அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர் என்ற இப்பாடல் திருவெம்பாவையின் ஏழாவது பாடல் ஆகும்.

திருவெம்பாவை பாடுவோரின் உள்ளத்தை உருகச் செய்யும் திருவாசகத்தைப் பாடிய வாதவூரடிகள் என்று அழைக்கப்படும் மாணிக்கவாசகரால், சைவத்தின் தலைவரான சிவபெருமானின் மீது பாடப்பட்டது.

மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் தங்கியிருந்த போது திருவெம்பாவையைப் பாடினார். இப்பாடல் மார்கழியில் இறை வழிபாட்டின் போது இன்றைக்கும் பாடப்படுகிறது.

பாவை நோன்பு வழிபாட்டிற்கு தயாராகாமல் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருக்கும் தோழியை, அறியாமை என்னும் உறக்கத்தில் இருந்து விழித்து, இறைவனின் புகழினைப் பாட அழைப்பதாக திருவெம்பாவையின் ஏழாம் பாடல் அமைந்துள்ளது.

“சிவாலயத்தின் கொம்பின் முழக்கம் கேட்கும்போது சிவசிவ என்று சொல்லியும், தென்னவனே என்று சிவனைப் புகழ்ந்ததும் மெழுகு போல் உருகியும் நிற்கும் நீ இன்னும் உறங்குகிறாய்.

என் தலைவனே, அமுதனே என்று இறைவனை நாங்கள் பாடியும் கேளாது தூங்கிக் கொண்டிருக்கிறாய். நீ அறியாமை என்னும் உறக்கத்திலிருந்து எழுந்து இறைவனை பாட வருவாயாக” என்று பெண்கள் தோழியை அழைக்கின்றனர்.

அறியாமை என்னும் மனத்தின் இருளினை நீக்கி, சிவபெருமான் என்ற அருளொளியை காண உள்ளம் உருகி வழிபட வேண்டும் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.

இனி திருவெம்பாவை ஏழாவது பாடலைக் காண்போம்.

திருவெம்பாவை பாடல் 7

அன்னே இவையுஞ் சிலவோ பல அமரர்

உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்

சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறவாய்

தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய்

என்னானை என்னரையன் இன்னமுதென்று எல்லோமும்

சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ

வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்

என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்

விளக்கம்

பாவை நோன்பிற்காக பெண்கள் கூட்டமாகச் செல்கின்றனர். அவ்வாறு செல்கையில் பாவை நோன்பிற்கு தயாராகாமல் உறங்கிக் கொண்டிருக்கும் தோழியை எழுப்புகின்றனர்.

அத்தோழியிடம் பெண்கள் “அன்னையைப் போன்றவளே, வீட்டினுள் உறங்கும் உன்னை பாவை நோன்பிற்காக எழுப்புவதற்காக இதுவரையிலும் கூறியவை கொஞ்சமா?

இறைவனான சிவபெருமான் தேவர்கள் உள்ளிட்ட பலருக்கும் நினைத்து பார்க்கவும் அரிதானவன்; ஒப்பில்லாதவன்; பெரும் புகழினை உடையவன்.

விடியற்காலத்தில் சிவபெருமானின் திருச்சின்னமாகிய இசைக்கருவிகளின் ஒலி கேட்ட பொழுதே சிவசிவ என்று வாய் திறப்பாயே.

தென்னாடுடைய சிவனே போற்றி என்று அவனுடைய திருப்பெயரைச் சொல்லும் போதே, தீயை நெருங்கிய மெழுகு போல் உருகி நிற்பாயே.

இன்று நாங்கள் எல்லோரும் சேர்ந்தும், தனித்தனியாகவும் “எங்கள் தலைவனே, என் அரசனே, இனிய அமுதனே” என்று போற்றி இறைவனைப் பாடியதைக் கேட்டும் உறங்குகின்றாயே.

இரக்கமற்ற அறிவிலி போல் இன்னும் உறங்கிக் கொண்டு இருக்கிறாயே.

உன்னுடைய உறக்கத்தின் தன்மையை என்னவென்று சொல்வது? நீ அறியாமை என்னும் உறக்கத்திலிருந்து எழுந்து இறைவனை பாட வருவாயாக” என்று கூறுகிறார்கள்.

உள்ளம் உருகி வழிபட்டால் அறியாமை என்ற மனத்தின் இருள் நீங்கி இறைவனாரின் அருளொளி கிட்டும் என்பதை இப்பாடல் விளக்குகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.