உள்ளம் முழுக்க உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பவானி கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள்.
சுவர்க் கடிகாரத்தின் ஒலி மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.
‘எப்போது சாப்பிட்டு முடிப்பார்? பேச்சைத் துவங்கலாம்’ என பவானி பரபரப்புடன் காத்துக் கொண்டிருந்தாள். மகன்கள் இருவரும் வெளியே சென்றிருந்தனர்.
பெரிய பெண் சாந்தி பூஜையறையில் மறுநாள் வெள்ளிக்கிழமை பூஜைக்காகத் தயார்படுத்திக் கொண்டிருக்க, சாந்தியின் தங்கை தீபிகா டி.வி. முன் அமர்ந்து அழகுக் குறிப்புகளை வழங்கிக் கொண்டிருந்த அப்பெண்ணின் அலங்காரத்தை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
சாந்தி, தீபிகா இருவருமே, பவானி-ராமசேஷன் தம்பதிகளின் பெண்கள். சாந்திக்கு இருபத்து நான்கு வயது. தீபிகாவுக்கு இரண்டு வயது குறைவு. மகன்கள் இருவருமே இவர்களுக்கு அண்ணன்கள். பணிபுரிபவர்கள்.
யாருக்கும் திருமணம் ஆகவில்லை. தங்கைகள் திருமணத்தை முடித்தபின் தான் அவர்கள் திருமணத்தைப் பற்றிப் பேசலாம் எனக் கூறி இருப்பவர்கள்.
சாப்பிடும்போது பேசுவது ராமசேஷனுக்குப் பிடிக்காத ஒன்று. எனவே அவர் சாப்பிட உட்கார்ந்து விட்டால் அவர் குணமறிந்து எவரும் அவரிடம் பேச முன்வரமாட்டார்கள்.
ராமசேஷன் சாப்பிட்டு முடித்த பின், பவானியும் கூடவே அவரை பின் தொடர்ந்தாள். தொண்டையை மெல்ல கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“சக்ரவர்த்தி வந்திருந்தான். அவன் அக்கா பிள்ளை ஜாதகம் சாந்தி ஜாதகத்தோடு நன்னாப் பொருந்திருக்காம்…”
“ஆமாண்டி… இவனும் வந்து பார்த்துட்டு, ரெண்டாவது பெண்ணைக் கட்டிக்கிறேன்னு சொல்லட்டும். பேசாம தீபிகா கல்யாணத்தை முடிச்சுடலாமான்னு கூடத் தோண்றது”
“என்ன நீங்க? இந்த குதர்க்கப் பேச்சை என்னிக்கு விடறேளோ அன்னிக்குத்தான் எல்லாமே ஒழுங்கா நடக்கும். கல்யாணம்னா அப்படித்தான். உடனே அமைஞ்சிடுமா? மூத்த பெண் இருக்குறச்சே ரெண்டாவது பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணினா ஊர், உலகம் என்ன நினைக்கும்? சாந்தி வாழ்க்கை என்ன ஆகும்?”
“ஆமாம் பேருதான் சாந்தி. நான் போய்ச் சேர்ந்தும் என் ஆத்மா சாந்தி அடையப் போறதில்லை. என்னிக்கு இவ கல்யாணம் நடக்கப் போகிறது?”
“நல்ல காரியம் பேசறச்சே ஏன் இப்படி அபசகுனமாய் பேசறேள்? ரெண்டு பெண்ணுமே உசத்திதான் நமக்கு. சாந்திக்கு ஏத்த மாதிரிதான் பாருங்களேன்.”
“எல்லாம் பார்த்து அலுத்து சலித்துப் போய்த்தான் சொல்றேன். பி.ஏ. படிச்சிருக்காளேன்னு அவளுக்குச் சமமாய் படித்தவனைப் பார்த்தால் நிறம் கம்மி. வேலைக்குப் போனா பரவாயில்லைன்னு சொல்றான்.
கொஞ்சம் கீழே இறங்கி ஓரளவு படிச்சவனாய்ப் பார்த்தா, அவ ஜாஸ்தி படிச்சிருக்கா, படிச்ச பெண்ணு வேண்டாங்கிறான்.
கொஞ்சம் நாகரீகமா, காலத்திற்கேற்றாற் போல் இருக்கப் பாருடின்னா, அதையும் கேட்க மாட்டேங்கிறா, சுத்த கர்நாடகமா இருக்கா. என்னை என்ன செய்யச் சொல்றே?”
“ரொம்ப அழகுதான் போங்கோ. இதுக்குத்தான் தீபிகாவை மேலே படிக்க வைக்காதீங்கோன்னு அடிச்சுண்டேன். வீம்புக்கு அவளை எம்.ஏ. வரைக்கும் படிக்க வச்சேள். வர்றவங்கெல்லாம் அவளைத்தான் விரும்புறா.
நான் என்ன சொல்ல வரேன்னா, சக்கரவர்த்தியோட அக்கா பிள்ளை சமஸ்கிருதத்தில் பி.ஏ. படிச்சிருக்கான். நல்ல பிள்ளை. வேலையில்லாட்டாலும் வசதியான குடும்பம்.
தெய்வ நம்பிக்கை, ஆஜாரம்லாம் ஜாஸ்தி. சாந்தியை அவனுக்கு நிச்சயம் பிடிக்கும். சாந்தியைக் கை பிடிச்ச வேளை அவனுக்கும் வேலை கிடைக்கலாம். என்ன சொல்றேள்?”
“ஆமாண்டி, பெரிய அதிருஷ்ட தேவதை இவ! இவ அதிர்ஷ்டம்தான் கொடி கட்டிப் பறக்கிறதே.”
பவானியும் ராமசேஷனும் இப்படி ஒருவருக்கொருவர் வாதாடிக் கொண்டிருக்கையில், ராமசேஷனின் நண்பர் கேட் அருகே நின்று குரல் கொடுத்தார்.
எழுந்து வாசலுக்குச் சென்ற ராமசேஷன் “வாப்பா” என அவரை உள்ளே அழைத்துச் சென்றார்.
“ராமா! ஓரு சந்தோஷமான சமாச்சாரம். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். இந்த ஜாதகத்தைப் பாரு. பையன் ஸ்டேட்ஸ்ல இருக்கான். பெரிய டாக்டர்.
அவனது அக்கா ஜாதகம் இன்னொன்னு. நம்ம பட்டாபிக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும். அவளும் படிச்சிருக்கா. வேலைக்கும் போறா. பேரு பத்மினி. சித்தூர் ராணி போல கொள்ளை அழகு.
பெண் கொடுத்து பெண் எடுக்க ஆசைப்படறா. சாந்தியைக் கொடுத்து, பத்மினியை வரவழைத்துக் கொள்ளேன். உன் மூத்த பிள்ளை பட்டாபிக்கும் வயசாயிண்டே போறது.
மூத்த பிள்ளைக்கும், மூத்த பெண்ணுக்கும் ஒரே சமயத்துல கல்யாணத்தை முடிச்சுடலாமா? என்ன நான் சொல்றது?”
“எல்லாம் சரிதானப்பா. பத்மினி வேணும்னா இங்கு வரலாம். ஆனா சாந்தியை அந்த டாக்டருக்குப் பிடிக்கணுமே! இன்னொரு பெண் எம்.ஏ. படிச்சவ இருக்கான்னு தெரிஞ்சா, சாந்தியைப் பார்க்க வந்த கண் தீபிகாவைப் பார்க்க ஆரம்பிச்சுடுமே.”
“நீயே ஏம்ப்பா முடிவு பண்றே? முதல்ல பெண்ணைப் பார்க்க ஏற்பாடு செய்வோம். மற்றதைப் பிறகு பேசிக்கலாம்.”
அப்பாவின் மனநிலையும், தயக்கமும் சாந்திக்கு நன்றாகவே புரிந்தது. பூஜையறையிலிருந்தவாறே அம்மாவை சைகை மூலம் அழைத்தாள். அம்மா காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.
அவள் சொன்னதைக் கேட்டுத் திடுக்கிட்ட பவானி, கணவனிடம் வந்து விஷயத்தை மெதுவாகக் கூற, ராமசேஷன் விழுந்தடித்துக் கொண்டு சாந்தியிடம் ஓடினார்.
“என்னடீ சொல்றே நீ? கல்யாணமே வேண்டாமா? எங்களையெல்லாம் ஒரேயடியா சாகடிச்சிடலாம்னு பார்க்கிறாயா?
மூத்தவ நீ இருக்கிறப்போ, இளையவளுக்கு பார்க்கச் சொல்றியே எவன்டி மனசார சம்மதிப்பான்? மூத்த பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணாம ரெண்டாவது பெண்ணுக்குப் பார்க்கிறாங்களே, என்னவோ விஷயமிருக்குன்னு தாறுமாறா நினைக்க மாட்டானா?
அவளால உனக்குக் கல்யாணமாகாம இருந்தது போய், இப்போ உன்னால அவளுக்கும் கல்யாணமாகாம இருக்கத்தான் இப்படி பேசறியா?” – எகிறிக் குதித்து கொண்டிருந்தார் ராமசேஷன்.
விஷயத்தைப் பவானி மூலம் அறிந்த ராமசேஷனின் நண்பர், அவர்களைச் சாந்தப்படுத்தி, பக்குவமாக சாந்தியிடம் விவரங்களை எடுத்துரைத்து, சமாதானப்படுத்தி அங்கிருந்து கிளம்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.
எவ்வித சுவாரசியமுமின்றி அரை மனதுடன் சாந்தி ஒப்புக்கொண்ட பின் பெண் பார்க்கும் படலம் ஏற்பாடாகியது.
டாக்டர் பையனும், அவனது அக்காவும் பெற்றோர்களுடன் ஒருநாள் காரில் வந்து இறங்கினார்கள்.
ராமஷேசன் இல்லம் அமர்க்களப்பட்டது. பவானி வேண்டிக் கொள்ளாத தெய்வங்கள் இல்லை. பரஸ்பரம் அறிமுகத்திற்குப்பின், சாந்தி அழைத்து வரப்பட்டாள். கூடவே தீபிகாவும் இருந்தாள்.
சாந்தி ஒற்றைப் பின்னலுடன், தலைநிறைய பூ வைத்து, நெற்றியில் அளவான மஞ்சள்-குங்குமத்துடன், கைகளில் மருதாணியிட்டுக் கொண்டு, மூக்கில் வைர மூக்குத்தியும், காதுகளில் வைரத் தோடுகளும் டாலடிக்க, பட்டுப்புடவையுடன் தெய்வீகக்களை சொட்ட, கொலுசுகள் சப்திக்க வந்து பையன் முன் தலைகுனிந்து நின்றாள்.
நமஸ்கரித்தாள். தேன்மதுரக் குரலில் முருகன் மேல் ஒரு பாடலைப் பாடினாள்.
டாக்டர் பையன் கண்கள் சாந்தியைப் பார்த்தாலும், தீபிகாவையும் கவனிக்கத் தவறவில்லை.
பாப் செய்யப்பட்டிருந்த கூந்தல். காதுகளில் தோடுகளுக்குப் பதிலாக தங்கத்திலான வளையங்கள், மூளியாய்க் கழுத்து. திலகமற்ற நெற்றி. மிதமான லிப்ஸ்டிக் தடவிய உதடு. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட். லோஹிப் தெரிய மெல்லிய சாரி. மொத்தத்தில் நம் கலாச்சாரத்தோடு மல்லுக்கு நிற்கும் மங்கையாய் காட்சியளித்தாள்.
பையன் ஸ்டேட்ஸ்வாசி. இவனும் தீபிகாவைத்தான் விரும்பப் போகிறான். பவானியும் ராமசேஷனும் முடிவுக்கே வந்து விட்டார்கள்.
சம்பிராதய நிகழ்ச்சிகள் முடிந்ததும் டாக்டர் பையன் திருப்தியடைந்தவனாகத் தன் சம்மதத்தைப் பெற்றோர் மூலமாய் தெரிவித்தான்.
எல்லோருக்கும் கொள்ளை மகிழ்ச்சி. சாந்தி செய்த பூஜைகள் வீண் போகவில்லை. தான் வேண்டிக் கொண்ட தெய்வங்கள் கைவிடவில்லை. பவானியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். ராமசேஷன் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
அடுத்து, பையன் வீட்டார் ராமசேஷனின் மூத்த மகன் பட்டாபியிடம் அவர்களது பெண்ணைப் பிடித்திருக்கிறதா என்று கேட்க, ராமசேஷன்,
“அவனிடம் என்ன கேள்வி? உங்க பெண்ணுக்கு என்ன குறைச்சல்? உங்க பையன் எங்க மாப்பிள்ளையாகச் சம்மதிச்ச பிறகு, என் மகன்தான் உங்க மாப்பிள்ளை” என்று கூற,
“அப்படியில்லை… என்னதான் இருந்தாலும், பையனிடமும் கேட்கணுமில்லையா? என்ன மிஸ்டர் பட்டாபிராமன், உங்களுக்கு என் அக்காவைப் பிடிச்சிருக்கா?” – டாக்டர் பையன் கேட்டான்.
முதலில் சற்று தயங்கிய பட்டாபி ராமன், பிறகு அமைதியாக அழுத்தமாகச் சொன்னான்.
“ஐயாம் சாரி. தப்பா நினைச்சுக்காதீங்க. மனப்பூர்வமாய் சொல்றேன். உங்க அக்கா எம்.காம். வரைப் படிச்சு, பாங்ல ஆபீசரா இருக்காங்க.
நானோ வெறும் பி.எஸ்.ஸி., தான். வேலையும் சாதாரண கிளார்க்தான். அதனால இந்த வரன் எனக்குச் சரிபட்டு வராதுங்கிறது என் அபிப்ராயம்.
என் தகுதிக்கேற்ற மாதிரி, இல்லேன்னா இன்னும் குறைச்சலாப் படிச்ச, வீட்டு வேலைகளில் எங்கம்மாவுக்கு ஒத்தாசையா இருக்கிற பெண்ணாய்த்தான் விரும்பறேன். உங்க அக்காவுக்கு நீங்க வேறு இடம் பார்க்கிறதுதான் நல்லது.”
பட்டாபி இப்படிச் சொன்னதும் ராமசேஷன் கொதிந்தெழுந்தார்.
“டேய், என்னடா சொன்னே? உன் தங்கை வாழ்க்கையை நீயே அழிக்கப் போறியா? பெண் கொடுத்து பெண் எடுக்கலாம்னு தானே இவங்க ஆவலோடு வந்திருக்காங்க. காரியத்தைக் கெடுத்துட்டியேடா பாவி.”
டாக்டர் பையன் ராமசேஷனை அமைதிப்படுத்தினான்.
“சார் அமைதியாய் இருங்க. என்ன நடந்துடுத்து இப்போ? உங்க பெண் கல்யாணம் நின்னுடுமேங்கிற கவலை தானே உங்களுக்கு?
நிச்சயம் நிற்காது சார். ‘விருப்பம்’-ங்கிறது இயற்கையாய், யதார்த்தமாய், ஆத்மார்த்தமாய் வரணும். ஒன்றைக் கொடுத்துத்தான் மற்றொன்றைப் பெறணும்ங்கிற பழக்கம் முதலில் ஒழியணும் சார்.
உங்க பெண்ணைப் பற்றி விவரங்களைச் சொன்னீங்க. நாகரீகம் போதாது. சுத்த கர்நாடகமா இருப்பானீங்க. நாகரீகம்-னு நீங்க எதைச் சொல்றீங்க? மாடர்ன் டிரெஸ்ஸையும், கவர்ச்சியையுமா?
ஸ்டேட்ஸ்ல இருக்கிற எனக்கு அந்நாட்டுப் பண்பாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள் எல்லாம் பிடிக்காமல்தான் இப்போ இங்கே வந்து உங்க பெண்ணைக் கேட்கிறேன்.
பெரிய படிப்பு படிச்சிட்டோம்கிறதுக்காக நம் படிப்புக்குச் சமமாய்? அதே அந்தஸ்தோடத்தான் வாழ்க்கைத்துணையும் அமையணுன்னு கட்டாயமா என்ன?
எல்லா எதிர்பார்ப்புகளையும் நாமே உருவாக்கிக் கொள்கிறோமே தவிர, நமக்குன்னு ஓர் எல்லையை வகுத்துக்கிறதில்லை…”
எல்லோரும் அவன் பேசுவதையே மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். டாக்டர் பையன் தொடர்ந்தான்.
“உங்க பையன் சொன்னது தான் ஆத்மார்த்தமான எண்ணம். அதை மதிக்காமல், கட்டாயப்படுத்தினால் நஷ்டம் உங்க பையனுக்கும், என் அக்காவுக்கும்தான். ரெண்டு பேருக்குமே வாழ்கையில் அமைதியும், நிம்மதியும் இருக்காது.
சினிமாவும் பார்க்கிறோம். பொழுது போகுது. ஆனந்தமாக இருக்கு. கவலைகளைத் தற்காலிகமாய் மறந்து சிரிக்கிறோம்.
அதேசமயம், கோயிலுக்குப்போய் இறைவனைத் தரிசிப்பதில் கிடைக்கும் சுகம், மனநிம்மதி, அமைதி, திருப்தி, மனத்தூய்மை மகத்தானது இல்லையா?
பெண்ணானவள் அந்த தெய்வீக அம்சங்களைக் கொண்டவள். உடலை மறைத்து, அணிகலன்கள் அணிந்து, நெற்றித் திலகமிட்டு, நற்குணங்களும், செய்கைகளும், இறை பக்தியும் அமைந்து காணப்படும்போது தான் தெய்வீகம் அவளை ஆட்கொள்கிறது.
உங்கள் மூத்த பெண் சாந்தியிடம் நான் சொல்கிற எல்லாமே இருக்கு. அவளை மனப்பூர்வமாய் ஏத்துக்கறேன். நடக்க வேண்டியதைப் பாருங்க.”
அடுத்த ஒருசில வாரங்களில், பட்டுப்புடவையுடன், தலைநிறை பூவும், காதுகளில் வைரத் தோடுகளும், மூக்கில் வைர மூக்குத்தியும், நெற்றியில் மஞ்சள் குங்குமம் திலகமாகவும் திகழ்ந்து, கைகளில் வளையல்களும், கால்களில் கொலுசுகளும் ஒலி எழுப்ப, விரல்களிலும், உள்ளங்கைகளிலும் மருதாணி சிவப்பேறியிருக்க தொடர்ந்து பூமாலையும் சாந்தியின் கழுத்தில் விழுந்தது.
தாலியும் ஏறியது. டாக்டர் பையன் சாந்தியின் கால் விரல்களில் அணிவித்த மெட்டி அவளது அழகுக்கு அழகு சேர்த்தது.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!