ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் என்ற இப்பாடல் திருவெம்பாவையின் பன்னிரெண்டாவது பாடலாக அமைந்துள்ளது.
உலக உயிர்கள் உய்யும் பொருட்டு ஐந்தொழில்கள் புரியும் இறைவனான சிவபெருமானின் மீது திருவெம்பாவையை சைவ சமய குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் பாடினார்.
இன்றைக்கும் மார்கழியில் இறைவழிபாட்டின் போது கி.பி 9-ம் நூற்றாண்டில் பாடப் பெற்ற திருவெம்பாவை பாடல் பாடப் பெறும் சிறப்பினைப் பெற்றுள்ளது.
பாவை நோன்பிற்கும், பெண்கள் தம்மைப் பற்றியுள்ள பிறவிப் பிணியை போக்கிக் கொள்ளவும், புனித தீர்த்தமாக விளங்கும் சுனையில் நீராடி, இறைவனின் திருவடியை போற்றி வழிபட வாருங்கள் என்று, மற்ற பெண்களையும் அழைப்பதாக திருவெம்பாவையின் பன்னிரெண்டாவது பாடல் அமைந்துள்ளது.
“இந்த உலகத்தையும் வானத்தையும் படைத்து, காத்து, அளித்துத் திருவிளையாடல் புரியும் இறைவனான சிவபெருமானிடம் நம்மைப் பிடித்துள்ள பிறவிப் பிணியைப் போக்குமாறு வேண்ட வாருங்கள்” என்று நோன்பிருப்பவர்கள் மற்ற பெண்களை அழைக்கின்றனர்.
ஐம்பூதங்களின் தலைவனும், ஐந்தொழில்கள் புரிபவனும் ஆகிய இறைவனான சிவபிரானை வழிபாடு செய்ய, நம்மைப் பற்றியுள்ள பிறவிப் பிணி நீங்கும் என்பதை இப்பாடல் விளக்குகிறது.
இனி திருவெம்பாவை பன்னிரெண்டாவது பாடலைக் காண்போம்.
திருவெம்பாவை பாடல் 12
ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல்தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டுஆர்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்
விளக்கம்
பிறவியாகிய பெரும் பிணி நீங்க வேண்டுமாயின் புறத்தூய்மை, அகத்தூய்மை இரண்டும் வேண்டும்.
புறத்தூய்மையானது நீராடுதல் பொருட்டு கிடைக்கும்.
அகத்தூய்மை ஆணவம் இன்றி இறைவனை சரணடைந்தால் கிடைக்கும்.
ஆதலால்தான் பாவை நோன்பிருக்கும் பெண்கள் சுனையில் நீராடி புறத்தூய்மையையும், குளிக்கும்போது இறைவனின் புகழினைப் பாடி அகத்தூய்மையையும் பெற எண்ணம் கொண்டு சுனையில் நீராடுகின்றனர்.
“நம்மைப் பிணைக்கின்ற பிறவித் துன்பம் போக்கும் பொருட்டு இறைவனான சிவபெருமான் தீர்த்த வடிவமாக இருக்கின்றான்.
அகன்ற உலகினையே அரங்கமாக்கிக் கூத்தாடும் ஆடலரசன், சிறந்த சிவத்தலமாகிய தில்லை சிற்றம்பலத்தில், உலக உயிர்களின் நன்மை பொருட்டு கையில் நெருப்பினைக் கொண்டு ஆனந்தக் கூத்தாடுகின்றான்.
அவன் வானம், பூமி உள்ளிட்ட ஐம்பெரும் பூதங்கள் மற்றும் அதில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் திருவிளையாடல்கள் புரிகின்றான்.
அப்பெருமானின் நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தை ஒதி கை வளையல்கள் ஒலிக்கவும், இடையில் அணிந்துள்ள மேகலைகளின் ஒலி துள்ளவும், மலர்கள் சூடிய கூந்தலில் மேல் வண்டுகள் ஒலிக்கவும், தாமரை மலர்கள் நிறைந்துள்ள இந்த பொய்கையில் நீராடுகின்றோம்.
எம்மை உடைப் பொருளாகக் கொண்ட சிவபிரானது அழகிய திருவடிகளைப் போற்றி, பெருமையும், குளிர்ச்சியும், குடிப்பதற்கு இனிமையும் உடைய சுனை நீரில் நீராட வாருங்கள்.” என்று பாவை நோன்பிற்கும் பெண்கள் அழைக்கின்றனர்.
நம்முடைய பிறவிப் பிணி நீங்க ஐம்பெரும்பூதங்களை படைத்தவனும், உலக உயிர்களின் நன்மைக்காக ஐந்தொழில் புரிபவனுமாகிய இறைவனான சிவபெருமானை அகங்காரம் இன்றி வழிபட வேண்டும் என்பதை இப்பாடல் கூறுகிறது.
மறுமொழி இடவும்