வெஜ் கெட்டி சால்னா அசத்தலான தொட்டுக்கறி ஆகும். ஹோட்டல் ஸ்டைலில் வெஜ் கெட்டி சால்னா செய்யும் முறை பற்றி இப்பதிவில் விளக்கியுள்ளேன்.
நீங்களும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள முறையைப் பயன்படுத்தி வெஜ் கெட்டி சால்னாவை வீட்டில் செய்து அசத்துங்கள். இதனைச் செய்வதும் எளிதுதான்.
வெங்காயம், தக்காளி வைத்து இச்சால்னா தயார் செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இச்சால்னாவில் காய்கறியோ இறைச்சியோ சேர்த்து தயார் செய்யலாம்.
இச்சால்னா இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா என எல்லாவற்றிற்கும் பொருத்தமானதாக இருக்கும். சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை விரும்பி உண்பர்.
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – 2 எண்ணம் (பெரியது)
தக்காளி – 2 எண்ணம் (நடுத்தர அளவு)
இஞ்சி – சுண்டுவிரல் அளவு
வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (பெரியது)
கொத்தமல்லி இலை – பாதி கைபிடி அளவு (பொடியாக நறுக்கியது)
புதினா இலை – பாதி கைபிடி அளவு (பொடியாக நறுக்கியது)
மசாலா பொடி – 2 டீஸ்பூன்
கரம் மசாலா பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மசாலா தயார் செய்ய
தேங்காய் துருவல் – 3 டேபிள் ஸ்பூன்
பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 6 எண்ணம் (நடுத்தர அளவு கொண்டது)
கசகசா – 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு – 5 எண்ணம்
தாளிக்க
நல்ல எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1 எண்ணம் (1 இன்ச் அளவுடையது)
கிராம்பு – 3 எண்ணம்
ஏலக்காய் – 2 எண்ணம்
பிரின்ஞ் இலை – 1 எண்ணம் (பெரியது)
செய்முறை
பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
தக்காளியை அலசி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
இஞ்சி மற்றும் பூண்டினைத் தோல் நீக்கி இரண்டையும் சேர்த்து விழுதாக்கிக் கொள்ளவும்.
கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலையை அலசி பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
கசகசா மற்றும் முந்திரிப்பருப்புடன் மூழ்குமளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்கு கொதித்ததும் ஆறவிடவும்.
மிக்ஸியில் தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், பெருஞ்சீரகம், கொதித்து ஆற வைத்த கசகசா, முந்திரி மற்றும் அதனுடைய தண்ணீர் சேர்த்து விழுதாக்கிக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்ததும் அதில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, பிரின்ஞ் இலை சேர்த்து தாளிதம் செய்யவும்.
அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் உப்பினைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடிப் பதம் வந்ததும் இஞ்சி, பூண்டு விழுதினைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
தக்காளி பாதி வெந்ததும் அதனுடன் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து வதக்கவும்.
ஒருநிமிடம் கழித்து அதனுடன் மசாலா பொடி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பின்னர் அதில் அரைத்த மசாலா விழுது சேர்த்து வதக்கவும் அரைநிமிடம் கழித்து அதனுடன் கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கவும்.
30 விநாடிகள் கழித்து அதில் 2 டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து ஒருசேரக் கிளறி குக்கரை மூடி விடவும். ஒருவிசில் வந்ததும் குக்கரை அணைத்துவிட்டு குக்கரின் ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து நன்கு கலந்து விடவும்.
சுவையான வெஜ் கெட்டி சால்னா தயார்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் மசாலா பொடிக்குப் பதிலாக தனியாத் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், மஞ்சள் பொடி சேர்த்து சால்னா தயார் செய்யலாம்.
மறுமொழி இடவும்