அங்கும் இங்கும்
பறந்து
எங்கும் தங்காமல்
அலைபாயும்!
ஆர்வங்களில் முட்டி மோதி
மேலெழும்பி
முடிந்தும் முடியாமலும்
பல முறை!
சிறகுகளை விரித்தவாறே
இலக்கு தேடி
கிட்டாதெனின்
கிளை மாறி!
பழையன புதியன
இறந்த நிகழ் எதிர்
எனக் காலங்களில்
கவிழ்ந்து திரிகிறது!
முயற்சித்தும் முடியாமல்
விதியென இறுக்கும்
கிலேசங்களில் அமிழ்ந்து
விழுந்து எழும்!
உதிரும் சிறகுகளாய்
நினைவு கடந்து
கனவு சுமந்து
ஏறி இறங்கும்!
அர்த்தங்களின்றி
சில நேரம் குழந்தை
பல நேரம் முதிர்ச்சி
எனப் பாவித்துப்
பறக்கிறது!
பாதை
புரிந்தும் புரியாமல்
ஏதோ ஒன்றை
ஆட்கொள்ளும் ஆசையில்
வகை வகையாய்
நீண்ட வரிசையில்
விரித்துக் கொண்டே
இருக்கிறது சிறகுகளை
எப்பொழுதும்
ஆழ்மனப் பறவை!
எஸ்.மகேஷ்
சிட்லப்பாக்கம்
சென்னை – 600064
கைபேசி: 9841708284
மின்னஞ்சல்: mahicen@yahoo.com