கொரோனா பொதுமுடக்க காலத்தில் நமது மாணவச் செல்வங்களின் கல்வி தடைபடாமலிருக்க ஆன்லைன் கல்வி முறை (கிட்டத்தட்ட வேறு வழியில்லாமல்) பின்பற்றப்பட்டது.
ஆசிரியர், மாணவர் இடையிலான தொடர்புக்கு வாட்ஸ்ஆப் அல்லது அதைப் போன்ற வசதிகள் கொண்ட செயலிகள் (ஆப்கள்) பயன்படுத்தப்பட்டன.
பெரும்பாலும் வீட்டுப்பாடங்கள், தேர்வு வினாத்தாள்கள் உள்ளிட்டவை வாட்ஸ்ஆப்பில் பகிரப்பட்டன.
மாணாக்கர்களும் ஆப்கள் வழியாக பதிவேற்றம் செய்யப்படும் தகவல்களைப் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் கல்வி கற்றார்கள்.
தற்பொழுது சிக்கல் என்னவென்றால் கல்வி நிறுவனங்கள் முழுமையாக இயங்கத் துவங்கிய பின்னும் இதே நிலை தொடர்கிறது.
2019 வரை வாட்ஸ்ஆப் இல்லாமல் இயங்கிய கல்வி நிறுவனங்கள் இன்று ஏன் பழைய சூழலுக்கு மாறவில்லை?
என்ன மாதிரி பிரச்சினைகள்?
வாட்ஸ்ஆப்பில் வீட்டுப்பாடம் வந்துவிடும் என்று குழந்தைகள் வகுப்பில் கவனிப்பதையே விட்டுவிட்டார்கள். அதற்குக் கல்வி நிறுவனங்களின் பதில் என்ன?
பெற்றோர்கள் ‘பள்ளி என்ன தகவல் அனுப்புகிறது?’ என்று எந்நேரமும் வாட்ஸ்ஆப்பைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?
எந்த ஒரு தொழில்நுட்பமும் கற்றலை மேம்படுத்துவதாக இருந்தால் ஏற்கலாம். ஆனால் வேறு புதிய சிக்கல்களை உருவாக்கக் கூடாது.
இந்த சூழல் மிகக்குறைவான வருமானம் பெறக்கூடிய குடும்பங்கள்கூட, இதற்காகவே இணையதள வசதியுடன் திறன்பேசியைக் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டி நிலையை உருவாக்கி விட்டது.
பெற்றோர்கள் திறன்பேசிகளிடமிருந்து விலக்கி பிள்ளைகளை வளர்க்க விரும்பினாலும் கல்வி நிறுவனங்களின் போக்கு அதற்கு அனுமதிப்பதில்லை.
‘Stay away from gadgets’ என்று வகுப்பறையில் அறிவுறுத்தும் ஆசிரியர், வீட்டுப்பாடத்தை வாட்ஸ்ஆப்பில் பகிர்வதைவிட முரண்பாடு எதுவும் இருக்க முடியாது.
படிப்பதற்காக மட்டும் குழந்தைகள் திறன்பேசியைப் பயன்படுத்துவதில்லை.
பெற்றோர்களுக்குத் தெரியாமல் திறன்பேசியை இயக்கக் கற்றுக்கொண்டு தேவையற்றவைகளை காண்பதால் கல்வியில் நாட்டம் குறைய வாய்ப்பு இருக்கிறது.
என்ன செய்யலாம்?
தீர்வு ஒன்றும் மிகப்பெரிய சூத்திரம் இல்லை. எல்லாம் நமக்குத் தெரிந்த ஒன்று தான்.
வீட்டுப்பாடங்களை கையேடு/Hand Book/Diary-யில் குறிப்பெடுக்கும்படி பிள்ளைகளை அறிவுறுத்தலாம்.
2019 வரை இப்படித்தானே இயங்கியது. அவ்வாறு செய்தால் ஆசிரியர் என்ன வீட்டுப்பாடம் தருகிறார் என்று கவனிக்கும் பழக்கமும், சிறிது எழுதக் கூடிய பழக்கமும் வருமல்லவா?
ஆசிரியர்களின் பணிச்சுமையை ஓரளவுக்குக் குறைக்கிறது என்பதற்காக கல்வி கற்கும் மாணாக்கர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?
மனிதன் கல்வி கற்பது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் ஒன்று. வெறும் 10 ஆண்டுகளுக்கு முன் வந்த செயலிகள் (ஆப்கள்) கல்வியைச் சிதைக்கின்றனவா என்ற ஐயம் இயல்பாகவே எழுகிறது.
டிஜிட்டல் முறை கல்வி என்பது கற்றலிலும், மாணவ / மாணவியரின் திறன் மேம்பாட்டிலும் புதுமையைப் புகுத்துவதாக இருக்க வேண்டும்.
மாறாக இது போன்ற செயல்பாடுகளில் அல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.
மணிமாறன்
9994458924