அறம், பொருள், இன்பம் மூன்றையும் ஒருசேரக் கொடுப்பது எது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
நாம் இன்றைக்கு நீர்நிலைகளை பாதுகாக்காது புறந்தள்ளி விட்டோம்.
ஏரிகள் சுருங்கி விட்டன.
குளம் குட்டைகள் காணாமல் போயின.
வரத்து கால்வாய்களை மூடிவிட்டோம்.
நீரைச் சேமிக்க வழியில்லை.
ஆறுகளை மணல் சுரங்கங்களாக மாற்றி விட்டோம்.
நன்செய் நிலத்தை புன்செய் நிலமாக மாற்றி விட்டோம்.
பழந்தமிழ் நாட்டில் நீர் நிலைகள் இன்றியமையாதவையாக இருந்துள்ளன.
நீர் சேமித்தலைப் பற்றிய புறநானூற்றுப் பாடலை பார்ப்போம்.
பழந்தமிழ் நாட்டில் நீர் நிலைகள் இன்றியமையாதவையாக இருந்துள்ளன.
நீர் சேமித்தலைப் பற்றிய புறநானூற்றுப் பாடலை பார்ப்போம்.
புறநானூறு (குடபுலவியனார்)
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து தம்புகழ் நிறீஇ
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்
ஒன்று பத்து அடுக்கிய கோடிகடை யிரீஇய
பெருமைத்து ஆகநின் ஆயுள் தானே
நீர் தாழ்ந்த குறுங்காஞ்சிப்
பூக்கதூஉம் இனவாளை
நுண்ஆரல் பருவரால்
குருஉக்கெடிற்ற குண்டு அகழி
வான் உட்கும் வடி நீண்மதில்
மல்லன் மூதூர் வய வேந்தே
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ ஆகல் வேண்டினும் சிறந்த
நல்இசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்
தகுதி கேள்இனி மிகுதி யாள
நீர் இன்றி அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே
வித்தி வான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்குஉத வாதே அதனால்
அடுபோர்ச் செழிய விகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர் நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவன் தட்டோரே
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே (18)
சிறிய விளக்கம்
நீரை முக்கியமாகக் கொண்டுள்ள உடம்பிற்கு உணவைக் கொடுத்தவர் உயிரைக் கொடுத்தவர் ஆவார்.
உடம்பு உணவை முதலாக உடையது. எனவே உணவு என்று சொல்லப்படுவது நிலத்துடன் கூடிய நீராகும்.
அந்த நீரையும் நிலத்தையும் ஒன்றாகச் சேர்த்தவர் இவ்வுலகில் உயிரையும் உடலையும் படைத்தவராவார்.
நிலம் பள்ளமான இடத்தில் நீர்நிலை பெருகும்படி நீரைக் கூட்டியவர் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று செல்வங்களையும் பெற்றவராவார்.
இவ்வாறு நீரை சேமிக்காத மன்னர்கள் இவ்வுலகில் தம் பெயரை, புகழை நிலைநிறுத்தாதவர் ஆவார்.
இப்பாடலில் புன்செய் நிலம் அதிகமாக இருந்தாலும் பயன் குறைவே ஆதலால், நீரை சேமித்து பாசன வசதி செய்தால் பயனும் புகழும் பெருகும் என்பதைக் காட்டுகின்றார்.
அன்றைய நிலையையும், இன்றைய நிலையையும் எண்ணுவோம்.
இராமமூர்த்தி இராமாநுஜதாசன்
திருநின்றவூர்௬02024
கைபேசி: 9444410450
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!