மதுரையைச் சுற்றி யானைமலை, அரிட்டாபட்டி, கீழக்குயில் குடி, கீழவளவு, குரண்டி மலை, சமணர் மலை, நாகமலை மற்றும் அழகர் மலை ஆகிய எட்டு குன்றுகள் உள்ளன. இவை எண்குன்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இவை எண்குன்றங்கள் என்று குழுவாக அழைக்கப்படுவதற்கு காரணம் இங்கு அமைந்துள்ள சமணப் படுகைகளும் கல்வெட்டுக்களும் சமண சிற்பங்களும் வரலாற்று தொன்மங்களுமே ஆகும்.
எண்குன்றங்களில் ஒன்றான அரிட்டாபட்டி மதுரையின் வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சமணம் மதுரை மண்ணில் சிறப்பாக இருந்த காலகட்டத்தில் சமண தீர்த்தங்காரர்களில் ஒருவருக்கு ‘அரிட்ட நேமி’ என்று பெயர் இருந்ததனால் ‘அரிட்டாபட்டி’ என்று பெயர் வந்ததாக அறியப்படுகிறது.
எண்குன்றங்களில் மற்ற குன்றுகளைவிட இந்த அரிட்டாபட்டியின் சிறப்பு என்னவென்றால், 2300 வருடங்களுக்கு முந்தைய தமிழ் கல்வெட்டுகள், குடவரைக் கோயில், ஏழாம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டுகள், வட்ட எழுத்துக்கள் மற்றும் சமண சிற்பங்கள் என தமிழ் வரலாற்றின் அனைத்து தடங்களையும் இந்த அரிட்டாபட்டியின் குன்று பிரதிபலிக்கிறது.
இந்த அழகிய குன்று தன் மேல் பிரம்மாண்ட பாறைகளை கட்டுப்படுத்தி நிற்பது போன்ற அழகியல் கொண்டது. குன்றின் தென்புறமாக அழகான ஒரு நீர்நிலையும் வயல்வெளிகளும் தோப்புகளும் உள்ளன.
குன்றின் மீதுள்ள குடவரைக் கோயில் முற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் சிற்ப கலைக்கு சான்றாக விளங்குவதாக வரலாற்று அறிஞர்கள் பதிவு செய்திருக்கின்றார்கள்.
இங்கு உள்ள மண்டபம் இடைச்சி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. மலையின் வலப்புறம் மேலே ஐந்து பேர் படுக்கை இடவசதியிலான சமணர் படுக்கை உள்ளது. இதை இந்த பகுதி மக்கள் ‘பஞ்சபாண்டவர் படுக்கை‘ என்றே அழைக்கின்றனர்.
படுக்கைக்கு மேலே உள்ள பாறையின் நெற்றியில் அழகிய மகாவீரர் சிற்பம் ஒன்று உள்ளது. அந்த மகாவீரர் சிற்பத்தின் கீழ் தினந்தோறும் அந்தப் பகுதியில் குடியிருக்கும் மக்களால் வழிபாடு நடத்தப்படுகிறது.
இந்த பகுதியில் உள்ள கல்வெட்டுகளில் ‘நெல்வேலி கிழவன் அதினன் வெளியன்‘ என்பவன் இப்பள்ளியை உருவாக்கியதாக கூறப்பட்டுள்ளது.
இக்குகையின் வலப்புறத்தில் பாறையில் மகாவீரர் சிற்பமும், சிற்பத்தின் கீழ் வட்டெழுத்துக் கல்வெட்டும் உள்ளது.
இந்த வட்டெழுத்துக் கல்வெட்டின் மூலம் மகாவீரர் சிற்பத்தை உருவாக்கியவர் ‘அச்சணந்தி‘ என்பதும், அருகில் உள்ள ஊரின் பெயர் பாதிரிகுடி என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
கி.மு.3-ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி 17-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆதாரங்கள் அரிட்டாபட்டியில் சமணம் மற்றும் சைவம் செழித்து இருந்ததையே காட்டுகின்றன.
1971-ல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் ‘நெல்வெலி செழியன் அதினன் ஒலியன் கொடுப்பித்த நல்முலாகை‘ (திருநெல்வேலியைச் சேர்ந்த செழியன் அதினன் ஒலியன் கொடுப்பித்த குகை) என்றும், 2004-ல் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் ‘இலஞ்சி இளம்பேராதன் கொடுப்பித்த நல்முலாகை‘ (இலஞ்சியைச் சேர்ந்த இளம்பேராதன் கொடுப்பித்த நல்முலாகை) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு கல்வெட்டுக்களுமே இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
இவை இரண்டுமே அரிட்டாபட்டியில் உள்ள குகைகள், சமணர் படுக்கைகள் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளன என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம்.
அரிட்டாபட்டி மலையிலுள் மற்றொரு சிறப்பு ‘ஊற்று நீர்ப்பாசனம்‘. இம்மலையின் சுனைகளில் வரும் நீரை அணைகட்டிச் சேமித்து அவ்வூர் மக்கள் விவசாயத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள்.
இந்த குன்றின் சூழலில் அரிய வகை பறவை இனங்கள் நிரம்பியுள்ளன. இந்தப் பல்லுயிர் வாழ்வியல் சூழியலில் தனித்தன்மையான பூச்சி இனங்களும், ஊர்வன, தேவாங்கு, பட்டாம் பூச்சிகள் என பல்வேறு உயிரினங்கள் இயற்கையாகவே தங்களது வாழ்விடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளன.
இதை கருத்தில் கொண்டு கடந்த 2022 நவம்பர் மாதம் தமிழக அரசு அரிட்டாபட்டியை ‘பல்லுயிர் பாரம்பரிய பகுதி’யாக அறிவித்துள்ளது.
இந்த அங்கீகாரத்தின் மூலம் அரிட்டாபட்டி தமிழக வரலாற்றின் பாரம்பரியமான இடமாகவும் பல்லுயிரிகள் பாதுகாக்கும் இடமாகவும் விளங்குகிறது.
தகவல் உதவி: மதுரையில் சமணம் (புத்தகம்) – சொ.சாந்தலிங்கம்
முனைவர் ஜி.சத்தியபாலன்
மாநில செயற்குழு உறுப்பினர்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
9443040082
மறுமொழி இடவும்