எழிலிடை எழுகதிரே எருதுகள் உழுநிலமே
பொழிலிடை எழுமலரே புதுப்புனல் தருநதியே
வழியிடை வருநிலவே வளர்தரு நிலத்திணையே
கழிமடம் தமிழ்நிலத்தில் கழிந்ததென் றறைகுகவே
நிறைகதிர் நெல்மணியே நிரல்பட வளர்கரும்பே
குறைகளை மஞ்சளுடன் குங்குமம் வெற்றிலையே
பறைதரு இன்னிசையே பாற்கடல் செவ்வமிழ்தே
சிறைபடு தமிழினத்தைச் சீர்பெற வாழ்த்துகவே
அலைமிகு அருங்கடலே அலகிலாப் பெருவெளியே
கலைமிகு காவியமே கார்பொழி கருமுகிலே
சிலைமிகு கோபுரமே சீரெழில் ஓவியமே
புலைமிகு தமிழினத்தைப் புதுக்குக ஒளிமிகவே
மதிமறை மலைவளமே மார்கழி பனிநிலமே
குதிதிரை மணற்குலமே கொழுபுனல் நிறைநிலமே
கொதிதரை சுடுவெளியே கொல்நிரை வனக்கடலே
கதியிலி தமிழினத்தைக் காப்பதற்கு விளைகுகவே
விரைவிரி மலரினமே வினைவிழை அணங்கினமே
உரைபெறு தமிழியலே உணர்வுள உயிரியலே
நரைவரு பொழுதுகளே நயவுரை விழுதுகளே
புரைபொறு தமிழினத்தில் புகுமிருள் நீக்குகவே
எழிற்றரு தைமகளே இளஞ்சுடர் காலையிலே
தொழுதுனை ஏற்றிநின்றோம் துயர்துடை தேவதையே
செழிபுகழ் தமிழ்நிலத்தில் சேர்ந்தவர் யாவர்க்கும்
அழிவிலை எனவுணர்த்தி ஆள்கநீ தமிழ்மகளே!
பேரினப் பாவலன்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி: 8667043574