அடிமாடு – சிறுகதை

அடிமாடு - சிறுகதை

இயற்கை எழிலுடன் கூடிய அழகிய புறா கிராமம்.

அந்தக் கிராமத்தில் நான்கு தெருக்கள் தான். அந்தத் தெருக்களில் ஒன்று பள்ளிவாசல் தெரு.

பள்ளிவாசல் தெருவில் ஒரு ஓட்டு வீட்டின் வாசலில் போடப்பட்டு இருந்த கட்டிலில் ஓர் வயதான பெரியவர் உட்கார்ந்து இருந்தார்.

அப்போது உள்ளிருந்து மருமகள் ஆயிஷா காபி டம்ளருடன் வந்தாள்.

“இந்தாங்க மாமா காபி குடிங்க.”

காபியை வாங்கி வாயருகே கொண்டு செல்ல, ஆயிஷா, “மாமா காப்பிய குடிச்சிட்டு கடைக்கு போயி காய்கறி மளிகை சாமான்கள் எல்லாம் வாங்கிட்டு அப்படியே நல்ல மீனா இருந்தா பார்த்து வாங்கிட்டு வாங்க” என்றாள்.

“சரிமா பையை எடுத்திட்டு வா” என்றார் பெரியவர் .

காபியை குடித்துவிட்டு டம்ளரை கீழே வைப்பதற்கு முன் பையையும் சாமான்களுக்கு தேவையான காசையும் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

“மாமா இந்தாங்க” ஒரு துண்டுச் சீட்டையும் காசையும் கொடுத்தாள்.

“மாமா சாமான் எல்லாம் மறக்காம வாங்கிட்டு வந்துருங்க” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

பெரியவர் கையில் பையுடன் தெருவில் இறங்கி நடக்கலானார். காலை 10 மணிக்கு சாமான்களுடன் திரும்ப வந்தார்.

மருமகளிடம் சாமான்களை கொடுத்துவிட்டு களைப்பாக இருந்ததால் வீட்டு திண்ணையில் மறுபடியும் உட்கார்ந்தார்.

உள்ளே இருந்து ஆயிஷா தண்ணீர் செம்புடன் வந்தாள்.

செம்பை கையில் கொடுத்துவிட்டு “மாமா அப்படியே ரேஷன் கடைக்கும் போய்ட்டு வந்துருங்க. புள்ளைங்களுக்கு சாப்பாடு செஞ்சி பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி விடனும். நான் சீக்கிரமா சமைக்கணும்” என்று சொல்லிவிட்டு ரேஷன் கார்டையும் பையையும் கொண்டுவந்து கொடுத்தாள்.

ஏதோ யோசித்தபடி ஓரத்தில் நின்றிருந்த சைக்கிளை தள்ளிக் கொண்டு பெரியவர் நடந்தார்.

ரேஷன் கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் வரிசையில் நின்று சாமான்களை வாங்குவதற்குள் அவருக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

காலையில் இருந்து எதுவும் சாப்பிடாததால் அவருக்கு தலை சுற்றுவது போல் இருந்தது.

வயதானதால் உள்ளுக்குள் ஒரு நடுக்கம். கொஞ்சம் தடுமாற்றத்துடன் சைக்கிளை தள்ளிக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.

அவருக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நாக்கு வறண்டு போனது.

ரேஷன் பொருட்களை ஆயிஷாவிடம் கொடுத்துவிட்டு முகத்தைத் துடைத்தபடி உட்கார்ந்தார்.

“ஆயிஷா குடிக்க கொஞ்சம் தண்ணி தாம்மா படபடன்னு வருது” என்று சொன்னார்.

சிறிது நேரத்தில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு உள்ளே சென்று தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள் ஆயிஷா.

பெரியவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.

மகள் திருமணம் முடித்து தன் கணவன் வீட்டோடு சென்று விட்டாள்.

மகனோ வெளிநாட்டில் டிரைவர் வேலை பார்த்து அதில் கிடைக்கும் வருமானத்தை தன் குடும்ப செலவுக்கு அனுப்பி வைப்பான்.

பெரியவரின் மனைவி இறந்து போய் இரண்டு வருடங்கள் ஆகின்றது.

மகனுக்கு இரண்டு குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்று கொண்டு இருக்கிறார்கள்.

முதியவரால் எந்த வேலையும் செய்ய இயலவில்லை. வீட்டில் தன் மருமகள் சொல்லும் வேலைகளை பார்த்து கொண்டு மருமகள் சொல்வதை எல்லாம் கேட்டு நடந்து கொள்வதும் தான் அவருடைய வேலை.

பள்ளிக்கூடத்திலிருந்து குழந்தைகளை அவர்தான் அழைத்து வரவேண்டும்.

வெயிலில் வந்த களைப்பு அவருக்கு. அப்படியே கண் அயர்ந்தார்.

பெரியவரின் மனைவி “என்னங்க களைப்பா இருக்கா? எப்போதும் சின்ன புள்ள மாதிரி சுத்திகிட்டே இருப்பீங்களே. ஒரு இடத்துல நிக்க மாட்டீங்க. இப்படி அசந்துபோய் உங்கள நான் ஒருநாள் கூட பார்த்ததே இல்லையே”

பெரியவர் “ஆமாம் மெஹர் நீ இருந்த வரைக்கும் எனக்கு வயசு ஆனதே தெரியல. எப்போ பார்த்தாலும் ஏதாச்சும் செஞ்சு எனக்கு சாப்பிட கொடுத்துகிட்டே இருப்ப. ஒரு நாள் கூட என் வயிறு காஞ்சி பார்த்ததே இல்லை. என் கூடவே இருந்து என்ன சின்ன புள்ளையா பாக்கறது போல அப்படி பார்த்துகிட்டே.

இப்ப என்ன மட்டும் தனியா விட்டுட்டு போயிட்ட. என்ன பாக்குறதுக்கு ஒரு நாதி கூட இல்லை. சாப்பிட்டியா என்று கேட்பதற்கு கூட ஆள் இல்லை.

எனக்கு இப்போதான் வயசான மாதிரி தெரியுது. வெயிலை பார்த்தா ஒரு மாதிரியா தலை சுத்துது. என்னால முன்ன மாதிரி வேலையே பார்க்க முடியல.

இருந்தாலும் நம்ம புள்ள நம்ப மருமவ நம்ம பேர குழந்தைங்க என்கிறதால இந்த உசுர வச்சுக்கிட்டு இன்னும் இருக்கேன்.

நீ கவலை இல்லாமல் என்ன விட்டுட்டு போயிட்ட. நம்ப மகனும் வெளிநாட்டுல இருக்கான். மருமகளை குத்தம் சொல்லவும் ஒன்றுமில்லை.

அவ என்னத்த செய்வா இரண்டு குழந்தைகளையும் வச்சுக்கிட்டு, இந்த வயசான கிழவனையும் வச்சுக்கிட்டு அவள் ரொம்பவே கஷ்டப்படுறா. நான் கிடந்து
அல்லடிட்டு இருக்கேன்.”

“சரி சரி போங்க. சும்மா புலம்பிகிட்டு இருக்காதீங்க. நம்ம பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் யார் பார்க்கிறது. நீங்க தானே பாக்கணும்” என்று அவர் தலையை யாரோ வருடுவது போல் ஓர் உணர்வு ஏற்பட கண் விழித்தார்.

மணி 12.45.

அவர் வீட்டின் அருகே உள்ள பள்ளிவாசலில் பாங்கின் ஓசை ஒலித்தது.

பெரியவர் எழுந்து “அம்மா ஆயிஷா ஆயிஷா” என்று கூப்பிட,

“ஏன் மாமா?” என்று உள்ளே இருந்து குரல் வந்தது.

“ஒன்னும் இல்லம்மா. பள்ளியில் பாங்கு சொல்லிட்டாங்க. நான் போய் தொழுதுட்டு வரேன். குழந்தைகளுக்கு சாப்பாடு எடுத்து வை. நான் வந்து எடுத்துட்டு போறேன்” என்று சொல்லிவிட்டு
தொழுகைக்கு கிளம்பினார்.

“சரிங்க மாமா” என்றது ஆயிஷாவின் குரல்.

பெரியவர் தொழுதுவிட்டு வீட்டிற்குள் நுழைய மருமகள் ஆயிஷா தன் தாய் தந்தையுடன் போனில் பேசிக் கொண்டிருப்பது கேட்டது.

“அம்மா நீ நல்லா இருக்கியா? அப்பா நல்லா இருக்காரா?”

போனின் மறுமுனையில், “நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். நீ எப்படி இருக்க? உன் மாமனார் நல்லா இருக்காரா?”

ஆயிஷா “இருக்காரு இருக்காரு. அவருக்கு என்ன நல்லாத்தான் இருக்காரு. எப்ப பார்த்தாலும் தண்ணி எடுத்துட்டு வா. டீ எடுத்துட்டு வா ன்னு அதிகாரம் பண்ணிக்கிட்டு இருக்காரு.

இந்த புள்ளைங்கள வச்சிக்கிட்டு சமாளிப்பதே பெரிய பாடா இருக்கு. இதுல அவரு வேற ஏதாவது குத்தம் சொல்லிக்கிட்டே இருக்காரு.

இந்த வீடு அவர் பெயரில்தான் இருக்குது. இல்லன்னா யார் அவரை கவனிக்க போறா.

இருக்கட்டும்; என் புருஷன் வெளிநாட்டில் இருந்து வந்ததும் மாமனார் கிட்ட கையெழுத்து வாங்கிட்டு அனாதை ஆசிரமத்தில் சேர்க்கிறேனா இல்லையான்னு பாரு” என்றாள் ஆயிஷா.

மறுமுனையில் “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது பெரியவங்கள” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது, வாசலில் ஏதோ விழுவது போல் சத்தம் கேட்க, ஓடிச் சென்று பார்த்தாள் ஆயிஷா.

சலனமில்லாமல் தரையில் சரிந்து கிடந்தது மாமனாரின் உடல்.

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.