அவசரம் – எம்.மனோஜ் குமார்

சுந்தரியை பெண் பார்க்கும் படலம் முடிந்து அவளிடம் தனியாகப் பேச மொட்டை மாடிக்கு போனான் ரகுவரன்.

“என்ன மொபைல் வெச்சிருக்கிற? நான் பார்க்கலாமா?” கேட்டான் ரகுவரன்.

சுந்தரி தனது கையிலிருந்த மொபைலை அவனிடம் வெட்கத்தோடு நீட்டினாள்.

ரகுவரன் மெசேஜ் பகுதிக்குச் சென்று பார்த்தான். இன்று காலையில் வந்த ஐந்து மெசேஜ்கள் மட்டுமே இருந்தன.

அங்கிருந்து சென்ட் பகுதிக்குச் சென்று பார்த்த போது அங்கு இரண்டு மெசேஜ்கள் அனுப்பப்பட்டிருந்தன. அதில் ஒன்றை விரித்து படித்தான்.

ஓரக்கண்ணால் பார்த்த சுந்தரிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“என் மேல சந்தேகப்படுறீங்களா? எனக்கு பாய் பிரண்டு கிட்டயிருந்து மெசேஜ் வந்திருக்கா; இல்ல நான் யாருக்காவது மெசேஜ் அனுப்பியிருக்கேனான்னு பார்க்கிறீங்களா?” கோபமாய்க் கேட்டாள் சுந்தரி.

“அய்யோ அப்பிடியெல்லாம் இல்ல! சில பேருக்கு மெசேஜ் வந்திருக்கும். அத உடனுக்குடன் கிளீயர் பண்ணமாட்டாங்க. ஆனா! நீ அப்பிடியில்ல! அப்பப்ப டெலிட் பண்ணி தேவையானத மட்டும் வெச்சிருக்க.

நாளைக்கு நீ என் மனைவியா வந்தா வீட்டையும் இது மாதிரி சுத்தமா வெச்சிருப்பேன்ன்னு தெரியுது.

நீ அனுப்பின மெசேஜ் படிச்சேன். How are you-ங்கிற வார்த்தைய சுருக்கி hw r u-ன்னு சிக்கனமா வார்த்தைய யூஸ் பண்ணி மெசேஜ் அனுப்பியிருக்கே. நீ ரொம்ப சிக்கனக்காரிங்கிறது தெரியுது. ஒரு குடும்ப பொண்ணுக்கு இது ரொம்ப முக்கியம் உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!”

ரகுவரன் சொல்லச் சொல்ல ‘அடடே முந்திரிக் கொட்டை மாதிரி அவசரப்பட்டுட்டேனே!’ என்று அசடு வழிந்தாள் சுந்தரி.

எம்.மனோஜ் குமார்