அழகான கை!

பூவாயி பாட்டி அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து, இரவில் ஊற வைத்த பருத்தி கொட்டைகளை எடுத்து ஆட்டு உரலில் நன்றாக ஆட்டி, அதிலிருந்து பாலை எடுத்து பிழிந்து வெல்லம், சுக்கு, ஏலக்காய், பச்சரிசி, தேங்காய் பூ போன்ற பொருட்களை சேர்த்து பருத்திப்பால் காய்ச்சும் போது வீடே மணக்கும்.

பருத்தி பால் காய்ச்சி, அதனை தலையில் சுமந்து கொண்டு விற்பனைக்கு செல்வார் பூவாயி பாட்டி.

கணவன் இருக்கும் போதும், இருந்தும் கணவன் இல்லாமல் போன பிறகும் கைத்தொழில் இது ஒன்றே அந்த பாட்டிக்கு.

தெருத்தெருவாக சென்று,

“எனக்கு ஒரு டம்ளர் கொடுங்கம்மா”

“எனக்கு மூன்று டம்ளர் கொடுங்கம்மா”

“எனக்கு இரண்டு டம்ளர் கொடுங்கம்மா”

“இருங்கம்மா இருங்கம்மா”

“எல்லாருக்கும் தாரேன். நிறைய இருக்குமா”

“இந்தாங்கம்மா ஒரு டம்ளர் பத்து ரூபா”

“ரெண்டு டம்ளருக்கு 20 ரூபா” என்று பருத்திபாலை அருமையாக விற்பனை செய்து கொண்டிருந்தார்.

வழக்கம்போல அந்த குழந்தையும் ஒரு டம்ளரை எடுத்துக் கொண்டு அந்த பாட்டியிடம் கொண்டு வந்தது.

பாட்டியும் புன்முறுவலோடு இன்முகத்தோடு அந்த குழந்தையை “வாமா! வா கண்ணு!” என்று அன்போடு அழைத்து அவளுக்கு ஒரு டம்ளர் தழும்ப தழும்ப பருத்தி பாலை ஊற்றி கொடுத்தார்.

அந்தக் குழந்தையை பார்க்கும் போதெல்லாம் பாட்டின் கண்கள் கண்ணீர் குளங்கள் ஆகிப்போகும். ஏனென்றால் அந்த குழந்தை தகப்பன் இல்லாமல் தாயின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வந்து கொண்டிருந்தது.

போன மாதம் அந்த குழந்தையின் தாயும் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டதால், இப்பொழுது அந்த குழந்தை அவளுடைய பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

‘அந்த பாட்டிக்குப் பிறகு அந்த குழந்தையின் நிலை என்ன ஆகுமோ?’ என்று கவலைப்படுவார் பருத்திப்பால் பாட்டி.

அவளுடைய தாய் இருக்கும் போதெல்லாம் பணம் கொடுத்துத்தான் பாட்டியிடம் பருத்திப்பால் வாங்குவாள்.

இப்பொழுது அவள் தாய் இறந்து விட்டதால் அவளுக்கு காசு வாங்காமல் பருத்திப்பாலை பாட்டி தினந்தோறும் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்,

மற்ற குழந்தைகளை பார்த்து இந்த தாய் இல்லாத குழந்தை ஏங்கி விடக்கூடாது என்பதற்காக.

ஒரு பெண்ணின் கை அழகான தங்க வளையலையும், வைர மோதிரத்தையும் அணிந்தால் அழகாக இருக்குமா? என்றால் அது அழகு கிடையாது!

வறுமையில் இருக்கிற ஒருவருக்கு கொடுக்கும்போது தான் ஒருவருடைய கை அழகாக இருக்கும்!

அழகான கைகளை உடையவள் அந்த பருத்திப்பால் பாட்டி.

பெ.சிவக்குமார்
பி.எட் (வேதியியல்) முதலாம் ஆண்டு
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்
Cell- 9361723667
sivakumarpandi049@gmail.com