அவல் மசாலா கொழுக்கட்டை அசத்தல் சுவையில் எல்லோருக்கும் பிடித்தமான சிற்றுண்டி ஆகும். இதனை பள்ளிவிட்டு வரும் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம்.
இதனுடைய புளிப்பு கலந்த காரச் சுவை எல்லோருக்கும் பிடித்ததாக உள்ளது. எளிமையாக செய்யக் கூடிய இதனை விருந்தினர்களின் வருகையின்போதும் செய்து கொடுக்கலாம்.
இனி சுவையான அவல் மசாலா கொழுக்கட்டை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அவல் – 1 கப் (சுமார் 100 கிராம் அளவு)
சின்ன வெங்காயம் – 6 எண்ணம்
கடலை பருப்பு - 1&1/2 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கீற்று
மிளகாய் வற்றல் – 2 எண்ணம்
நல்ல எண்ணெய் - 1 & 1/2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மசாலா தயார் செய்ய
நல்ல எண்ணெய் – 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)
தக்காளி – 1 எண்ணம் (பெரியது)
மிளகாய் வற்றல் பொடி – 1 ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 & 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கீற்று
கொத்தமல்லி இலை – 1 கொத்து
செய்முறை
சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக சதுரத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
தக்காளியை அலசி விழுதாக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.
மல்லி இலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாய் வற்றலை காம்பு நீக்கி பொடியாக பிய்த்துக் கொள்ளவும்.
முதலில் அவலை அலசிக் கொள்ளவும்.
பின்னர் அவல் முழுவதும் மூழ்குமாறு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற விடவும்.
10 நிமிடங்கள் கழித்து விரல்களுக்கு இடையே அவலை வைத்து நசுக்கினால் எளிதாக மசியும்.
பின்னர் அவலின் தண்ணீரை நன்கு வடித்து விடவும்.
பாதி அவலை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள அவலை அரைத்த அவலுடன் சேர்த்து, தேவையான உப்பைச் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதனுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்க்கவும்.
கடுகு வெடித்து பருப்புகள் நிறம் மாறத் தொடங்கியதும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்க்கவும்.
வெங்காயம் கண்ணாடிப் பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி அவலுடன் சேர்க்கவும்.
வெங்காயத்தை அவலுடன் சேர்த்து ஒருசேர பிசையவும்.
கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டு மாவினை சிறுசிறு உருண்டைகளாகத் திரட்டவும்.
இட்லித்தட்டில் ஈரத்துணியை விரித்தோ அல்லது எண்ணெய் தடவியோ திரட்டிய உருண்டைகளை ஐந்து நிமிடங்கள் வைத்து அவித்து எடுத்து லேசாக ஆற விடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்க்கவும்.
கடுகு வெடித்ததும் நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் அதனுடன் தக்காளி விழுது, மிளகாய் வற்றல், தேவையான உப்பு சேர்த்து கிளறவும்.
தக்காளி மற்றும் மிளகாய் வற்றல் பொடியின் பச்சை வாசனை நீங்கி தக்காளி வெங்காய கலவையிலிருந்து எண்ணெய் பிரிந்ததும் அதனுடன் அவித்து ஆறிய கொழுக்கட்டைகளைச் சேர்க்கவும்.
அடுப்பினை சிம்மில் வைத்து ஐந்து நிமிடங்கள் லேசாக கிளறி விடவும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி இலையைத் தூவி இறக்கவும்.
சுவையான அவல் மசாலா கொழுக்கட்டை தயார்.
குறிப்பு
இதனைத் தயார் செய்ய கெட்டியான அவலைப் பயன்படுத்தவும்.