இனிது இனிது இயற்கையின்
அறிவியலை அறிவது இனிது
அணுவை அண்டமாக்கி அதனுள்
பூவுலகை வைத்தது இனிது
அணுக்கரு இணைவால் ஆற்றலை
உமிழும் சூரியன் இனிது
புவிவிசையால் காற்றுப் படலம்
புவியைக் காப்பது இனிது
பூதஉடலை இயக்கும்
உயிர் வளி அனைத்திலும் இனிது
நீருடன் கார்பன்-டை-ஆக்ஸைடை சேர்த்து
உணவாக்கும் தாவரம் இனிது
உணவினை ஆக்கவும் உணவாகவும்
பயன்படும் அமிழ்த நீரும் இனிது
புவிக்கு ஒவ்வா சூரியக்கதிர்
கவரும் ஓசோன் இனிது
கண்காணா விசையும் பிணைப்பும்
உலகை இயக்குவது இனிது
பூமியிலுள்ள அனைத்தையும் காட்டும்
வெய்யோனின் வெள்ளொளி இனிது
இனிது இனிது இயற்கையின்
அறிவியல் அனைத்திலும் இனிது
இதனால் இயற்கையைக் காக்க
உறுதியேற்றுச் செயலாற்றுதல் இனிது
– முனைவர்.ஆர்.சுரேஷ்
ஆராய்ச்சியாளர்
பகுப்பாய்வு மற்றும் கனிம வேதியியல் துறை
கன்செப்ஷன் பல்கலைக்கழகம், சிலி
sureshinorg@gmail.com