அன்புடையார் பிறர்க்கு – எம்.மனோஜ் குமார்

ஓடும் பேருந்தில் ஒருவன் ஏறினான். அவன் ரமேஷ் என்கிற பயணியிடம் பணப்பையைத் திருடினான்.

உடனே சுதாரித்து கொண்ட ரமேஷ், திருடனின் கன்னத்தில் அறை விட்டார். பேருந்து நடத்துனர் மற்றும் பயணிகள் அனைவரும் இதை கவனித்தார்கள்.

“சார் என்ன பிரச்சனை?” என்று ரமேஷிடம் கேட்டார்கள்.

“என் பர்சை திருடிட்டான்” ரமேஷ் பதிலளித்தார்.

“பக்கத்தில இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்ல பஸ்சை நிப்பாட்டி, இந்த திருடனை போலீஸ்ல பிடிச்சி கொடுப்போம்!” என அனைவரும் சொன்னார்கள்.

“அதெல்லாம் வேணாம். விட்டுடுங்க! இந்த திருடனை போலீஸ்ல பிடிச்சி கொடுத்தா, இன்னும் தப்பு மேல தப்பு பண்ணுவான். எதிர்காலத்தில ஒரு பெரிய குற்றவாளி ஆயிடுவான். நானே இவனை தனியா கவனிச்சிக்கிறேன்” ரமேஷ் சொன்னார்.

“அப்புறம் உங்க இஷ்டம்!” என்று அனைவரும் சொல்லி அந்த பிரச்சனையை அப்படியே விட்டு விட்டார்கள்.

பேருந்துலிருந்து இறங்கிய பிறகு, திருடனை தனியாக அழைத்து அவனிடம் ரமேஷ் “திருடுறது தப்பில்லையா! வெட்கமா இல்லை! ஏன் திருடுன? இந்த கேவலமான பொழப்பு உனக்கு தேவையா? முதல்ல உன் பெயர் என்ன? உன் ஊர் என்ன? என்ன படிச்சிருக்க அதை சொல்லு!” எண்று கேட்டார்.

“சார்! என் பேரு ராஜன். நான் இதே ஊரு தான். நான் பி.எஸ்.சி, எம்.சி.ஏ படிச்சிருக்கேன். எவ்வளவோ முயற்சி செய்தும் என் படிப்புக்கேத்த வேலை கிடைக்கல.

நாய் மாதிரி ஒவ்வொரு கம்பெனியா ஏறி, இறங்கி வேலை தேடி அலைஞ்சி நொந்தது தான் மிச்சம். சொந்தமா தொழில் செய்யக் கூடக் கையில காசு இல்லை.

அரசாங்க உத்தியோகத்துல சேரனும்னா, ஏதாவது கோச்சிங் சென்டர்ல சேர்ந்து, இதுக்காக கோச்சிங் எடுக்க பணம் செலவு செய்யணும்.

அரசாங்க வேலை கிடைச்சாகூட, வேலையில சேர பெரிய பெரிய பதவில இருக்கிறவங்களோட கையெழுத்து வாங்க, அவங்களுக்கு லஞ்சம் கொடுக்கணும்! அதனால் தான் வேற வழியில்லாம திருட்டுல இறங்கிட்டேன்” என்று ராஜன் பதிலளித்தான்.

“வேலை கிடைக்கலனா இப்படி தான் திருடுவியா? உன் மேல பஸ்ல எல்லாரும் கொலை வெறில இருந்தாங்க! அவங்களுக்கு இருந்த ஆத்திரத்துக்கு, உன்னை தர்ம அடி அடிச்சி, போலீஸ்ல புடிச்சி கொடுத்திருப்பாங்க! நல்ல வேலை, நான் தான் உன்னை காப்பாத்துனேன்” என்று ரமேஷ் ராஜனிடம் கூறினார்.

“வேலை கிடைக்கலனா என்ன? பிழைக்க ஆயிரம் வழி இருக்கு ஊருல! ஓலா, உபர் மாதிரி கம்பெனில கார் டிரைவர் இல்லனா, ஆட்டோ டிரைவர் வேலைக்கு சேர்ந்து சம்பாதி! ஸ்விக்கி, சொமட்டோ மாதிரி சாப்பாடு கம்பெனில டெலிவரி மேன் வேலை செஞ்சி பிழைக்கலாம்!

இல்லனா, சரவணா ஸ்டோர்ஸ், ஜெயச்சந்திரன் மாதிரி பெரிய பெரிய கடையில சேல்ஸ்மேனா வேலை செய்! இல்லனா, ஏதாவது ஒரு சின்ன கடையில வேலைக்கு சேர்ந்து வியாபாரம் செய்!

இல்லனா, வீட்டுலயே ட்யூஷன் சென்டர் நடத்தி, சின்ன பசங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்து சம்பாதி! இப்படி பிழைக்க அழகா ஆயிரம் வழி இருக்கு! அதை விட்டுட்டு கேவலமா திருடுற!” ரமேஷ், திருடன் ராஜனுக்கு அறிவுரை கூறினார்

“சாரி சார்! என்னை மன்னிச்சிடுங்க! எனக்கு உங்களை மாதிரி நல்ல புத்திமதி சொல்லி வழிகாட்டுறவங்க யாரும் இல்லை. கிடைச்சிருந்தா, நான் திருட்டுல இறங்கி இருக்க மாட்டேன்!” ராஜன் பதிலளித்தான்.

“உனக்கு என் கம்பெனில வேலை தரேன். மாசம் 15,000/- ரூபாய் சம்பளம். செய்வியா?” ரமேஷ் ராஜனிடம் கேட்டார்.

“நான் இவ்வளவு நேரம் பேசிகிட்டு இருந்தது, ஒரு பெரிய கம்பெனி முதலாளி கிட்டயா? உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல, கடவுள் மாதிரி வந்து என் வாழ்க்கையில விளக்கேத்தி வெச்சிடீங்க!” ஆச்சர்யத்தில் மெய்மறந்து பேசினான் ராஜன்.

“உனக்கு என் கம்பெனில வேலை கொடுத்தாச்சு! நாளைக்கே என் கம்பெனில வந்து வேலைக்கு சேரு!” என்றார் தொழிலதிபர் ரமேஷ்.

“ரொம்ப ரொம்ப நன்றி சார்!” ரமேஷுக்கு நன்றி கூறினான் ராஜன்.

அடுத்த நாள், ரமேஷின் நிறுவனத்தில், வேலைக்குச் சேர்ந்தான் ராஜன். அதன் பிறகு, நன்றாக உழைத்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்தான்.

எம்.மனோஜ் குமார்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.