ஆத்ம திருப்தி – சிறுகதை

‘ஹரே ராமா, ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா… கிருஷ்ண கிருஷ்ண… ஹரே ஹரே…’

உச்ச ஸ்தாயியில் பாடிவாறே அந்த பஜனை கோஷ்டி ஜம்புநாதன் பங்களாவை நெருங்கியபோது, வெளியே கிளம்பிக் கொண்டிருந்தவர் முகம் சுளித்தவாறு முணுமுணுத்தவாறே உள்ளே சென்று காம்பவுண்டு கேட்டை மூடி தாழ்போட்டுக் கொண்டார்.

“கை கால்கள் எல்லாம் ஒழுங்காத்தானே இருக்கு. உழைச்சுச் சாப்பிடாம கிளம்பிட்டானுங்க. இதே பிழைப்பாய் போச்சு இவங்களுக்கு…”

பஜனை கோஷ்டி காதுகளில் ஜம்புநாதனின் முணுமுணுப்பு விழாமல் இல்லை. புன்னகை மாறாமல் கோஷம் எழுப்பிக் கொண்டு அவருடைய பங்களாவை கடந்து சென்றது.

பஜனைக் கோஷ்டி சென்றவுடன் கேட்டைத் திறந்து வெளியே வந்தார். தெருக்கோடியில் அவரது மனைவி காமாட்சி கோயிலிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தாள்.

காரை ஸ்டார்ட் செய்து கொண்டிருக்கும் போது அருகில் வந்த காமாட்சி, “என்னங்க! அவங்களுக்கு ஏதாவது கொடுத்தீங்களா?” என்றதும் ஜம்புநாதன் கோபமுற்றார்.

“கண்டவங்களுக்கெல்லாம் வாரி வழங்கவா இப்படி ராவும் பகலும் உழைத்துச் சம்பாதிக்கிறேன்? போடி உள்ளே.”

காமாட்சியின் முகம் வாடியது. ‘இந்த மனிதர் மாறவே மாட்டாரா’ என உள்ளம் ஏங்கியது.

‘கார், பங்களா, நிலம் என்றெல்லாம் ஏகப்பட்ட வசதியிருக்கையில் தர்மம் செய்யவோ, இறைவனின் வழிபாட்டுக்கோ கொஞ்சம் செலவு செய்ய இப்படித் தயங்குகிறாரே…’ என அவள் மனம் வருந்தியது.

அன்று இரவு பதினோரு மணியளவில் பங்களா திரும்பிய ஜம்புநாதன் நேராக படுக்கையறை சென்று படுக்கையில் விழுந்ததும், பதறிப்போய் காமாட்சி அவர் அருகில் சென்று,

“என்னங்க சாப்பிடாம படுத்திட்டீங்க?.. வாங்க ஒருவாய் சாப்பிடுங்க. உங்களுக்காகத்தான் இவ்வளவு நேரம் சாப்பிடாம காத்துக்கிட்டிருக்கேன்” என்றதும்,

“எனக்கு பசியில்லை காமாட்சி. நீ போய் சாப்பிடு” என்றவர் சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டார்.

“இப்படி சிகரெட்டாய் ஊதித் தள்ளினால் எப்படிங்க பசியெடுக்கும்?”

“வேண்டாம்னா விடேன்”

காமாட்சியும் சாப்பிடவில்லை. சமையலறை விளக்கை அணைத்துவிட்டு வந்து படுத்துக் கொண்டாள். நடுநிசி காமாட்சி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

தாகமாக இருக்கவே ஹால் சென்று ஃபிரிஜ்ஜைத் திறந்து ஐஸ் வாட்டர் பாட்டிலை எடுத்துக் ‘கடகட’வென்று தண்ணீரைக் குடித்தவரின் பார்வை எதேச்சையாக ஹாலின் நடுவில் இருந்த பூஜையறைப் பக்கம் சென்றது.

பூஜையறையின் உள்ளே காமாட்சி விளக்கில் தீபச் சுடர் பிரகாசித்துக் கொண்டிருந்தது. சுவர் முழுக்க சுவாமிப் படங்கள் தசாங்கத்தின் நறுமணம் இன்னும் மறையாமல் ஹால் முழுக்கப் பரவியிருந்தது.

ஜம்புநாதனுக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது. காமாட்சியிடம் அவருக்கு பிடிக்காத அம்சம் என்னவென்றால் அவளது பக்தி உணர்வும், ஆன்மீக சிந்தனையும்தான்.

இரண்டு பிள்ளைகள், இரண்டு பெண்கள் அவர்களுக்கு. எல்லாருமே திருமணமானவர்கள். பெரியவன் துபாய் வேலை கிடைத்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டான்.

சிறியவன் பம்பாயில் மாமனார் வீட்டில் வீட்டோடு மாப்பிள்ளையாகி விட்டான். பெண்கள் இருவரும் டில்லி, கல்கத்தா என அவரவர் கணவர்களின் வேலை மாற்றத்தால் அங்கேயே தங்கிவிட்டார்கள். ஆக, ஜம்புநாதனும் காமாட்சியும் மட்டுமே அந்த பங்களாவில் வசித்து வந்தனர்.

நிலைமை இப்படியிருக்க, மென்மேலும் ஜம்புநாதன் பணம் பண்ணுவதிலேயே குறியாக இருந்தார். யாருக்காக இப்படிச் சேர்த்து வைக்கிறார் என்பது யாருக்குமே புரியவில்லை.

‘இல்லை’ என வருபவர்களுக்கும் கொடுக்காமல் எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் உதவாமல், ஆன்மீகத்திலும் நம்பிக்கை இல்லாமல் மொத்தத்தில் ஒரு விசித்திர ரகத்தைக் கொண்டவராக இருந்தார்.

காலச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது.

ஒருநாள் அதிகாலை வேளையில் மார்பு வலிக்கிறது எனக்கூறிய காமாட்சிக்கு சிகிச்சையளிக்க டாக்டருக்குப் போன் செய்துவிட்டுத் திரும்பி வந்து பார்க்கையில் உயிர் பிரிந்திருந்தது.

பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் செய்தி பறந்தது. அனைவரும் வந்தனர். காரியங்கள் முடியும் வரை இருந்து விட்டு மீண்டும் பறந்து விட்டனர்.

ஜம்புநாதன் தனிமரமானார். மனைவியின் பிரிவால் எந்த வேலையிலும் அவரால் முன்போல் ஈடுபட முடியவில்லை. வீட்டிற்கு வருவதையே தவிர்த்தார். வெளியிலேயே சுற்றினார். நிறைய குடிக்க ஆரம்பித்தார்.
நேரத்திற்குச் சாப்பிடாமல் குடியிலேயே மூழ்கியிருந்ததால் குடல்கள் பழுதடைந்து படுக்கையில் வீழ்ந்தார்.

பங்களா வேலையாட்களுக்கும் அவரவர் இஷ்டத்திற்குச் செயல்பட ஆரம்பித்தனர். ஆங்காங்கே இருந்த ஒருசில உறவினர்களின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜம்புநாதன்.

பணம் தண்ணீராகச் செலவாகியது. எவ்வித முன்னேற்றமுமின்றி ஜம்புநாதனின் உடல்நிலை மேலும் மோசமானது.

பிள்ளைகளும், பெண்களும் வரவழைக்கப்பட்டனர். தந்தையின் நிலையைக் கண்டதும் வழக்கறிஞர் உதவியுடன் ஜம்புநாதனின் சொத்துக்கள் அனைத்தையும் தங்கள் பெயரில் மாற்றி பங்கு போட்டுக் கொண்டனர்.

பங்களாவை மட்டும் அவர் பெயரிலேயே வைத்து, உதவிக்குச் சில வேலையாட்களையும் அமர்த்திவிட்டு மீண்டும் தங்கள் இடங்களுக்குச் சென்று விட்டனர்.

ஜம்புநாதனின் மைத்துனர் மட்டும் அவருடனே இருந்து அவரைக் கவனித்துக் கொண்டு வந்தார்.

ஒருநாள் டாக்டர் ஜம்புநாதனை பரிசோதித்துவிட்டு அவரது மைத்துனரிடம் “இனி என்கையில் எதுவும் இல்லை. கடவுளைப் பிரார்த்திக் கொள்ளுங்கள். ஐ யாம் ஸாரி” என்று கூறி விட்டார்.

ஜம்புநாதனின் மைத்துனர் தன் தமக்கையின் கணவரின் உடல்நிலை தேறுவதற்காக கோயில்களில் அர்ச்சனைகள், அபிசேகங்கள் செய்ய ஆரம்பித்தார்.

சர்ச், மசூதி, என எந்த கோவிலையும் விடவில்லை. தீவிரமாகப் பிரார்த்தனை செய்து வந்தார். ஒருசில வாரங்களில் ஜம்புநாதனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட ஆரம்பித்தது.

அவருடைய (மைத்துனரின்) தொடர்ந்த பிரார்த்தனையால் ஜம்புநாதன் அபாயநிலையைக் கடந்து, அதிசயிக்கத்தக்க வகையில் ஓரிரு மாதங்களில் நன்கு குணமடைந்து நடமாட ஆரம்பித்தார்.

மைத்துனரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்கள் கலங்க, “உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை. இவ்வளவு நாட்கள் என் பக்கத்திலேயே இருந்து என்னைக் காப்பாற்றியிருக்கிறீங்களே” என்றார்.

“நன்றியை எனக்குச் சொல்லாதீங்க மாமா. அந்த ஆண்டவனுக்குச் சொல்லுங்க. நீங்க இப்போ எழுந்து நடமாடிப் பேசறீங்களே! எப்படி? எல்லாம் பிரார்த்தனையின் மகத்துவம்.

மனிதனால் சாதிக்க முடியாததை தெய்வத்தால் மட்டுமே சாதிக்க முடியும். பிரார்த்தனை ஒன்றே கைகொடுக்கும். நம்மோட அன்றாட வாழ்க்கையில் நாம் செய்கிற எவ்வளவோ காரியங்களுக்கிடையில் சில நிமிடங்களாவது பிரார்த்தனைக்காக ஒதுக்கணும்.

அக்கா இருந்தவரை அவங்களோட பக்தியும், தெய்வநம்பிக்கையும் அவங்க செஞ்ச பூஜைகளும், கடைப்பிடித்த விரதங்களும் தான் உங்களையும் உங்க குடும்பத்தையும் ஒழுங்காய் காத்தது.

அவங்க இந்த உலகை விட்டு மறைஞ்சதும், எல்லாமே உங்களைவிட்டு போயிடுச்சு.

நிரந்த அமைதி, சந்தோசம், நிம்மதி, ஆத்ம திருப்தி எல்லாமே தெய்வ வழிபாட்டிலும் பிரார்த்தனையிலும்தான் இருக்கு மாமா”

ஜம்புநாதன் மைத்துனரின் பேச்சை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் போது, வாசலில் ஏதோ ஒருபஜனை கோஷ்டி பஜனைப் பாடல்களை பாடிக் கொண்டு சென்றது.

வாசலுக்கு விரைந்த ஜம்புநாதன் காம்பவுண்டு கேட்டைத் திறந்து வீதியிலிறங்கி பஜனைக் கோஷ்டியுடன் தானும் ஒருவராகச் சேர்ந்து கொண்டு பஜனைப் பாடல்களை மனமுருகப் பாட ஆரம்பித்தார்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.