அல்லிக் கிழங்கு எடுத்தது – மங்கம்மாள் பாட்டி

அல்லிக் கிழங்கு எடுத்தது – மங்கம்மாள் பாட்டி

“இப்பயெல்லாம் புள்ளைங்களுக்கு காது குத்துறப்போ வலிக்கக் கூடாதுங்கிறதுக்காக டாக்டருக்கிட்டேயும், அழகு நிலையத்துலேயும் போய் காது குத்துறாக. நீங்க காது குத்தி கம்மல் போட்டதக் கேட்கும்போது ரொம்ப சிலிர்க்குது.” என்றாள் தனம்.

“இன்னைக்கு இருக்கிற பணவசதி அப்பயெல்லாம் கிடையாது. எப்படியாவது காது குத்தினா போதுங்கிற ஆசையில சப்பாத்தி முள்ள வச்சி காது குத்திக்கிட்டோம். பித்தளைக் கம்மல வாங்கி போட்டுக்கிட்டோம்.” என்று வெறுமையாகச் சிரித்தாள் கனி.

பின்னர் “அதவிடுங்க. இந்தாங்க அல்லிக் கிழங்கு. சாப்பிடுங்க.” என்று அல்லிக் கிழங்கினை எடுத்து நீட்டினாள் தனத்திடம் நீட்டினாள் கனி.

“இப்பயும் அல்லிக் கிழங்கு கிடைக்குதா? இத சாப்பிட்டு ரொம்ப நாளாயிடுச்சு.” என்றபடி கனியிடம் வாங்கிக் கொண்டாள் தனம்.

“தொப்பையங் குளத்துலதான் அல்லிக் கிழங்கு எடுத்தேன். இன்னைக்கு காலையில சமையல முடிச்சதும் கொஞ்சம் கிழங்க எடுத்து தண்ணியில வேக வைச்சு எடுத்துட்டு வந்தேன். மங்கம்மா நீயும் எடுத்துக்கோ இந்தா” என்றபடி அல்லிக் கிழங்கினை மங்கம்மாளிடம் நீட்டினாள் கனி.

“முந்தியெல்லாம் எங்க ஊர்ல அல்லிக் கிழங்கு விற்க வரும். இப்ப அஞ்சாறு வருசமா அல்லி கிழங்கு விற்க வரல. உங்களுக்கு அல்லிக் கிழங்கு எடுக்கத் தெரியுமா?” என்றாள் தனம்.

“எனக்கு மட்டுமில்ல. மங்கம்மாளுக்கும், சொர்ணத்தும்கூட அல்லிக்கிழங்கு எடுக்கத் தெரியும். அது ஒரு தனிக்கலை.” என்றாள் கனி.

“பங்குனி, சித்திரையில நுங்கு, பதனி, அல்லிக் கிழங்கு, சித்திரை வைகாசி, ஆனியில மாம்பழம், பலாப்பழம், ஆடியில ஆவணியில நாவல் பழம், ஈச்சப் பழம், பனம் பழம், இலந்தைப் பழம், கார்த்திகை, மார்கழியில பனங்கிழங்கு, தை, மாசியில மொச்சை, சர்க்கரை வள்ளி கிழங்கு கிடைக்கும்.

அப்பையெல்லாம் அந்தந்த மாசத்துல கிடைக்கிறதத்தான் சாப்பிடுவாக. இப்ப மாதிரி பலகாரக்கடையெல்லாம் கிடையாதுல அப்ப.”

பொதுவா மாசி, பங்குனியில கண்மாயில தண்ணி வத்த ஆரம்பிக்கும். அப்பதான் அல்லிக் கிழங்கு எடுக்கப் போவோம்.

அல்லிக் கிழங்கெடுக்க தனியா போக மாட்டோம். மூணு பேரு, நாலு பேரு சேர்ந்துதான் போவோம். அல்லியில கிழங்கு எடுக்கப் போறவுகளுக்கு கண்டிப்பா நீச்சல் தெரிஞ்சிருக்கணும்.

மூணடி உயரத்துக்கு கடினமான கம்ப எடுத்திட்டுப் போவோம்.

கண்மாயில அல்லிக் கொடி இருக்கிற இடத்தில இறங்கி கழுத்தளவு ஆழத்த விட கொஞ்சம்கூட ஆழத்து வரைக்கும் போயி கம்பால‌ அல்லிக் கொடியோட வேர் பாகத்த குத்திப் பார்ப்போம்.

கால் பெருவிரலால் கிழங்கு இருக்கிறதை உறுதி செஞ்சிட்டு கம்பால லேசா அந்த இடத்த தோண்டுவோம். பிறகு கால் பெருவிரலால் கிழங்கினை எம்பிவிட்டு நீரில் மூழ்கி கிழங்குகளை எடுத்து சேகரிச்சு வச்சிட்டு கரைக்கு கொண்டு வருவோம்.

ஒருநாளைக்கு ஒரு ஆள் மூணு படி, நாலு படி கிழங்கு எடுப்போம். ஒருநாளைக்கு ஏழு, எட்டு தடவைதான் தண்ணிக்குள்ள மூச்சடைக்கி கிழக்கு எடுக்க முடியும்.

ஆளு கொஞ்சம் வளர்த்தியா இருந்தா கூடகொஞ்சம் ஆழத்துக்குப் போயி கிழங்கு எடுக்க முடியும்.

ஒருசில சமயத்தில ஒரு அல்லிக் கொடிக்கடியிலேயே மூணு படி கிழங்கு இருக்கும். ஒருசில சமயத்தில கிழங்கே இருக்காது. அப்ப அடுத்த கொடியத்தான் தேடிப் போகணும்.

அல்லிக் கொடி ஒருசில நேரத்தில ரெண்டு மூணுன்னு சேர்ந்து பின்னிக் கிடக்கும். அப்பயெல்லாம் கையில இருக்கிற குச்ச வைச்சு கொடிய விலக்கி விட்டு கவனமா செயல்படனும்.

நல்ல நீச்சல் தெரிஞ்சவககூட அல்லிக் கொடிக்குள்ள மாட்டிகிறது உண்டு. அதனால நம்ம உடம்புல கொடி சுத்திக்காம கவனமாக செயல்படனும்.

மூச்சடக்கி கிழங்கு எடுக்கிறப்ப தண்ணிப்பாம்பு, தவளை, மீன், ஆமை எல்லாத்தையும் பார்க்கலாம். அந்தக் காட்சியே ரொம்ப ரம்மியம்தான்.

சில இடங்கல கண்மாய் தரை ரொம்ப வழுக்கும். அந்த இடங்களிலும் கவனமாக இருக்கணும்.

கிழங்கு எடுக்கிறப்ப அல்லிக் கொடியோட அண்டிக் கிழங்க தோண்டக் கூடாது. அது சாப்பிட நல்லா இருக்காது.

அதோட கண்மாயில தண்ணி வத்தி கொடி காய்ஞ்சி போயிரும். மறுபடியும் கண்மாய்க்கு தண்ணீ வந்திட்டா அண்டியில இருந்துதான் கொடி வேகமாக வளரும். அதனால பக்கக்கிழங்கத்தான் எடுக்கணுமே தவிர மூலக்கிழங்க எடுக்கக்கூடாது.

அல்லிக் கிழங்குகளை எடுத்திட்டு வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு தண்ணிக்குள்ள அல்லிக் கிழங்கப் போடணும்.

அல்லிக்கிழங்கு இருக்கிற தண்ணிய ரெண்டு நாளைக்கு ஒருமுறை மாத்திடணும்.

இல்லைனா கிழங்கு முளைவிட்டு கொடி வீச ஆரம்பிச்சிடும். கொடி வீசின கிழங்க அவித்து சாப்பிட்ட சுவையா இருக்காது.

ஒருசிலர் தண்ணிய மாத்தி மாத்தி ஒருவருசம் வரைக்கும் கிழங்குகளை வச்சிருந்து பயன்படுத்துவாக.

அதுல‌ சொர்ணம் கெட்டிக்காரி. பக்குவமாக அல்லிக்கிழங்குகளை தண்ணி ஊத்தி பதப்படுத்தி வச்சிருப்பா. எப்ப வேணுனாலும் அவகிட்ட அல்லிக்கிழங்கை வாங்கிக்கலாம்.

வெளியில கருப்புநிற தோலையும் உள்ள மஞ்சள்நிற சதைப்பகுதியாவும் இருக்கிற இக்கிழங்கு லேசா துவர்க்கும். சில நேரங்களில் கருணைக்கிழங்கு மாதிரி நாக்கரிக்கும். கருப்பட்டியோட இதனைச் சேர்த்து சாப்பிடலாம்.

குறுக்கு வலி, மூலம், சூடு அதுக்கெல்லாம் இது சரியான மருந்து.

அதனால நம்மள மாதிரி காட்டு வேலை செய்யுறவுக இதைக் கட்டாயம் சாப்பிடணும்.” என்றபடி மங்கம்மாள் பாட்டி அல்லிக்கிழங்கினை உரித்து ருசிக்கத் தொடங்கினாள்.

( பாட்டி கதை தொடரும்)

வ.முனீஸ்வரன்

இதையும் நீங்கள் விரும்பலாம்

Visited 1 times, 1 visit(s) today

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.