அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும் எனத் தொடங்கும் இப்பாடல் திருவெம்பாவையின் பதினெட்டாவது பாடல் ஆகும்.
திருவெம்பாவைப் பாடல்கள் உலகின் எல்லாவாகவும் திகழும் இறைவரான சிவபெருமானின் மீது வாதவூரடிகள் எனச் சிறப்பாக அழைக்கப்படும் மாணிக்கவாசகரால் பாடப்பட்டது.
கி.பி.9-ம் நூற்றாண்டில் பாடப்பெற்ற திருவெம்பாவை பாடல்கள், இன்றைக்கும் மார்கழியில் இறைவழிபாட்டின் போது, பாடப்படும் சிறப்பினைக் கொண்டுள்ளன.
உலகின் எல்லாவாகவும் திகழும் இறைவனான சிவபெருமானின் ஒளி பொருந்திய திருவடிகளைப் புகழ்ந்து பாடி நீராடுவோம் என திருவெம்பாவையின் பதினெட்டாவது பாடல் கூறுகிறது.
பாவை நோன்பிருப்பவர்கள் “அண்ணாமலையாரின் தாமரைத் திருவடிகளை தேவர்கள் பணியும்போது, அவர்களின் மகுடத்தில் இருக்கும் பல்வகையான இரத்தினங்களின் ஒளியானது இறைவனின் திருவடி பேரொளியால் மங்குகின்றன.
அதுபோல சூரியனின் ஒளியால் ஒளி குறைந்த விண்மீன்கள் மறைகின்றன. மேலும் உலகின் எல்லாமுமாக திகழ்கின்ற இறைவனின் திருவடிகளை புகழ்ந்து பாடி நீராடுவோம்” என்று கூறுகின்றனர்.
கதிரவனின் ஒளியால் விண்மீன்களின் ஒளி குறைவது போல், நிலையற்ற பொருள் வகைச் செல்வங்கள் நிலையான இறைவனின் முன்னால் முக்கியத்துவத்தை இழக்கின்றன. ஆதலால் நிலையான இறைபரம்பொருளின் மீது பற்று வைக்க வேண்டும் என்று இப்பாடல் கூறுகிறது.
இனி திருவெம்பாவை பதினெட்டாவது பாடலைக் காண்போம்.
திருவெம்பாவை பாடல் 18
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ஆர் அமுதமும்ஆய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்து ஆடலோர் எம்பாவாய்
விளக்கம்
பாவை நோன்பிருக்கும் பெண்கள் மற்றொரு பெண்ணிடம் “பெண்ணே, திருவண்ணாமலையில் அருளும் அண்ணாமலையாரின் தாமரை போன்ற திருவடிகளை, ஜொலிக்கும் இரத்தினங்களாலான மகுடத்தை அணிந்த தேவர்கள் வணங்குகின்றனர்.
அண்ணாமலையாரின் திருவடிகளின் பேரொளியால் தேவர்களின் மகுட இரத்தினங்கள் தங்களின் ஒளியை இழந்து விடுகின்றன.
அதுபோல இருள் நீங்குமாறு கதிரவன் தோன்றியதும் விண்மீன்கள் தங்களின் ஒளியை இழந்து மறைந்து விட்டன. பொழுதும் விடிந்து விட்டது.
இறைவன் ஆண், பெண், அலி என மூன்றுமாய் திகழ்கின்றான். ஒளியைத் தருகின்ற சூரியனும், சந்திரனும் பொருந்திய வானமாக இருக்கிறான். மண்ணாகத் திகழ்கின்றான். இவற்றுக்கு வேறாக உள்ள அனைத்துமாய் விளங்குகின்றான்.
மேலும் அவன் நம் கண்களுக்கு முன்பு நிறைந்த அமுதமாகக் காட்சியளிக்கின்றான். எங்கும் நீக்கமற திகழும் இறைவனான சிவபெருமானின் மலர் போன்ற திருவடிகளைப் போற்றிப் பாடி பூக்கள் நிறைந்த இக்குளத்தில் பாய்ந்து நீராடுவோமாக.” என்று கூறுகின்றனர்.
இவ்வுலகின் எல்லா உயிர்களுமாய், எல்லாப் பொருட்களுமாய் திகழ்கின்ற இறைவனே நிலையானவன். ஆதலால் நிலையில்லாத செல்வப் பொருட்களின் மீது விருப்பம் கொள்ளாது நிலையான இறைவனின் மீது நாட்டம் கொள்ளுங்கள் என்று இப்பாடல் உணர்த்துகிறது.