அமோனியா – வளியின் குரல் 11

″வணக்கம் மனிதர்களே!

உங்களை மீண்டும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றைக்கு நான் உங்களோடு பேச இருப்பது ′அமோனியா′ எனும் வாயுவை பற்றி தான்.

இம்ம்.. அமோனியாவைப் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கிறீர்களா?

இல்லையா?

நியாயம் தான். ஆக்சிஜன் போன்றோ, கார்பன்-டை-ஆக்சைடு போன்றோ அமோனியா வாயு பற்றி எல்லோருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

இருக்கட்டும். அமோனியா என்பது ஒரு நைட்ரஜன் அணுவுடன் மூன்று ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்திருக்கும் வாயு.

இதனை NH3 எனும் மூலக்கூறு வாய்பாட்டால் குறிக்கின்றனர்.

ஒரு முக்கியமானா தகவல். அமோனியா வாயுவை எளிதில் திரவமாக்க முடியும்.

காரணம், இதன் மூலக்கூறுகளுக்கு இடையில் ஹைட்ரஜன் பிணைப்பு இருப்பதே.

அத்தோடு, அமோனியா நீரிலும் நன்றாகக் கரையும். அமோனியா நீர்க் கரைசலை ′அமோனியம் ஹைட்ராக்ஸைடு′ என்று அழைக்கின்றனர்.

தெரியுமா? அமோனியா இயற்கையிலேயே உருவாகிறது!

‘எப்படி?’ என்று தானே யோசிக்கிறீர்கள். சொல்கிறேன்.

காய்கறி மற்றும் இறந்த உயிரினங்கள் சிதையும் போது அமோனியா வாயுவும் உற்பத்தியாகிறது.

தாவரம் ஆனாலும் சரி, விலங்குகள் ஆனாலும் சரி, இவற்றில் இருக்கும் கரிமச் சேர்மங்களில் கார்பனோடு, ஹைட்ரஜனும் நைட்ரஜனும் இருக்கின்றனவே!

இயற்கையாகவே, உயிரினங்களில் இருக்கும் கரிமச் சேர்மங்கள் சிதைந்து கனிம மூலக்கூறுகளான கார்பன் ஆக்சைடு, அமோனியா போன்ற வாயுக்களை தரும்.

மனிதர்களே, பூமியில் மட்டும் அல்ல, செவ்வாய், வியாழன், சனி, போன்ற பிற கோள்களிலும் அம்மோனியா இருக்கிறது.

இம், இதை சொல்லணும். அமோனியா நச்சுத்தன்மை வாய்ந்தது; அரிப்புத் தன்மையும் கொண்டது. அத்தோடு ஒருவகை காரத்தன்மையுடன் கூடிய கடும் நாற்றம் கொண்டது.

என்ன! அமோனியாவை பிடிக்கவில்லையா?

ஆமாம் அமோனியாவின் இத்தகைய பண்புகள் யாருக்குத் தான் பிடிக்கும்?

ஆனால் ஒன்று. அமோனியாவினால் பல முக்கிய பயன்களும் இருக்கின்றன.

ஆமாம், அமோனியா நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உலகில் உற்பத்தி செய்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய வேதிப்பொருள்.

அமோனியா பயிர்களுக்கு இடும் உரம் தயாரிக்கவும், பல்வேறு வகையான வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யவும் பயன்படுகிறது.

விரும்பத்தகாத வாசனையுடைய அமோனியாவாலும் நன்மைகள் இருக்கின்றன.

ஆமாம், இவ்வுலகம் தான் நன்மை தீமையினால் ஆக்கப்பட்டுள்ளதே! இருக்கட்டும்,

′நம்மால் நன்மைகள் மட்டுமே நிகழ வேண்டும்′ என்ற எண்ணத்துடன் ஒவ்வொரும் செயலாற்ற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

எனது விருப்பத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

சரி, இன்று போய் இன்னொரு நாள் வருகிறேன், உங்களை சந்திக்க.

நன்றிகள்.″

(குரல் ஒலிக்கும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461
மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.