அறிவால் வெல்லுவேன்

ஆடு

பழுவூர் என்ற ஊரில் ஓர் அழகிய மலை இருந்தது. அதன் அடிவாரத்தில் மலை ஆடுகள் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அதில் ஒரு குறும்புக்கார ஆட்டுக்குட்டி ஒன்று இருந்தது.

அது தன் தோழர்களுடன் மலையில் ஏறும். அங்குள்ள வழுக்கும் பாறைகளில் வழுக்கி விளையாடும். சரிவான பாறைகளில் தாவித்தாவி ஓடும். அங்குள்ள காட்டில் சுற்றித் திரியும்.

அந்தக் காட்டில் புலிகளும் வசித்து வந்தன. அதனால் தாய் ஆடு தன் குட்டியைப் பற்றி எப்போதும் கவலைப்படும்.

தாய் ஆடு காட்டில் விளையாடப் போகும் தன் குட்டியிடம் “இருபக்கங்களையும் பார்த்துக் கவனமாகச் செல்; காற்றில் புலியின் வாசம் வருகிறதா?. முகர்ந்து பார். அருகில் ஏதாவது சலசலப்புக் கேட்கிறதா? கூர்ந்து கவனி. அபாயம் என்று தெரிந்தால் முதலில் குரங்குகள் ஒலி எழுப்பும். உடனே மான்கள் பயந்து ஓடும். மிக அருகில் புலி இருந்தால் அப்பகுதியில் ஒருவித அமைதி நிலவும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்” என்று அறிவுரை கூறும்.

 

அதற்கு ஆட்டுக்குட்டியோ

“அழகு மலைக்குச் செல்லுவேன்

ஆடிப் பாடித் துள்ளுவேன்

அருகில் புலியே வந்தாலும் – என்

அறிவால் அதனை வெல்லுவேன்” என்று துணிவுடன் பதில் கூறும்.

 

ஒரு நாள் மாலை நேரம். மலையில் மேயச் சென்ற ஆடுகள் எல்லாம் வீட்டிற்குத் திரும்பின. குறும்புக்கார ஆட்டுக்குட்டி மட்டும் பாடிக் கொண்டே தனியாக வந்தது.

திடீரென ஓர் உறுமல் சத்தம். ஆட்டுக்குட்டி அச்சத்துடன் திரும்பிப் பார்த்தது. மிக அருகில் ஒரு புலி. தப்பி ஓடலாமா? எங்காவது ஒளிந்து கொள்ளலாமா? என்ன செய்வது? என்று நினைத்தது.

 

ஆட்டுக்குட்டி துணிச்சலுடன்

“அழகு மலைக்குச் செல்லுவேன்

ஆடிப் பாடித் துள்ளுவேன்

அருகில் புலியே வந்தாலும் – என்

அறிவால் அதனை வெல்லுவேன்” என்று பாடியது.

 

புலி கேலியாக “ஓ உன் அறிவால் என்னை வெல்வாயா? உன் அறிவுத் திறமையைக் காட்டு பார்க்கலாம்” என்றது.

உடனே ஆட்டுக்குட்டி “நான் உன்னிடம் சில புதிர்களைக் கேட்பேன். நீ சரியான விடை சொல்ல வேண்டும். சொல்ல முடியாவிட்டால்

என்னை அறிவாளி என்று ஏற்றுக்கொண்டு விட்டுவிட வேண்டும். சரியா” என்று கேட்டது.

“சரி” என்று தலையாட்டியது புலி.

“விடிய விடிய பூப்பந்தாட்டம் விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம் அது என்ன?”

புலி திருதிரு என்று விழித்தது. “பூந்தோட்டம் வெறுந் தோட்டமா ஒன்றும் புரியவில்லையே நீயே சொல்” என்று கூறியது.

“வானம் விண்மீன்கள்” என்று ஆட்டுக்குட்டி துள்ளிக் கொண்டே கூறியது.

 

“இன்னொரு புதிரையும் கூறுகிறேன் கவனமாகக் கேள். தின்னப் பழம் பழுக்கும். தின்னாத காய் காய்க்கும். அது என்ன?” என்று கேட்டது ஆட்டுக்குட்டி.

புலி குறுக்கும் நெடுக்குமாக நடந்தது. ஆழ்ந்து சிந்தித்தது. ஆனாலும் விடை தெரியவில்லை.

வேப்பமரம்” என்று விடையைக் கூறியது ஆட்டுக்குட்டி.

“அடுத்த புதிரைக் கூறுகிறேன். சிந்தித்து பதில் சொல்” என்றவாறு ஆட்டுக்குட்டி “நீரிலும் இருப்பான். நிலத்திலும் இருப்பான். வாலோடு பிறப்பான். வாலை இழப்பான்- அவன் யார்?” எனக் கேட்டது.

இதற்கும் புலிக்கு விடை தெரியவில்லை.

தவளை” என்று கூறியது ஆட்டுக்குட்டி. உடனே புலி “நீ அறிவாளிதான். போய் வா” என்று பாராட்டி அனுப்பியது.

ஆட்டுக்குட்டி மகிழ்ச்சியுடன் “அழகு மலைக்குச் செல்லுவேன்” என்று பாடிக்கொண்டே சென்றது.

குழந்தைகளே ஆட்டுக்குட்டியைப் போல நாம் புத்திசாலிகளாக இருந்தால் வாழ்வின் எப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் சமாளிக்க முடியும் என்பதை இக்கதையின் மூலம் அறியலாம்.

 

Comments

“அறிவால் வெல்லுவேன்” மீது ஒரு மறுமொழி

  1. காமராஜ்

    அழகு கதை. எழுதிய அன்பருக்கு பாராட்டுக்கள்!

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.