அக்மார்க் – கதை

இரண்டு நாட்களாகவே வேதவல்லிக்கும் திருமூர்த்திக்கும் வாக்குவாதம் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது.

தங்களது ஒரே பெண் சங்கரியைத் தன் தங்கை பையன் ரகுவுக்குத்தான் கட்டி வைக்க வேண்டும் என திருமூர்த்தி பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டிருக்க, வேதவல்லியோ, முடியவே முடியாது, செந்தில்நாதனுக்குத்தான் கொடுக்க வேண்டும்! என உறுதிபடக் கூறிக் கொண்டிருந்தாள்.

செந்தில்நாதன் வேதவல்லியின் அண்ணன் மகன். சங்கரிக்கு இவர்களின் வாக்குவாதங்களைக் கேட்டுக் கேட்டு வெறுப்பே வந்துவிட்டது.

வாழப்போவது அவள். அவளது விருப்பு, வெறுப்பு பற்றியெல்லாம் ஒரு வார்த்தைகூட கேட்காமல் இவர்களுக்குள்ளேயே கங்கணம் கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கிறார்கள்.

ரகு அத்தை மகன். செந்தில் நாதன் தாய்மாமன் மகன். கையில் வெண்ணையைக் கிலோக் கணக்கில் வைத்துக் கொண்டு நெய்க்கு அலைய இருவருக்குமே விருப்பமில்லை.

ஆனால், எந்த வெண்ணெய் அக்மார்க் ரகம் என்பதில்தான் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தகராறு நடந்து கொண்டிருக்கிறது.

“பட்டம் வாங்கியும் நாலு வருஷமாய் வேலை, வெட்டி இல்லாமல் ஊரைச் சுத்திக்கிட்டிருந்தான் உங்க தங்கச்சி மகன். கடைசியில் ஒருவழியாய் அவனுக்கு வேலை இப்போதாவது கிடைச்சுதேன்னு சந்தோஷப்பட்டேன்.

கிடைச்சிருக்கிற வேலையைப் பற்றித் தெரிந்ததும்தான் சங்கரிக்கு அவன் லாயக்கில்லைன்னு முடிவு செஞ்ஞேன்” என்றாள் வேதவவ்லி.

“உன்னோட அண்ணன் மகன் மட்டும் என்னவாம்? பெரிய ஆபீசரா? அவனும்தான் இன்னும் ஊர் சுத்திகிட்டுத் திரியறான். என் தங்கச்சி பையனாவது பட்டம் வாங்கியிருக்கான். உன் அண்ணன் மகன் பள்ளிப் படிப்போடு சரி. ரகுவுக்கு சூப்பர்வைசர் வேலை கிடைச்சிருக்குடி. சங்கரியைக் கொடுக்க கசக்குதா உனக்கு?” என்று பதிலடி தந்தார் திருமூர்த்தி.

“இதப் பாருங்க. செந்தில்நாதன் இப்படியே இருந்திடப் போறதில்லை. சங்கரியைக் கட்டிக்கிட்ட அதிர்ஷ்டத்துல அவனுக்கும் நிச்சயமாய் ஒருவேலை கிடைக்கும். உங்க தங்கச்சி பையனைக் பற்றிப் பீத்திக்காதிங்க.

அரசு ஒயின்ஷாப் சூப்பர்வைசருக்கு என் பெண்ணை கண்டிப்பாய் கட்டிக் கொடுக்க மாட்டேன்.”

வேதவல்லிக்கும் திருமூர்த்திக்கும் இரண்டு நாட்களாய் நடந்து கொண்டிருந்த காரசாரமான விவாதத்தில் திருமூர்த்தியின் வாதம் எடுபடவில்லை.

வேதவல்லி தனது முடிவில் எவ்வித மாற்றமுமில்லை என ஒற்றைக் காலில் நிற்கவே, அரை மனதுடன் அடங்கிப் போனார் திருமூர்த்தி.

ஒரு மாதம் கடந்தது. ஒரு நாள் மாலை திருமூர்த்தியின் செல்போன் சிணுங்கியது.

எடுத்துப் பேசியதும் திருமூர்த்திக்கு உடம்பில் யானை பலம் வந்த ஓர் உணர்வு ஏற்பட்டது. நேராக வேதவல்லியிடம் சென்றார்.

“ஏய், என்ன சொன்னே? ஒயின்ஷாப் சூப்பர்வைசருக்கு சங்கரியைக் கட்டிக் கொடுக்க மாட்டியா? உன் அண்ணன் மகன்தான் இப்போ பேசினான்.

அரசு ஒயின்ஷாப்பில் ஊத்திக் கொடுக்கிற வேலை கிடைச்சிருக்காம். அதாண்டி, சேல்ஸ்மேன் வேலை. இப்போ என்ன சொல்றே? சேல்ஸ்மேனா, சூப்பர்வைசரா? நீயே முடிவு செஞ்சுக்கோ” என்றார்.

அப்பா மீண்டும் கத்த ஆரம்பித்ததும், சங்கரிக்கு எரிச்சலும் கோபமும் வர, அறையிலிருந்து வெளியே வந்து நேராக பெற்றோரிடம் சென்றாள். படபடவென பொரிந்து தள்ள ஆரம்பித்தாள்.

“தயவுசெய்து உங்க தகராறை நிறுத்தறீங்களா?

நான் ஒருத்தி இருக்கேன் என்பதையே மறந்திட்டு நீங்களே முடிவுவெடுத்துக்கிட்டிருந்தா எப்படி?

இப்போ சொல்றேன் கேட்டுக்குங்க. எனக்கு சூப்பர்வைசரும் வேண்டாம்; சேல்ஸ்மேனும் வேண்டாம்” என்றாள்.

“ஏன்…ஏன்…” என்று ஒரே குரலில் பதறியடித்துக் கொண்டு கேட்டனர் வேதவல்லியும் திருமூர்த்தியும்.

“ரகு அத்தான் பட்டதாரியாக இருந்தும் நாலு வருஷமாய், வேலை வேலைன்னு அலைஞ்சுக்கிட்டுப் பொழுதைப் போக்கிக்கிட்டிருக்காரு.

மூளைக்கு வேலை கொடுக்காமல், உடலை அலட்டிக்காமல், உழைப்பே இல்லாமல் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டாரு. அவர் விருப்பம் போல் இப்போ ஒயின்ஷாப்பில் வேலை கிடைச்சிருக்கு.

செந்தில் அத்தானும் அதே மாதிரிதான். வெறும் பணமும், சொகுசும், சுகமும் மட்டுமே அவர்களது குறிக்கோள்” என்று சகட்டுமேனிக்கு விளாசினாள் சங்கரி.

“அதனாலென்ன இந்த உத்யோகத்துக்கு என்ன குறைச்சல். அரசாங்க உத்தியோகமாச்சே…” என்றார் அப்பா.

“எது ஊத்திக் குடுக்கிறதா..?

‘தேனடையில கைவச்சவன் தேன நக்காமல இருப்பான்’ என்பது என்ன நிச்சயம்?” என்றாள் சங்கரி.

“கௌரமான தொழில் எத்தனையோ இருக்கு. பேங்குல கடன் வாங்கி சுயமாய் தொழில் துவங்கியிருக்கலாம். அதனை விட்டு உடம்பு நோகாமல் பணம் பார்க்கத்தான் ரெண்டு பேருமே விரும்புதாங்க. இவங்களை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைக்க துளிகூட விருப்பமில்லை…”

“அப்படின்னா நீ யாரையாவது விரும்பறீயா..?”

“ஆமா விரும்புறேன்..”

“என்னடி சொல்றே…” பதறினர் இருவரும்.

“கடின உழைப்பு, முயற்சி, சுயமாய் சிந்தித்துச் செயலாற்றுதல், திறன், நேர்மை, நாணயம், சுயமரியாதை, கௌரவம், தன்னார்வம் கொண்ட ஆளைப் பாருங்க. அவரை விரும்புறேன். ஏன்னா.. அவர்தான் அக்மார்க் ரகம். அவர் எந்த ஜாதியானாலும் பரவாயில்லை; கழுத்தை நீட்டறேன்” என்று சொல்லிவிட்டு ‘விர்’றென்று அறைக்குள் சென்ற கதவைச் சாத்திக் கொண்டாள் சங்கரி.

பேச நா எழாமல் வேதவல்லியும் திருமூர்த்தியும் வாயடைத்துப் போய் நின்றனர்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.