1 நன்றிக்கு 2 மன்னிக்கவும்

“குட் மார்னிங் மிஸ்டர் மூர்த்தி சார்! என்ன ஒரு வாரமா வாக்கிங் வரல. மகள பாக்க பெங்களூர் போனீங்களா?”

“வெரி குட் மார்னிங் செந்தில் சார்! வீட்டுக்கார அம்மாக்கு லோ பிபி ஆயிடுச்சு. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி நேத்து தான் வீட்டுக்கு வந்தோம்”

“அடடா! இப்ப எப்படி இருக்காங்க மூர்த்தி சார்?”

“ம்..ம்.. இப்ப கொஞ்சம் பரவாயில்லை. ஆனா மனைவி தான் ரொம்ப பயந்துட்டா. இப்பகூட டாக்டர் அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாரு.

இவளோட பிடிவாதம்தான். பார்த்து கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க அப்படின்னு அனுப்புனாரு.

வீட்டுல சும்மா ஏதாவது வேலை செஞ்சுகிட்டு என்ன திட்டிக்கிட்டு நேரத்தை ஓட்டிடுவோம்.

அந்த ஆஸ்பத்திரி வாடை, சாப்பாடு, மருந்து எதுவும் செட் ஆகல. வேற வழியில்லாமல் டாக்டர்கிட்ட கெஞ்சி கூத்தாடி டிஸ்சார்ஜ் ஆகிட்டா செந்தில் சார்”

“ஒரு அவசரத்துக்கு உதவ அக்கம் பக்கத்தில் காண்டாக்ட் வச்சுக்கோங்க சார். ஆம்மா, நீங்க அந்த அப்பார்ட்மெண்டில் மூணாவது ப்ளோர் தானே இருக்கீங்க..!”

“ஆமா செந்தில் சார், அப்பப்ப லிப்ட் ஒர்க் ஆகலனா ரொம்ப கஷ்டம்”

“பெரிய பையன் இப்போ சிட்னிலயா இருக்கான்?”

“ஆமா சார். இப்பகூட அவனுக்கு ப்ரோமோஷன் கிடைத்தது. வீடு வாசல் கார்னு நல்லா செட்டில் ஆயிட்டான். பொண்ண பெங்களூரில் கட்டிக் கொடுத்தோம். இரண்டு குழந்தைங்க.

வேலைக்கு போறதால எங்க கூட பேசவே நேரமில்லை. மகன் எப்பவாச்சும் நைட் 11, 12 மணிக்கு போன் பண்ணுவான்.

மாசமான தவறாமல் செலவுக்கு மட்டும் பணம் கொடுத்துடறான். இப்ப கூட ஹாஸ்பிடல் செலவு அவன் தான் ஆன்லைன்ல போட்டு விட்டான். அப்படியே லைப் போது சார்”

(மூர்த்தி செல்போன் அடிக்கிறது)

“என்ன அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேன் கூப்பிடுறாரு”

“ஹலோ மணி! என்னப்பா நியூஸ் பேப்பர் வந்திருச்சா..?”

“ஐயா நியூஸ் பேப்பர், பால் பாக்கெட், காய்கறி எல்லாத்தையும் அம்மாகிட்ட கொடுக்க காலிங் பெல் அடிச்சேன். அவங்க வரல அதான் போன் பண்ணேன்”

“ஒன்னும் பிரச்சனை இல்ல. பூந்தொட்டி பின்னாடி சாவி இருக்கும் திறந்து உள்ள போ. டைனிங் டேபிள்ல எல்லாத்தையும் வச்சிருப்பா. மாத்திரை போட்டதால நல்லா தூங்கிக்கிட்டு இருக்கா போல. பூட்டி சாவியை மறுபடியும் பூந்தொட்டி பின்னால் வைத்திருப்பா”

“சரிங்கய்யா.!”

“என்ன மூர்த்தி சார் இப்படி டக்குனு சாவி இருக்கிற இடத்தை சொல்லிட்டீங்க. இது கொஞ்சம் டேஞ்சர். வயசான ரெண்டு பேர் தான் வீட்டுல இருக்கீங்க மறந்துடாதீங்க”

“சேச்ச, மணி அந்த மாதிரி ஆள் கிடையாது சார். நீங்க சொன்னீங்களே அவசரத்துக்கு உதவ அக்கம் பக்க வீட்டில் உள்ள காண்டாக்ட் வச்சுக்கோங்கன்னு இவர் ஒருத்தர் போதும்.

நான் பெத்த ரெண்டு பிள்ளைகளும் கூட இல்ல. வசதி வாய்ப்போட நல்ல இருக்காங்க. காசுக்கு குறைவில்லை. ஆனா ஆத்திர அவசரத்துக்கு உதவ வாட்ச்மேன் தான் இருக்கார்.

போன வாரம் திடீர்னு மயங்கி கீழே விழுந்த போது தனி ஆள இருந்து ரொம்ப சிரமப்பட்டேன். பக்கத்து வீடு, எதிர் வீடு அப்படின்னு கதவை தட்டினாலும் ஒருத்தரும் இல்லை.

எல்லோரும் வேலைக்கு போயிட்டாங்க போல. அப்புறம் வாட்ச்மேன் மணிக்கு தான் போன் அடிச்சேன். வந்து உதவினார். பொன்னையும் பையனையும் நல்லா படிக்க வச்சு நல்ல ஆளாக்கி விட்டப்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

இப்போ கஷ்டப்படும் போது ஏதோ பெரிய ரெண்டு தப்பு பண்ணிட்டோமோ அப்படின்னு தோணுது சார். ஆனாலும் என் மனைவி கிட்ட சொன்னா அவ புள்ளைங்கள திட்டலைன்னா தூக்கம் வராதேன்னு என்னை திட்டுவா..!

எனக்கு முன்கோபம் ஜாஸ்தி வரும். கல்யாணமான புதுசுல, அவ அடி வாங்காத நாளே கிடையாது. இத்தனைக்கும் பெரிய கூட்டுக் குடும்பம்.

எவ்வளவு பொறுமை எவ்வளவு சகிப்புத்தன்மை தெரியுமா சார். இதெல்லாம் ரிட்டையர்டு ஆனதுக்கு அப்புறம்தான் எனக்கே தெரிய ஆரம்பிச்சது.

அறுபதாவது கல்யாணத்தை பண்ணும் போது அவகிட்ட பேசாம நீ எனக்கு தாலி கட்டு கொஞ்ச நாள் நான் உனக்கு பொண்டாட்டி பாக்குற வேலைய பாக்கறேன் அப்படின்னு சொன்னேன்.

அவளும் சுத்தி நின்னவர்களும் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. இப்ப நினைச்சாலும் எனக்கும் சிரிப்பு வருது. அவ சிரிச்சுக்கிட்டே நீங்க சொன்னதே போதும் அப்படின்னா..!

பெத்த கடன் மாதிரி பொண்டாட்டி கடன் அடைக்கிறதும் ரொம்ப கஷ்டம் சார்.

ஏன் செந்தில் சார் உங்க மனைவி இறந்து ஒரு வருஷம் மேல் ஆகியிருக்கும்ல, நீங்க எப்படி பொண்டாட்டி கடனை அடைச்சிங்கன்னு கொஞ்சம் சொன்னா நானும் அதை அப்படியே ஃபாலோ பண்ணுவேன் சார்.!”

சின்ன புன்னகையுடன் உடன் செந்தில், “அவ உயிரோடு இருக்கிற வரைக்கும் படாதபாடு படுத்தினேன். இப்ப அவ இல்ல, ஆனா டெய்லியும் அவ போட்டோக்கு முன்னாடி தேங்க்யூவ சின்ன ஸ்மைல் ஓட சொல்லிட்டு இருக்கேன்.

நம்மள சகிச்சுக்கிட்டு, நம்ம குழந்தைகளை கவனிச்சு, அவங்க உடம்ப பத்தி கவலைப்படாமல், நம்ம சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி அவங்களையும் மாத்திட்டு, வாழ்நாளில் ஒருநாள் கூட லீவ் எடுக்காம நூறு சதவீதம் ஆத்ம திருப்தியோட ஒரு ஜீவன் இருக்குன்னா, அது பொண்டாட்டி மட்டும்தான்.

அவங்க அன்பு கடனை அடைக்க முடியாது. ஆனா நன்றி அப்படின்ற ஒரு வார்த்தை மட்டும் தினமும் சொல்லலாம் சார் தப்பில்லை.”

(மீண்டும் மூர்த்தியின் செல்போன் சிணுங்கியது)

“ம்..ம்.. சொல்லு மணி, ஐயா கதவ திறந்து உள்ள போனேன். உங்க பெட்ரூம், டாய்லெட் தண்ணி ஊத்துற சத்தம் கேட்டுச்சு. சரி அம்மா தான் முழிச்சி இருக்காங்க. அவங்ககிட்டயே கொடுத்துடலாம்னு நானும் கூப்பிட்டு பார்த்தேன். ஆனா அவங்க பதில் கொடுக்க மாட்டேங்கிறாங்க ஐயா”

“மணி பெட்ரூம் கதவு திறந்து தான் இருக்கு. பரவால்ல நீ உள்ள போயி டாய்லெட் கதவை தட்டு. நான் வந்துகிட்டே இருக்கேன்…!”

கதி. பழனியப்பன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.