காணாமல் போகும் தத்துவங்களும் கானல் நீரான தத்துவவாதிகளும் – 5

நம் வாழ்க்கைப் பயணம் எப்படி இருக்கிறது?

தடம் மாறும் வாழ்க்கை பயணம்

ஒருநாளில் நாம் எத்தனை நபர்களிடம் பழகுகிறோம் என்று யோசித்துப் பாருங்கள்.

அம்மா, அப்பா, அண்ணன், தங்கை என குடும்ப உறவுகள்.

பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் இடங்களில் உள்ள நண்பர்கள் என கூட்டிக் கழித்து பார்த்தால் மனம் விட்டு பேசும் உறவுகள் 30 நபர்களுக்கு மேல் தாண்டாது.

அந்த 30 நபர்களில் உங்களை மனமுவந்து நூற்றுக்கு நூறு போற்றும் உறவுகள் எத்தனை பேர் என்று கேட்டால் என்ன பதில் கிடைக்கும்?

நாம் மனதார பழகும் நல்ல உறவுகளிடம் இவன் சிறந்தவன், நல்லவன் என்ற நல்ல பெயர் எடுக்க முடியவில்லை எனில், அவர்களின் உள்ளங்களில் நமது உயர்ந்த மதிப்பீட்டை நம்மால் ஏற்படுத்த முடியாமல் வாழும் வாழ்க்கைக்கு பெயர் என்ன?

தீர்வுகள் தந்த வாழ்க்கை கலை

தற்போது 40 வயதை எட்டியவர்கள், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை ‘மரக்கட்டை பேனாவை’ பயன்படுத்தி இருக்க வாய்ப்புகள் அதிகம்.

பேனாவில் மை கசியும்போது மை குடுவை, பேனா நாக்கட்டைக்கு இடையில் துணி, சோப்பு போட்டு தேய்த்தால் அல்லது அதற்கு இடையில் நூல் கட்டினால் அந்த பேனாவில் மை கசியாது.

ஒரு பிரச்சனை என்று வரும்போது அதை தூக்கி எறிந்து விடாமல், உதாசீனப்படுத்தி விடாமல் அதை எப்படி சமாளித்து சரி செய்வது என்ற வாழ்க்கை கலையை பேனாவின் மூலம் சொல்லிக் கொடுத்த கால சூழலும், இன்றைய Use and Throw கால நிலையும் நம்மை எப்படி? எவ்வளவு? மாற்றி இருக்கிறது என்பது யோசித்துப் பார்க்கிறோம்.

இது போன்று ஒவ்வொரு செயல்பாடுகளிலும் வாழுகின்ற வாழ்க்கையை கலையாகக் கற்றுக் கொடுத்தவர்கள் நமது முன்னோர்கள்.

ஆனால் நமது பாரம்பரியமும் கலாச்சாரமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் கடந்த நான்கு வாரங்களாக நீங்கள் படிக்கும் இந்த கட்டுரை.

என்ன செய்ய போகிறோம்?

பணம் சேர்ப்பதை மட்டுமே வாழ்வின் இலக்காக கொண்டு பயணிக்கும் வளரும் தலைமுறையினருக்கு, உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், அதன் அவசியம் அனைத்தையும் எடுத்துக்கூற வேண்டும்.

பழைய நடைமுறைகளை கழிக்காமல் அவைகளை நிலைக்க செய்து, அவற்றின் மேல் புதிய நடைமுறைகளை தொடர்வதற்குமான ஏற்பாடுகளை காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும்.

இவை அனைத்தும் ஒவ்வொரு இல்லங்களில் இருந்தும் துவங்கப்பட வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாய் காணாமல் போகின்ற தத்துவங்களையும் கானல் நீராக மாறிக் கொண்டிருக்கும் தத்துவவாதிகளையும் நாம் மீட்டெடுத்து நிலைநிறுத்தி, நமது தமிழர் மாண்புகளையும் மரபுகளையும் வாழ்க்கை கலையையும் உலகிற்கு உரத்து சொல்ல, அடுத்தடுத்த தலைமுறைகளை தயார்படுத்த வேண்டிய சூழலும் நிர்பந்தமும் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

References


• Chinnadurai, Asha Priyanka et.al (2018), Situation Analysis of Water Resources in Tamil Nadu, International Journal of Agriculture Sciences ISSN: 0975-3710 & E-ISSN: 0975-9107, Volume 10, Issue 18, 2018, pp.-7163-7167.

• Natarajan P.M., Ponnavaiko. M et.al (2017), Sustainable Water Resources Development in Tamil Nadu, India - Through Water Security Pathways, XVI World Water Congress, International Water Resource Association (IWRA), Mexico 

• Saravanan.T (2015), The History of water management, Metro Plus, The Hindu News Paper, 2015

• Shankar, Ramachandran (2013), Water Resource Mismanagement in Tamil Nadu and Its Impacts on Farmers, Indian Journal of applied research, Volume : 3 | Issue : 12 | Dec 2013 | ISSN - 2249-555X

• Sundarjan, Poovulagin Nanbargal

• Theresa W. Devasahayam, When we eat what we eat: Classifying Crispy Foods in Malaysian Tamil Cuisine, 2003

• Upinder Singh (2008),  A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century, Pearson Education India. pp. 27–28. ISBN 978-81-317-1120-0

• https://ta.quora.com/tamilarkalin-mulumaiyaka-marakkappatta-parampariya-unavu-vakaikal-evai-avarrai-tayarikkum-murai-terintal-kuravum

• தட்சிணாமூர்த்தி. அ, (1994). தமிழர் நாகரிகமும் பண்பாடும், சென்னை: ஐந்திணைப் பதிப்பகம்.

• கணேசலிங்கன், செ., 2001. நவீனத்துவமும் தமிழகமும். பக் 36,சென்னை: குமரன் பதிப்பகம்

• சாமிநாதையர், உ. வே., 1991, நல்லுரைக்கோவை 2ம் பாகம், 6 ஆம் பதிப்பு,  பக் 84, சென்னை

• மாத்தளை சோமு. (2005). வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். திருச்சி: தமிழ்க்குரல் பதிப்பகம். பக்கம் 70..

முனைவர் மு. பக்கீர் இஸ்மாயில்
இணை பேராசிரியர், பொருளாதார துறை
புதுக்கல்லூரி, சென்னை – 600 014
கைபேசி: +91 96000 94408

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.