கேட்கும் செவிகள் வேண்டும்

ஒருவருடன் அலைபேசியிலோ நேரிலோ உரையாடலைத் தொடங்கும் முன் கவனிக்க வேண்டிய, கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம், ‘நம் காதுகள் இரண்டும் திறந்திருக்கின்றனவா?’ என்பதுதான்.

‘இது என்ன கேள்வி? காதுகளை எப்போது மூடுகிறோம். அவை எப்போதும் திறந்து தானே இருக்கின்றன என்று தோன்றுகிறதா?’

கண்களை மூடினால் அது பார்வைக்கு தெரியும்; ஆனால் மூடப்பட்டிருக்கும் செவிகள் கண்ணுக்குப் புலனாவதில்லை.

தம்முடன் பேசுபவர்களின் பேச்சை கிரகித்துக் கொள்கிறதா நம் காதுகள் என்பது அவரவருக்கு தான் வெளிச்சம்.

உரையாடலில் வாய்க்கு மட்டும் வேலை தருகிறோம். பெரும்பான்மையான சமயங்களில் காதுகள் வேலை செய்வதை நிறுத்தி விடுகின்றன.

“எங்க வீட்ல ரெண்டு நாளா கார்ப்பரேஷன் வாட்டர் வரவே இல்லை. எங்க ஏரியாக்கு வர பைப் கனெக்சன் உடைஞ்சு போச்சாம். குடிக்க, சமைக்க, துவைக்கவெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு; போர் தண்ணியில சமைச்சு பருப்பெல்லாம் வேகவே இல்லை” என்ற ஒரு பெண்ணின் புலம்பலுக்கு

“அட….. அப்படியா? எங்க ஏரியால இந்த பிரச்சினையே கிடையாதுப்பா. கார்ப்பரேஷன் வாட்டர் எல்லா நாளும் வரும்.” என்றார் அவரது தோழி.

“உன்கிட்ட போய் என் கஷ்டத்தைச் சொன்னேன் பாரு; ஆறுதலா ஒரு வார்த்தை கூட சொல்லாம உங்க வீட்டு நிலவரத்தைச் சொல்லி பெருமையடிச்சிக்கிற….” என்ற முதலாவது பெண்ணின் கோபத்தில் நியாயம் இருக்கிறது தானே….?

“என் பையன் பத்தாவதுல நாங்க எதிர்பார்த்த மாதிரி மார்க் வாங்கல; மனசு வருத்தமா இருக்கு” எனும் தந்தைக்கு

“அட…. விடுங்க சார். நல்லா படிக்கிற பையன் தான…. கொரோனா, பாதி நாள் ஆன்லைன் க்ளாஸ்னு ஏதோ இப்படி ஆயிடுச்சு. பிளஸ் டூ ல நல்லா படிக்க சொல்லி என்கரேஜ் பண்ணுங்க….” என்று சொன்னால் அந்த தந்தைக்கு ஆறுதலாக இருக்கும் தானே?

அதை விட்டுவிட்டு “என் பையன் நான் எதிர்பார்த்ததுக்கு மேலாவே மார்க் வாங்கி என்ன பெருமைப்படுத்திட்டான்” என்று மற்றொருவர் பதில் சொன்னால் எப்படி இருக்கும்?

“எங்க வீட்ல எல்லோருக்கும் கடந்த ரெண்டு வருஷத்தில ஒருத்தர் மாத்தி ஒருத்தருக்கு கொரோனா வந்து, ஆஸ்பத்திரியில கிடந்து அவஸ்தைப்பட்டோம்’’ என்று சொல்லும் ஒருவரிடம்

“நல்லவேளை…. நாங்க தப்பிச்சோம். கடவுள் புண்ணியத்துல எங்களுக்கு எந்த நோயும் வரல’’ என்று மற்றவர் பதில் சொன்னால் அது எவ்வளவு கொடூரமான வார்த்தைகள்?

இன்று பெரும்பாலும் இப்படித்தான் நமது உரையாடல்கள் அமைகின்றன என்பது வருத்தமான ஒரு விஷயம்.

நிறையப் பேருக்கு கேட்கும் பொறுமை இருப்பதே இல்லை; அடுத்தவர் பேசி முடிக்கும் முன்பாகவே தன் மனதில் உள்ளதைக் கொட்ட வேண்டும் என்று அவசரப்படுகிறார்களே தவிர அவரை முழுமையாகப் பேச வைத்துக் கேட்பதில்லை.

பேசுவது ஒரு கலை என்றால் கேட்பதும் ஒரு கலை தான். செவிகளைத் திறந்து வைப்பது என்பது மனதைத் திறந்து வைப்பதாகும்.

இவரிடம் சொன்னால் நம் மனதில் உள்ள துன்பங்களுக்கு, துயரங்களுக்கு ஒரு வடிகால் ஆக அமையும் என்ற எண்ணத்தில் தான் பெரும்பாலானோர் பிறரிடம் தன் மனத்தைத் திறக்கிறார்கள்.

அவர்கள் வேண்டுவது தங்கள் பிரச்சினைக்கான தீர்வையோ அல்லது உதவியோ கூட அல்ல என்பதுதான் பெரும் ஆச்சரியம். பொறுமையாகக் கேட்கும் செவிகள் போதும் அவர்களுக்கு.

தன் மனதில் உள்ளதைக் கொட்டி விட்டால் பெரும் பாரம் குறையும் என்பது மிகப் பெரும் உண்மை. யாருமே மற்றொருவரின் பிரச்சினையை தன் தோளில் சுமக்க முடியாது; சிக்கல்களுக்கு மிகச் சரியான தீர்வும் சொல்ல முடியாது; ஆனால் மிகச் சுலபமாக அவர் சொல்வதை கேட்க முடியும்.

பொறுமையாக அவர் சொல்வதை உள்வாங்கிக் கொண்டு, “எல்லாம் சரியாயிடும். கவலைப்படாதீங்க….” என்ற மூன்று வார்த்தைகள் அவருக்கு மிகப்பெரும் ஆறுதலையும் பலத்தையும் தரும்.

அதே போல் கேட்பவர் ஏதோ மனக்கஷ்டத்தில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அவரிடம் பேசுபவர் மிகவும் உற்சாகமான மனநிலையில் இருந்து பேசும் போது, எதிராளி தன் சோகத்தை மறந்து அவரிடம் இருந்து அந்த பாசிட்டிவ் வைப்ரேஷனை பெற்றுக் கொள்ள முடியும்.

அதற்குத் தேவை கேட்கும் செவிகள் மட்டுமே….

விஜி ரவி

ஆசிரியரின் மற்றுமொரு சிறந்த படைப்பு

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.