குழந்தையும் குதூகலிக்கும் உன் மனோரஞ்சித குரலால்
இளமையும் இரட்டிப்பாகும் உன் துள்ளல் ஓசையால்
முதுமைக்கும் ஆசை வரும் உன் குரல் கேட்டால்
காதல் முதல் காவியம் வரை
எட்டுத்திக்கும் என் தமிழ்த்தாய்
பாலா, உன் கிள்ளை மொழி ஓசையில்
ஓய்வின்றி களித்திருந்தாள்.
காலனே உன்னையும் ஒரு காலன் வந்து
தூக்கிச் செல்ல மாட்டானோ?
கானக்குயிலே நீ மறைந்து விட்டாய் எனும் செய்தி
கனவாக இருந்து விடக் கூடாதா?
பாலா, எட்டுத்திக்கில் உன் ஓசை சென்ற
திசை யாரே அறிவார்?
உன் போன்றோர் இன்முகப் பொலிவுகளால்
பால் நிலா ஒப்பனை செய்குவளோ…
சுட்டெரிக்கும் சூரியனும் இன்று சுடமறந்ததும்
உன் இழப்பினாலோ…
ஐயகோ. . .
இசை சாம்ராஜ்யத்தின் நிகரற்ற தூணொன்று
சரிந்து வீழ்ந்ததே…
நிமிர்ந்து பாராயோ…
உன் குரல் ஒலிக்கும் திசைகள் எல்லாம்
உன் குரல் கூட உன்னைத் தேடியே
ஓடிக்கொண்டிருக்கும் எந்நாளும்…