அளவானால் அமிர்தமாகும் பாலாடைக்கட்டி

பாலாடைக்கட்டி (சீஸ்) என்றவுடனே கொழுப்புச்சத்து நிறைந்த உணவு ஆதலால் உடலுக்கு தீங்கு ஏற்படும் என்றே நம்மில் பலர் நினைத்து கொண்டு இருக்கின்றனர்.

ஆனால் உண்மையில் அளவோடு சரிவிகித உணவாக தினசரி உணவில் உண்டால் அது அமிர்தமாகி உடல்நலத்தை பாதுகாக்கும் என்பதே உண்மையாகும். இதனையே தற்போதைய ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன.

பாலாடைக்கட்டியானது நம் நாட்டில் அதிகளவு பயன்படுத்தப்படுவதில்லை. உலகில் பிரஞ்சு நாட்டினர் அதிகளவு பாலாடைக்கட்டிகளைப் பயன்படுத்துகின்றனர். இது ஆங்கிலத்தில் சீஸ் என்று அழைக்கப்படுகிறது.

பாலில் இருந்து தயார் செய்யப்படும் பக்குவப்படுத்தப்பட்ட கெட்டியான பாலாலான திடப்பொருள் பாலாடைக்கட்டி ஆகும். இது மென்மையாகவோ, கெட்டியாகவோ, திடக்கூழ்ம நிலையிலோ இருக்கும்.

பொதுவாக பசு, எருமை, செம்பறி ஆடு, வெள்ளாடு ஆகியவற்றின் பாலிலிருந்து பாலாடைக்கட்டியானது தயார் செய்யப்படுகிறது.

 

எருமை பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட பாலாடைக்கட்டி
எருமை பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட பாலாடைக்கட்டி

 

பாலாடைக்கட்டி பற்றிய வரலாறு

பாலாடைக்கட்டியை தயார் செய்யும் முறையானது சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியிருக்கக் கூடும். இதனை தயார் செய்யும் முறை பற்றி கிரேக்க புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் எகிப்திய சுவரோவியங்களில் சீஸ் தயார் செய்யும் முறை பற்றி வரையப்பட்டுள்ளது. ரோம சாம்ராஜ்ஜியத்தின் வரலாற்றில் இது பிரபலடைந்தது.

பின்னர் இதனைத் தயாரிக்கும் முறையானது மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவலாகப் பின்பற்றப்பட்டது.

பாலாடைக்கட்டியானது பாலினைப் பாதுகாக்கும் சிறந்த முறையாகும். தற்போது பல்வேறு வகையான பாலாடைக்கட்டிகள் பழக்கத்தில் உள்ளன.

 

Varieties of cheeses

பாலாடைக்கட்டி தயார் செய்யும் முறை

சீஸினைத் தயார் செய்யும் முறையானது வகைக்கு வகை வேறுபடும். சீஸினைத் தயார் செய்யும் போது அதில் எலுமிச்சைச் சாறோ, நொதிகளோ சேர்க்கப்படுகின்றன.

பொதுவாக சீஸினைத் தயார் செய்ய உறைய வைத்தல், வடிகட்டல், அழுத்துதல், முதிர வைத்தல் என நான்கு நிலைகள் பின்பற்றப்படுகின்றன.

உறைய வைத்தல்

தயிராக்கல்தயிராக்கல்

 

முதலில் பாலானது காய்ச்சி ஆறவைக்கப்பட்டு எலுமிச்சைச்சாறு, நொதிகள், பாக்டீரியாக்கள் மூலம் தயிராக மாற்றப்படுகின்றன.

வடிகட்டல்

வடிகட்டல்வடிகட்டல்

 

தயிரானது வடிகட்டப்பட்டு அதில் உள்ள நீரானது நீக்கப்படுகிறது. வடிகட்டப்பட்ட தயிரானது கலக்கப்பட்டோ, வெட்டப்பட்டோ, வெப்படுத்தப்பட்டோ, நீட்சியடையச் செய்தோ கெட்டிப்படுத்தப்படுகிறது.

அழுத்துதல்

அழுத்துதல்அழுத்துதல்

 

கெட்டிப்படுத்தப்பட்ட தயிரானது வகைக்கு ஏற்றபடி அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு பின் அதனுடன் உப்பு சேர்க்கப்படுகிறது. இதனால் சீஸானது கெட்டுபோகாமல் இருப்பதுடன் சுவையும் கிடைக்கிறது. பின் சீஸைச் சுற்றிலும் உறையிடப்படுகிறது.

முதிர வைத்தல்

முதிர வைத்தல்
முதிர வைத்தல்

 

முதிர வைக்கும் முறையில் முதிர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை குறிப்பிட்ட அளவில் வைக்கப்பட்டு சீஸானது முதிரவைக்கப்படுகிறது.

பாலாடைக்கட்டியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

பாலாடைக்கட்டின் வகையைப் பொறுத்து அதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவானது வேறுபடுகிறது. இங்கு பொதுவாக சீஸில் காணப்படும் ஊட்டச்சத்துக்களின் அளவு குறிப்பிடப்படுகிறது.

இதில் விட்டமின் ஏ, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்), பி9(ஃபோலேட்டுகள்), பி12(கோபாலமைன்), இ, கே ஆகியவை காணப்படுகின்றன.

இதில் தாதுஉப்புக்களான கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம், துத்தநாகம், செம்புச்சத்து, செலீனியம் ஆகியவை காணப்படுகின்றன.

மேலும் இதில் புரதச்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து, நீர்ச்சத்து ஆகியவையும் உள்ளன.

பாலாடைக்கட்டியின் மருத்துவ பண்புகள்

எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த

பாலாடைக்கட்டியானது அதிகளவு கால்சியத்தைக் கொண்டுள்ளது. அத்துடன் விட்டமின் பி தொகுப்பும் காணப்படுகிறது. விட்டமின் பி தொகுப்பு உடலானது கால்சியத்தை உறிஞ்ச ஊக்குவிக்கிறது.

எனவே சிறுவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என எல்லோரும் இதனை உண்டு எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

லாக்டோஸ் ஒவ்வாமையால் பாலினை அருந்த முடியாதவர்கள் பாலாடைக்கட்டியை உண்டு கால்சியத்தைப் பெறலாம்.

பற்களின் பராமரிப்பிற்கு

பாலாடைக்கட்டியானது அதிகளவு கால்சியத்தையும், பாஸ்பரஸையும் கொண்டுள்ளது. இவை இரண்டும் பற்களின் பராமரிப்பிற்கு மிகவும் அவசியமானவை ஆகும்.

மேலும் பாலாடைக்கட்டியானது பல்லின் மேற்புறத்தில் பி.எச் அளவினை அதிகரித்து பற்சிதைவிலிருந்து பற்களைப் பாதுகாக்கிறது.

பாலாடைக்கட்டியில் லாக்டோஸின் அளவு குறைவாக உள்ளதால் பற்குழிகளில் இருந்து பாதுகாக்கிறது. எனவே பாலாடைக்கட்டியை உண்டு பற்களைப் பராமரிக்கலாம்.

இதய நலத்திற்கு

பாலாடைக்கட்டியில் உள்ள கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை இதய நலத்தினை பாதுகாக்கின்றன.

பாலாடைக்கட்டியில் உள்ள கேசின் புரதத்தைச் செரிப்பதால் உண்டாகும் பெப்டைடுகள் இதயநலத்தைப் பாதுகாக்கின்றது.

ஆனாலும் பாலாடைக்கட்டியில் உள்ள அதிகளவு கொழுப்பு மற்றும் உப்பு இதயநலத்திற்கு எதிரானவை. எனவே குறைந்த கொழுப்பு மற்றும் உப்பு கொண்ட பாலாடைக்கட்டியை உணவில் சேர்த்துக் கொள்வது இதயநலத்தைப் பாதுகாக்கும்.

உடல் எடையை அதிகரிக்க

பாலாடைக்கட்டியானது உடல் எடையை அதிகரிக்க கூடிய உணவுகளுள் ஒன்றாகும். இதில் புரதம், கொழுப்பு, கால்சியம், விட்டமின்கள், தாதுஉப்புகள் ஆகியவை உள்ளன.

இதனை உண்ணும் போது உடலின் தசைகள், எலும்புகள் வளர்ச்சி அதிகரிப்பதோடு, சீரான வளர்ச்சிதை மாற்றமும் ஏற்படுகிறது. எனவே உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் பாலாடைக்கட்டியை உண்ணலாம்.

ஆஸ்டியோபோரோஸிஸ் குறைபாட்டினைப் போக்க

ஆஸ்டியோபோரோஸிஸ் என்பது எலும்புப்புரை நோயாகும். இந்நோயால் எலும்பின் அடர்த்தியானது குறைந்து எளிதில் உடைகிறது.

இது கால்சியத்தை உடல் முறையாக உறிஞ்சாததால் உண்டாகிறது. இது வயதான பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளிடம் காணப்படுகிறது.

பாலாடைக்கட்டியானது அதிகளவு கால்சியம் மற்றும் கால்சியத்தை உடல் உறிஞ்சச் செய்யும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. எனவே பாலாடைக்கட்டியை உண்டு ஆஸ்டியோபோரோஸிஸ் குறைபாட்டினைப் போக்கலாம்.

புற்றுநோயைத் தடுக்க

பாலாடைக்கட்டியில் உள்ள லினோலிக் அமிலம் மற்றும் ஸ்பிங்கோலிப்பிடுகள் ஆன்டிஆக்ஸிஜென்டுகளாகச் செயல்பட்டு புற்றுநோய் வருவதைத் தடைசெய்கின்றன.

மேலும் இதில் உள்ள விட்டமின் பி தொகுப்பானது உடல் வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெற உதவுகிறது. எனவே பாலாடைக்கட்டியை உண்டு புற்றுநோயைத் தடுக்கலாம்.

ஆழ்ந்த தூக்கத்திற்கு

பாலாடைக்கட்டியானது ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகை செய்கிறது. இன்சோமினா என்ற தூக்கமின்மைக்கு இது சிறந்த நிவாரணம் ஆகும்.

சீஸில் உள்ள டிரிப்டோபன் அமினோ அமிலமானது மனஅழுத்தத்தைக் குறைத்து ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகை செய்கிறது.

பாலாடைக்கட்டியைப் பற்றிய எச்சரிக்கை

பாலாடைக்கட்டியானது அதிக கொழுப்பையும், உப்பையும் கொண்டுள்ளதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், குண்டானவர்கள் இதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

பாலாடைக்கட்டியானது அப்படியோவோ, வேறு பொருட்களுடன் சேர்த்தோ உண்ணப்படுகிறது. இதனை நன்கு உறையிட்டு குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.

அளவோடு உண்டால் அமிர்தமாகும் பாலாடைக்கட்டியை அளவோடு உண்டு வளமான வாழ்வு வாழ்வோம்.

வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.