ஹோட்டல் தக்காளி சட்னி அசத்தலான சுவையில் இருக்கும் சட்னி வகையாகும். இதற்கு முந்தைய பதிவில் தக்காளி சட்னி செய்முறை பற்றி விளக்கியுள்ளேன்.
இப்பதிவில் சில செய்முறைகளை மாற்றி தக்காளி சட்னி செய்துள்ளேன். நீங்களும் சமைத்து ருசியுங்கள்.
இந்த சட்னி செய்வதற்கு நல்ல பழுத்த தக்காளிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
தக்காளி லேசாக மசியத் துவங்கியதும் இறக்கி விட வேண்டும். இவை இரண்டும்தான் இச்சட்னியின் சுவையை அதிகரிக்கச் செய்யும்.
இனி சுவையான ஹோட்டல் தக்காளி சட்னி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தக்காளி – 200 கிராம்
நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 4 எண்ணம்
இஞ்சி – 2 இன்ச் அளவு
வெள்ளைப்பூண்டு – 3 பற்கள் (பெரியது)
சின்ன வெங்காயம் – 12 எண்ணம்
கறிவேப்பிலை – 2 கீற்று
நாட்டுச் சர்க்கரை – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
நல்ல எண்ணெய் – 2 ஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கீற்று
மிளகாய் வற்றல் – 1 எண்ணம்
பெருங்காயம் – 1 சிட்டிகை
ஹோட்டல் தக்காளி சட்னி செய்முறை
தக்காளியை அலசி சதுரத் துண்டுகளாக வெட்டவும்.
மிளகாய் வற்றலை காம்பு நீக்கி அலசிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிக் கொள்ளவும்.
இஞ்சி மற்றும் வெள்ளைப்பூண்டினை தோல் நீக்கி வெட்டிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடலைப் பருப்பினைச் சேர்க்கவும்.

பருப்பு சிவந்ததும் அதில் மிளகாய் வற்றல், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர் அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.



வெங்காயம் நிறம் மாறியதும் அதில் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
அதனுடன் தேவையான உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.


தக்காளி தண்ணீர் விட்டு மசிய ஆரம்பிக்கும் போது அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
பின்னர் அதனை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்.


வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், அதில் சீரகம், கடுகு, கறிவேப்பிலை மற்றும்மிளகாய் வற்றல் சேர்க்கவும்.
கடுகு பொரிந்ததும் அதில் பெருங்காயப் பொடி சேர்க்கவும்.

பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதினைச் சேர்க்கவும்.
மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அலசி அதனை வாணலியில் ஊற்றவும்.

அடுப்பினை சிம்மிற்கும் சற்று அதிகமாக வைக்கவும்.
தக்காளி விழுது நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்ததும், அதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து 30 விநாடிகள் கழித்து அடுப்பினை அணைத்து விடவும்.
சுவையான ஹோட்டல் தக்காளி சட்னி தயார்.


இந்த தக்காளி சட்னியை இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் இடியாப்பம் போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ளலாம்.
குறிப்பு
விருப்பமுள்ளவர்கள் நாட்டுத் தக்காளியைக் கொண்டும் இச்சட்னியைத் தயார் செய்யலாம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!