டொனேஷன் என்கின்ற வார்த்தையைக் கேட்டாலே கதிரேசனுக்குப் பற்றிக் கொண்டு வரும்.
யார் வந்து எதற்கு டொனேஷன் கேட்டாலும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தவிர்த்து விடும் வழக்கம் அவனுக்கு கை வந்த கலை.
அன்றும் அப்படித்தான். அந்த ஊரிலிருந்த புகழ் வாய்ந்த அம்மன் கோவிலின் கொடை விழாவுக்காக டொனேஷன் கேட்டு வந்தவர்களிடம் வழக்கம் போல் தர்க்கம் செய்து அவர்களைத் தவிர்த்துக் கொண்டிருந்தான்.
“ஐயா, டொனேஷன் கட்டாயமில்லை. உங்களுக்கு பூரண சம்மதம் இருந்தால், உங்களால் எவ்வளவு முடியுமோ அதைக் கொடுங்க; முழுக்க முழுக்க உங்கள் விருப்பம் தான்!” அவர்கள் சென்று விட்டார்கள்.
அருகிலிருந்த டவுனில் பணிபுரியும் மகனையும் மருமகளையும் பார்க்க மனைவியுடன் கிளம்பினான் கதிரேசன்.
போகும் வழியில் மனைவி கூட கேட்டாள். “அன்னதானம் செய்யத்தானே டொனேஷன் கேட்டார்கள். ஏதாவது கொடுத்திருக்கலாம் தானே?” கதிரேசன் முறைத்ததும் வாய் மூடி மவுனியானாள்.
இரு நாட்களுக்குப் பின் மனைவியை விட்டு விட்டு கதிரேசன் மட்டும் கிளம்பினான். அன்று தான் ஊரிலிருந்த அம்மன் கோவில் கொடைவிழா.
காலையில் எதுவும் சாப்பிடாமல் கிளம்பியிருந்ததால் ஊர் வந்து சேர்ந்ததும் ஓட்டல்களைத் தேட ஒரு ஓட்டல்கூட, ஏன் ஒரு டீக்கடைகூட திறக்கவில்லை. கடைகளெல்லாம் மூடப்பட்டிருந்தன.
ஊர்த்திருவிழாவுக்காக இருக்கலாமென நினைத்து ஒருவரிடம் அது பற்றிக் கேட்க அரசியல் பிரமுகர் ஒருவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடை அடைப்பாம்.
எரிச்சலும் பசியும் பாடாய்படுத்த செய்வதறியாது கொடைவிழா காணச் சென்றான். இவன் கோவில் அடைந்தபோது பூஜைகள் முடிந்து அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. கும்பலோடு கும்பலாக கதிரேசனும் கலந்து பசி மயக்கத்தில் பொட்டலங்களை வாங்கச் சென்றான்.
பொட்டலங்களைப் பெற்றுக் கொண்டு திரும்பியபோது,, டொனேஷன் கேட்டு வந்தவர்கள் எதேச்சையாக எதிரே வந்து கொண்டிருக்க அவர்களை நிறுத்தி புன்னகையுடன் “அன்னதானத்திற்காக என் பங்கு” எனக்கூறி ஆயிரம் ரூபாயை வழங்கி தன் முதல் டொனேஷனுக்குக் காரணமாய் இருந்த பசியை ஆற்றிய அம்மனைப் பயபக்தியுடன் கைகூப்பித் தொழ ஆரம்பித்தான்.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!