இட்லிப் பொடி செய்வது எப்படி?

சுவையான இட்லிப் பொடி

இட்லிப் பொடி என்பது இட்லிக்குத் தொட்டு சாப்பிடப் பயன்படும் பொடியாகும். இது எல்லோரும் பயன்படுத்தக் கூடிய பொடியாகும். இது எல்லோர் வீட்டிலும் எப்போதும் இருக்க வேண்டிய பொடியாகும்.

இதனை இட்லி, தோசை, சாத வகைகளுக்கும் தொட்டுக் கொள்ளலாம். மொத்தமாக இடித்து வைத்துக் கொள்வதால் இதனை அவசரத் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

எத்தனையோ வகை இட்லிப் பொடிகள் கடைகளில் கிடைத்தாலும் வீட்டில் நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கும் வேதிப் பொருட்கள் சேர்க்காமல் செய்யப்படும் இட்லிப் பொடி தனிச்சுவையினையும், ஆரோக்கியத்தையும் கொண்டுள்ளது.

இனி எளிமையான முறையில் சுவையான இட்லிப் பொடி செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

கறுப்பு எள் – 100 கிராம்

உளுந்தம் பயிறு – 100 கிராம்

மிளகாய் வற்றல் – 5 (பெரியது)

பெருங்காயப் பொடி – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு – தேவையான அளவு

 

செய்முறை

முதலில் கறிவேப்பிலையை அலசி உருவி தண்ணீர் காயும் வரை வைக்கவும்.

மிளகாய் வற்றலை காம்பினை நீக்கி விடவும்.

கறுப்பு எள்ளினையும், மிளகாய் வற்றலையும் வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும்.

கறுப்பு எள்ளினையும் மிளகாய் வற்றலையும் வறுக்கும்போது
கறுப்பு எள்ளினையும் மிளகாய் வற்றலையும் வறுக்கும்போது

 

எள் படபடவென வெடிக்கும் தருவாயில் வாணலியில் இருந்து எள்ளினையும், மிளகாய் வற்றலையும் தனியே தட்டி விடவும்.

 

உளுந்தம் பயிற்றினை வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும்.

உளுந்தம் பயிற்றினை வறுக்கும்போது
உளுந்தம் பயிற்றினை வறுக்கும்போது

 

உளுந்தம் பயிறு வாசனை வந்து வெடிக்க ஆரம்பிக்கும் போது வாணலியில் இருந்து தனியே கொட்டி விடவும்.

எள்ளு மற்றும் உளுந்தம் பயிற்றினை வறுக்கும்போது அடுப்பினை மிதமாக வைக்கவும்.

 

 

பின் வெறும் வாணலியில் அலசி உருவிய கறிவேப்பிலையை போட்டு நன்கு சுருளும் வரை வதக்கவும்.

கறிவேப்பிலையை வறுக்கும்போது
கறிவேப்பிலையை வறுக்கும்போது

 

கறிவேப்பிலையை வதக்கும் போது அடுப்பினை சிம்மில் வைக்கவும்.

 

பின் வறுத்த பொருட்களை நன்கு ஆறவிடவும்.

ஆறிய பொருட்கள்
ஆறிய பொருட்கள்

 

மிக்ஸியில் ஒரு கை உளுந்தம் பயிறு, ஒரு கை எள்ளு என மாறி மாறி போடவும்.

அதனுடன் வறுத்த மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, தேவையான உப்பு, பெருங்காயப் பொடி சேர்த்து அரைக்கவும்.

சுவையான இட்லிப் பொடி தயார்.

சுவையான இட்லிப் பொடி
சுவையான இட்லிப் பொடி

 

இட்லிப் பொடியுடன் நல்ல எண்ணெய் ஊற்றி ஒரு சேர குழைத்து இட்லி அல்லது தோசையுடன் உண்ணலாம். 

 

குறிப்பு

இட்லிப் பொடி மிகவும் பொடியாக இல்லாமல் சற்று பரப‌ரப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

விருப்பமுள்ளவர்கள் வெள்ளைப் பூண்டினை எள் மற்றும் மிளகாய் வற்றலுடன் சேர்த்து வறுத்து பொடி தயார் செய்யலாம்.

ஜான்சிராணி வேலாயுதம்

 

Visited 1 times, 1 visit(s) today

Comments

“இட்லிப் பொடி செய்வது எப்படி?” மீது ஒரு மறுமொழி

  1. kumaresan

    Super

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.