புலியை முறத்தால்
விரட்டிய வீரப்பரம்பரை
நமது அடையாளம்…
ஔவையாரும்
காக்கைப்பாடினியாரும்
நமது பெருமைகள்…
விண்ணில் தடம் பதித்த
வீராங்கனையும்
ஒலிம்பிக்கில் வென்ற
தங்கமங்கையும்
நமது பொக்கிஷங்கள்…
போர்க்களம் கண்ட
பெண் அரசியர் யாவரும்
வரலாற்றில் பதிந்த
நமது முன்னோடிகள்…
இத்துணை பெருமை வளம்
செறிவு கொண்ட
நாம் ஏன்
இன்னமும் சின்னத்திரை
நாடகங்களில்
நமது சிந்தை இழந்து
சுயம் மரத்துப் போவது?
சாதித்த பெண்களின்
சோதனை கடந்த வாழ்க்கை
நமது இதிகாசம் ஆகட்டும்!
அக்கம்பக்கம்
வம்பளப்புகள்
விடுத்து
ஆக்கப்பூர்வ செயலியே
நமது கடிவாளம் ஆகட்டும்!
எல்லாப் பிரச்சனைகட்கும்
ஆணிவேர் பெண்ணே,
என்கிற அவதூறு
அடுத்த தலைமுறை
காணாது
ஓடிப் போகட்டும்!
விடியல்கள்
சிவவேளைகளில்
தாமதமாகலாம்
ஆனால்
விடியாத பொழுதுகள்
என்பது என்றுமே இல்லை
இனி ஒருவிதி செய்திடுவோம்
பெண்ணின் பெருமைதனை
கண்ணியத்துடன்
காத்திடுவோம்!