இயற்கையை இழந்தோம்; செயற்கையை விரும்புகிறோம்!

முந்தைய காலங்களில் மக்கள் பெரும்பாலும் இயற்கையோடு இயைந்தே வாழ்ந்து வந்தனர்.

இயற்கையையான பொருட்களையே மக்கள் பயன்படுத்தினர். அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் இருந்தன.

ஆனால் இன்றைக்கு இயற்கையை இழந்தோம்; செயற்கையை விரும்புகிறோம்.

உதாரணமாக மண்பாண்டங்களை மறந்தோம்.

அலுமினிய பாத்திரங்கள் வந்தன.

நெகிழி (ப்ளாஸ்டிக்) பாத்திரங்கள் வந்தன.

பித்தளை, செப்பு மற்றும் வெண்கல பாத்திரங்களை இழந்தோம்.

ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் (துருப்படிக்காத எஃகு) பாத்திரங்களை ஏற்றோம்.

என்னுடைய சிறிய வயதில் எங்கள் கிராமத்தில் ஓரிரு குடும்பங்கள், கிராம மக்களின் தேவைக்குண்டான பாத்திரங்களை மண்பாண்டங்களாகச் செய்து கொடுத்து வந்தார்கள்.

மற்ற பாத்திரங்கள் செம்பு மற்றும் பித்தளையாக இருந்ததால் பல தலைமுறைகளாக அவற்றைப் பயன்படுத்தி பத்திரப்படுத்தி வைத்திருந்தார்கள்.

இன்றைய நிலை வீதிக்கு வீதி பாத்திரக் கடைகள் வந்துவிட்டன. ஆடம்பரத்தையும் சோம்பலையும் விரும்பும் நாம் சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தும் பொருட்களை வாங்கிக் கொண்டே இருக்கின்றோம்; காயலான் கடைக்குப் போட்டுக் கொண்டே இருக்கின்றோம்.

துணியால் தைத்தக் கைப்பையை மறந்தோம்.

ப்ளாஸ்டிக் பொருட்களால் சுற்றுப்புறச் சூழலை கெடுத்துக் கொண்டே இருக்கின்றோம்.

பருத்தி ஆடைகளை விடுத்தோம்.

எதையும் துடைக்கக்கூட பயன்படாத செயற்கை நூலிழைத் துணிகளை ஏற்றோம்.

பருத்தி ஆடைகள் ஆடம்பரமாக மாறிவிட்டன.

மூங்கில் கூடைகளை தவிர்த்து ப்ளாஸ்டிக் கூடைகளை விரும்பினோம்.

மக்காத குப்பைகளை குவித்துக் கொண்டுள்ளோம்.

ஓலைப் பாய்களை மறந்தோம்.

நெகிழி (ப்ளாஸ்டிக்) பாய்களை பயன்படுத்தினோம்.

புளியை ஈச்சம் பாய்களை பயன்படுத்தி சேமித்து விற்பனைக்கு வந்த நிலைப் போய்விட்டது.

தினசரி காகிதங்களைப் பயன்படுத்தி வந்த மளிகைக் கடைக்காரர்கள் நெகிழி (ப்ளாஸ்டிக்) உறைகளை பயன்பாட்டில் கொண்டு வந்தனர்.

இயற்கையான கிருமிநாசினிகளான வேப்ப எண்ணெய், புங்கன் எண்ணெய், இலுப்ப எண்ணெய் போன்றவற்றை இழந்தோம். செயற்கை இரசாயனங்களைப் பயன்படுத்துகின்றோம்.

இயற்கை உரங்களாக இருந்த கடலைப் புண்ணாக்கு, இலுப்பைப் புண்ணாக்கு, புங்கன் புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு வயலுக்கு இட்டு வந்த பழக்கம் இழந்து இரசாயன உரங்களைக் கொண்டு வந்தோம்.

இன்றைக்கு இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விளம்பரத்துடன் அதிக விலைக்கு விற்பதை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

இயற்கையாக இருந்ததை செயற்கையாக மாற்றி, இயற்கை விளை பொருட்களை ஆடம்பரமாக மாற்றி, ஒருசிலரே உபயோகிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

கலாச்சாரச் சீரழிவே இந்த நிலைக்குக் காரணமாகும். கிராமத்தில் காலையில் வீட்டு வாசலில் சாணம் தெளித்து வீட்டுக்குள் விஷப்பூச்சிகள் வரா வண்ணம் செய்தார்கள்.

வாசலில் அரிசிமாவில் கோலம் போடுவார்கள். அக்கோலத்தில் உள்ள மாவினை எறும்புகள் சிட்டுக் குருவிகள் உண்ணும்.

வீட்டின் ஓரமாக சிறுபானையில் தண்ணீர் வைப்பார்கள். சிறுபறவைகள் தண்ணீர் குடிக்கும்.

காலாசார சீரழிவால் கோலம் போடுவதுவும் தடுக்கப்பட்டது. போடுவதற்குண்டான இடமும் இல்லாமல் போனது.

இன்றைக்கு வீட்டைச்சுற்றி பூச்சிக்கொல்லி மருந்தை தூவுகின்றோம். சுண்ணாம்பினால் கோலம் போடுகின்றோம்.

நம்மை சுற்றியே இருந்த சிட்டுக் குருவிகள் காணாமல் போயின. ஒரு தலைமுறையினருக்கு சிட்டுக்குருவியே தெரியாது.

வீடுகளின் அருகில் வசித்து வந்த பறவையினங்கள் மைனா, சிட்டுக்குருவி, தவிட்டுக்குருவி, சிறிய மரங்கொத்திப்பறவை, பச்சைக்கிளிகள், குயில், தேன்சிட்டு, எலிகளைப் பிடிக்கும் ஆந்தைகள் போன்றவை மிகவும் குறைந்துவிட்டன.

நோயுற்ற கால்நடைகளுக்கு கொடிய இரசாயன மருந்துகள் செலுத்துகின்றோம். அவற்றால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் இறந்துவிட்டால் அவற்றை உண்ணும் அரிய கழுகினங்கள் பாதிக்கப்பட்டு அழிந்து போயின. அக்கழுகினம் அழிந்ததால் சுற்றுச்சூழல் கெட்டுப்போயின.

காற்றை தடுத்து மழைப்பொழிவிற்கு முக்கியமான மலைகளை அழித்துக் கொண்டுள்ளோம்.

மலைகளையும் காடுகளையும் நம்பி வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த மலைவாழ் மக்களின் வாழ்வாதாரங்களைக் கெடுத்தோம்.

காட்டில் வாழும் விலங்குகளின் வாழ்க்கையை அழித்தோம். காலங்காலமாக யானைகள் பயன்படுத்திவந்த வழித்தடங்களை ஆக்கிரமித்துவிட்டோம்.

யானைகளை நாம் தொந்திரவு செய்துவிட்டு, யானைகள் நமக்கு தொந்திரவு செய்வதாக வரும் செய்திகளைப் படிக்கின்றோம்.

‘காக்கைக் குருவிகள் எங்கள் ஜாதி’ என்று பாரதியார் பாடினார். இன்று அவைகள் எங்கள் உணவிற்கு வேண்டும் என்ற நிலைக்கு காலமும் காலத்தால் எண்ணங்களும் மாறிவிட்டன.

அக்காலத்தில் ஒருசிலரே வேட்டைக்காரர்களாக இருந்தனர். இன்று அனைவரும் வேட்டைக்காரர்களானோம்.

சமீபகாலம் வரையில் கிராமங்களில் காட்டுப்பூனைகளும் குள்ளநரிகளும் இருந்தன. இன்று காணாமல் போய்விட்டன.

நரிகள் ஊளையிடுவதை இன்றைய தலைமுறை கேட்டதில்லை.

இன்றைய நிலையில் காட்டுப்பன்றிகள் பெருகி கிராமங்களில் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். காரணம் அவைகளின் இடங்களை நாம் அழித்துவிட்டோம்.

சுற்றுலா என்ற போர்வையில் கொல்லிமலைப் போன்ற பகுதிகளை சீரழித்ததோம். கொடைக்கானல் பகுதியில் வரைமுறையின்றி கட்டடங்ககளைப் பெருக்கி விட்டோம்.

காடுவாழ் உயிரினங்களின் பாதைகளை அடைத்துவிட்டோம்.

பழமையை இன்றைய தலைமுறையினர் தெரிந்துக் கொள்ளாமல் போய்விட்டது.

இருக்கும் வனப்பகுதிகளையாவது துணிவுடன் சட்டபடி காப்பாற்றினால், பல்லுயிரினப் பெருக்கமும் இருக்கும் பசுமையும் பாதுகாக்கப்படும்.

வரைமுறையற்ற பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகத்தால் கணக்கற்ற உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன.

வீட்டில் கோழிகளை வளர்த்து தேவைக்கு உபயோகித்து வந்தார்கள் அவைகள் இயற்கையாக வளர்ந்து வந்தன.

இன்று செயற்கையாக ஊட்டச்சத்துக்களை வழங்கி 45 நாட்களில் ஒன்றரைக் கிலோ எடையில் விற்கின்றனர். அவற்றை வாங்க வரிசையில் நிற்கவேண்டும். அவற்றால் நன்மையா, கேடா ஆராய்ச்சியாளர்கள்தான் சொல்லவேண்டும்.

இயல்பான வாழ்க்கை வணிக வாழ்க்கையாகிப் போனது.

மனிதன் வாழ ஒரே பூமி தான் உள்ளது என்பது மறந்து போனது.

இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்
திருநின்றவூர் – 602024
கைபேசி: 9444410450

இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன் அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.