாது. இளம் மஞ்சள் கலந்த பச்சை இலையைத் தேர்வு செய்யவும்.

ஜான்சிராணி வேலாயுதம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.