ஆப்பிள் உலகில் அதிக அளவு பயிர் செய்யப்படுவதும், அதிக அளவு உண்ணக் கூடியதுமான பழம் ஆகும். அதனால்தான் இது அதிசய உணவு என்று பாராட்டப்படுகிறது.
இது கிரிகிஸ்தானில் முதலில் பயிரிடப்பட்டு பின் உலகெங்கும் பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆப்பிள் பழம் மெல்லிய தோலினையும், உள்ளே வெள்ளை நிற மொறு மொறுப்பான சதைப்பகுதியையும், உள்ளே செம்பழுப்பு நிற விதைகளையும் கொண்டுள்ளது.
இதன் தோலானது சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய நிறங்களில் காணப்படுகிறது. இதனை உண்ணும் போது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்து இருக்கிறது. இதன் விதையானது கசப்பு சுவையுடன் இருப்பதால் உண்ணப்படுவதில்லை.
ஆப்பிள் மரத்திலிருந்து கிடைக்கும் பழவகையாகும். இம்மரம் பூத்துக் காய்க்க குளிர் தேவைப்படுகிறது. எனவே இது குளிர் நாடுகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது.
பண்டைய கிரேக்க மற்றும் ரோமானியத்தில் இது முக்கியப் பொருளாகக் கருதப்பட்டது. இளமையைக் காக்கும் மாய சக்தி ஆப்பிளிடம் இருக்கிறது என்ற கருத்து அன்றைய மக்களிடம் காணப்பட்டது.
இப்பழத்தில் ஆன்டிஆக்சிடென்டுகள், விட்டமின்மின்கள் சி,கே,பி6,பி2, தாதுஉப்புகளான பொட்டாசியம், மாங்கனீசு, காப்பர், மெக்னீசியம், புரதம், கார்போஹைட்ரேட், நார்சத்து, பிளவனாய்டுகள் ஆகியவைகள் உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை.
தினமும் ஓர் ஆப்பிள் உண்ணுபவன் மருத்துவரை அணுகத் தேவையில்லை என்ற பழமொழி மூலம் இதன் முக்கியதுவத்தை அறியலாம்.
மருத்துவ பயன்கள்
ஆப்பிள் உணவு செரிமானத்திற்கும், வயிற்றுப்போக்கிற்கும் சிறந்த மருந்து. பித்தப்பை கற்கள், கல்லீரல் கோளாறுகள், இரத்த சோகை, நீரழிவு, இதய நோய், வாதநோய், கண்கோளாறுகள், பல்வேறு புற்றுநோய், அல்செய்மர்ஸ், பார்க்கின்சன் போன்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் பல் மற்றும் சருமப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு இதனை உட்கொள்வது அருமருந்தாகும்.
உணவு செரிமானத்திற்கு
இப்பழமானது அதிக அளவு நார்சத்தினைக் கொண்டுள்ளது. ஒருவருக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் நார்சத்தில் 12 சதவீதத்தினை இது பூர்த்தி செய்கிறது.
இப்பழத்தினை அடிக்கடி உண்பதால் குடல் அசைவுகளை எளிதாக்கி செரிக்க வைக்கிறது. மலச்சிக்கலைத் தவிர்க்கிறது.
இதில் உள்ள நார்சத்து உணவினை செரிக்க செய்து அதில் உள்ள ஊட்டச்சத்துகளை குடல் உறியத் தூண்டுகிறது. தமனி, சிரை நரம்புகளில் உள்ள கொழுப்பினைக் கரைத்து இதய இயக்கத்திற்கு உதவுகிறது.
கேன்சர்
ஆப்பிளில் உள்ள பிளவனாய்டுகள் கணையப் புற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. ஆப்பிள் தோலில் உள்ள டிரைட்டர்பினாட்கள் நுரையீரல், பெருங்குடல் மற்றும் மார்பகம் போன்ற இடங்களில் கேன்சர் செல்களின் வளர்ச்சியைத் தடை செய்கிறது.
இரத்த சோகை
இப்பழத்தில் இரும்புச் சத்து மிகுந்துள்ளது. இதனை தொடர்ந்து உண்பதால் இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.
சர்க்கரை நோயை சரிசெய்ய
இப்பழத்தில் உள்ள பாலிபீனால்கள் உணவு செரிமான அமைப்பிலிருந்து குறைவான அளவு சர்க்கரையை குடலை உட்கிரகிக்கச் செய்வதுடன் இன்சுலின் சுரப்பினைத் தூண்டுகிறது.
மேலும் பாலிபீனால்கள் உடலில் உள்ள செல்களில் இன்சுலின் வாங்கிகளை செயல்பட செய்கிறது. இச்செயலால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுவதோடு செல்களின் சீரான செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆப்பிள் ஓர் சிறந்த உணவாகும்.
பற்கள் பாதுகாப்பிற்கு
இப்பழத்தை தொடர்ந்து உண்பதால் பற்கள் மற்றும் ஈறுகள் பாதுகாக்கப்படுவதோடு பற்சிதைவும் தடுக்கப்படுகிறது. இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து பற்களை சுத்தமாக்குகிறது.
இப்பழத்தினை உண்ணும்போது எச்சில் சுரப்பு அதிகரிக்கப்பட்டு வாயில் பாக்டீரியாக்களின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி தடைசெய்யப்படுகிறது.
இப்பழத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக உடலானது பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்குதலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
அல்செய்மர்ஸ், பார்க்கின்சன் நோய்களிலிருந்து பாதுகாப்பு
இப்பழத்தில் உள்ள பைட்டோநியூண்ட்டின் கலவைகள் ஆக்ஸிஜனேற்றத்தினை ஏற்படுத்துகிறது. இதனால் அல்சைமர் நோயின் (மூளை சீரழிவு) தீவிரம் குறைக்கப்படுகிறது.
இப்பழத்தினை உண்ணும்போது மூளையில் அசெட்டைல்கோலினின் அளவு அதிகரிக்கப்பட்டு மூளைக்கு நினைவாற்றால், ஞாபத்திறன் ஆகியவற்றை கிடைக்கிறது.
பார்கின்சன் நோய்க்கு காரணமான டோபமைன் நரம்பு செல் உருவாக்கத்தை ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து சிறிது சிறிதாக தடைசெய்கிறது. எனவே ஆப்பிளை தொடர்ந்து உண்ணும்போது பார்க்கின்சன் நோய் கட்டுபடுத்தப்படுகிறது.
இதய நோய்
இப்பழமானது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவினை கட்டுப்படுத்துகிறது. இதனால் இதய நோய் வராமல் பாதுகாக்கிறது. இப்பழத்தோலில் க்யூபர்சிடின் என்ற பிளாவினாய்டு மிகுதியாக உள்ளது.
இது சி ரியாக்டிவ் புரதத்தினைக் குறைத்து நரம்புகளின் வீக்கத்தினைக் கட்டுப்படுத்துகிறது. சி ரியாக்டிவ் புரதமே இதய நோய்க்கு முக்கிய காரணம் ஆகும். எனவே ஆப்பிளை உட்கொள்வதால் இதய நோயிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.
வாதநோய்களிலிருந்து பாதுகாப்பு
ஆப்பிளில் உள்ள க்யூபர்சிடின், மைரைஸ்டின், காயெம்பெரால் போன்ற பிளாவினாய்டுகள் வாத நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. கீல் வாதம், மூட்டு வாதம் போன்றவற்றிற்கும் இப்பழம் சிறந்த மருந்தாகும்.
கண்கள் பாதுகாப்பு
இப்பழத்தினை உண்பதால் கண்பார்வை மற்றும் கண்கள் பாதுகாக்கப்படுகின்றன. மாலைக் கண் நோய்க்கு இது சிறந்த மருந்தாகும்.
இதில் உள்ள பிளவினாய்டுகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் கண்களைப் பாதுகாக்கின்றன. இவை கிளைக்கோமா, கண்புரை ஆகிய கண்நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.
உடல் எடை குறைய
இப்பழமானது உண்டவுடன், உடலின் வளர்ச்சிதை மாற்றத்தினை வேகப்படுத்துகிறது. இதனால் அதிகளவு கலோரி அழிக்கப்படுகிறது. இதனால் உடல் கிரகிக்கும் ஆற்றலின் அளவு குறைகிறது. இதனால் உடலின் எடையானது குறைகிறது.
மேலும் நார்சத்து உள்ள இப்பழத்தினை உண்பதால் சீக்கிரம் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. இதனால் உட்கொள்ளும் உணவின் அளவு குறைகிறது. எனவே உடல் எடை குறைகிறது.
சருமப்பாதுகாப்பு
இப்பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்டுகள் சருமத்தினை பாதுகாக்கின்றன. இப்பழத்தினை உண்பதால் இரத்த ஓட்டம் சீர்செய்யப்படுகிறது. இதனால் செல்களுக்கு இரத்தம் நன்கு பாய்வதோடு தோல்கள் சுருக்கம் அடைவது தடைசெய்யப்படுகிறது.
ஆப்பிளை வாங்கும் முறை
ஆப்பிளை கடையில் வாங்கும்போது அவை புதிதாகவும், நறுமணம் மிகுந்தாகவும் இருக்குமாறு பார்க்க வேண்டும்.
தோலில் காயங்கள் பட்ட பழங்களை வாங்கக் கூடாது.
கெட்டுப் போன ஆப்பிள் அதிக அளவு எத்திலினை வெளியிடுகிறது. இதனால் நல்ல நிலையில் உள்ள பழங்களும் அழுகும் வாய்ப்பு உருவாகிறது. எனவே கெட்டுப் போன பழங்களை உடனடியாக அப்புறப்படுத்தி விடுவது நல்லது.
ஆப்பிளை வெளியில் ஒரு வாரம்வரை வைத்திருந்து உண்ணலாம். குளிர்பதனப் பெட்டியில் இருவாரங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
ஆப்பிளை உண்ணும் முறை
ஆப்பிளை நன்கு நீரில் கழுவி தோலை நீக்காமல் உண்ண வேண்டும். ஆப்பிளை வெட்டி வைக்கும்போது அவை பழுப்பு நிறமாகின்றன. இதற்கு அப்பழத்தில் உள்ள பெரஸ் ஆக்ஸைடு பெரிக் ஆக்ஸைடாக மாற்றம் அடைவதே காரணம் ஆகும்.
எனவே ஆப்பிள் துண்டுகளை எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் கழுவினால் பழுப்பு நிறமாவது தடுக்கப்படும்.
இவ்வளவு சத்து நிறைந்த ஆப்பிளை உண்டு நோயற்ற வாழ்வு வாழ்வோம்.
-வ.முனீஸ்வரன்
Comments
“ஆப்பிள் பழம்” மீது ஒரு மறுமொழி