இராசபாளையம்

இராசபாளையம், திருவில்லிபுத்தூர் தென்காசி சாலையில் திருவில்லிபுத்தூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 

விஜய நகர மன்னர் காலத்தில் ‘சின்னராஜா’ என்பவர்கள் முதன் முதலில் தன்னுடைய கூட்டத்தாரோடு கீழராஜ குலராமன் என்ற ஊரில் வந்து தங்கினார்கள். பிறகு அவர்கள் சஞ்சீவி மலையருகே குடியேறினார்கள். அதற்குச் சிறிது மேற்கில் அவர்களின் நாய்கள் முயல்களால் தாக்கப்பட்டன. அவ்விடத்தின் வீரத்திற்கு எடுத்துக்காட்டாக அந்த முயல்களின் செயல் அமைந்ததாகச் செவிவழிச் செய்தியாகக் கூறுவர்.

பழைய பாளையம் என்ற இடத்தில் அவர்கள் வந்து குடியேறினர். இந்நிகழ்வு நடந்தது கி.பி.1483 ஆம் ஆண்டில். நாயக்கர் ஆட்சி மதுரையில் ஏற்பட்டபோது சொக்கநாத நாயக்கர் ஆட்சிக் காலத்தில் (கி.பி.1659-1682) சின்னராஜா மற்றும் அவருடைய நான்கு மகன்களுடைய சேவையைப் பாராட்டி செப்புப்பட்டயம் வழங்கப்பட்டது. தலைக்கோட்டைப் போருக்குப் பின் கி.பி.1565 அதிகமான இராஜுக்கள் விஜயநகர சாம்ராஜ்யத்திலிருந்து இராசபாளையம் வந்து குடியேறினர்.

விஜயரங்க சொக்கநாத நாயக்கரிடமிருந்து (கி.பி.1706-1732) பெறப்பட்ட சாசனத்தின் அடிப்படையில் இராசபாளையம் மேலும் விரிவாக்கப்பட்டு புதுப்பாளையம் என்ற பெயரில் புதுக்குடியிருப்பு ஏற்படுத்தப்பட்டது.

இவ்வூரில் இடம்பெற்றுள்ள சஞ்சீவி மலை இராமாயணக் கதையோடு தொடர்புபடுத்திக் கூறப்படுகின்றது. இலக்குமணனின் அம்புக் காயத்தைப் போக்குவதற்காக அனுமன் சஞ்சீவி பருவத மலையைத் தூக்கி வரும்போது அதிலிருந்து ஒரு சிறிய துண்டு இவ்விடத்தில் விழுந்துவிட்டது எனவும் அதுவே சஞ்சீவி மலை என்றழைக்கப்பட்டது எனவும் கூறுவர்.

இதேபோன்று கன்யாகுமரி மாவட்டத்திலும் சஞ்சீவி மலை ஒன்றுள்ளது. அதன் தோற்றத்திற்குக் காரணமாக இதே கதை கூறப்பட்டு வருகின்றது. இராசபாளையத்திலுள்ள சஞ்சீவி மலையில் சஞ்சீவி நாதர் கோயிலும், குமாரசுவாமி கோயிலும் உள்ளன. இவை காலத்தால் பிற்பட்டவை.

இராசபாளையம் பெரிய கோயில் மயூரநாத சுவாமி கோயிலாகும். இக்கோயில் இவ்வூரின் வடக்கில் அமைந்துள்ளது. ஆனி மாதத்தில் இங்கு தேர்த்திருவிழா நடைபெறும். இத்திருவிழா ஒன்பது நாட்கள் நடைபெறும். இவ்வூரின் மேற்கில் இராமசுவாமி கோயிலுள்ளது. பங்குனி மாதத்தில் இராசபாளையம் திரௌபதை அம்மன் கோயிலில் ‘அக்கினிகாளி’ என்னும் விழா நடைபெறுகின்றது. அப்போது ‘தீமிதி’ எனும் ‘பூக்குழி’ இறங்குதல் நடைபெறும். மேலும் சுப்பிரமணிய சுவாமி கோயில், கோதண்டராமசுவாமி கோயில், சொக்கர் கோயில், மாரியம்மன் கோயில், குருசாமி கோயில் என்று சில கோயில்களும் இங்குள்ளன.

இராசபாளையம் ஊரின் கிழக்கில் வேட்டை வேங்கடேசப் பெருமாள் கோயில் எனும் வைணவக்கோயில் அமைந்துள்ளது. இது கருவறை, அரைமண்டபம், மாமண்டபம் என்ற அமைப்பினைக் கொண்டு விளங்குகின்றது. இதில் தற்போது திருப்பணிகள் நடைபெற்றமையால், கல்வெட்டுகள் இடம் மாறிக் கிடக்கின்றன.

கருவறையில் கி.பி.13 ஆம் ஆண்டு நூற்றாண்டைச் சேர்ந்த கலையமைப்புடன் காணப்படுகின்ற பெருமாள் திருமேனி உள்ளது. முதலாம் சடையவர்மன் குலசேகரனின் ஐந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, ‘வெம்பைக்குடி நாட்டுத் துடையநூர் முட்டத்தில்’ இக்கோயில் செலவிற்காக நிலத்தானம் வழங்கப்பட்ட செய்தியைத் தெரிவிக்கின்றது.

மற்றொரு கல்வெட்டு, ‘தாமரைக் கண்ணன்’ என்பவன் சந்தி விளக்கு எரிப்பதற்காக தானம் கொடுத்த செய்தியைத் தெரிவிக்கிறது. முகமண்டபத்திலுள்ள தூண் கல்வெட்டுகள், தூண்களும், உத்திரங்களும் தானமாக வழங்கியவர்களின் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன. உத்திரங்களை கொட்டிமுக்குலுவைச் சார்ந்த திம்மராஜா என்பவரின் சகோதரர் கிருஷ்ணமராஜா என்பவர் வழங்கியுள்ளார். இம்மண்டபத் தூண்களிலொன்றை, சோழராஜா பெத்திசோழநாதன் என்பவன் வழங்கியுள்ளான் என்பதை அறியமுடிகின்றது. பொதுவாக இக்கோயிலில் வைத்துத் தான் ஏழை எளியவர்களுக்குத் திருமணம் நடைபெறுவது வழக்கம்.

இவ்வூரில் தமிழ் வருடப்பிறப்பு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இதற்குச் சித்திரை ‘வெண்குடைத் திருவிழா’ என்று பெயர். இங்குள்ள அப்பாள் ராஜா குளத்தின் அருகிலுள்ள காலியிடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்து இவ்விழாவினைக் காணுவர். இந்த நாளிலேயே அய்யனாருக்கும் சிறப்பு விழாக்கள் நடத்தப்படுகின்றன. வெண்குடைத் திருவிழா என்பது வெண்கொற்றக் குடை யாருக்கு உரிமையுடையது என்னும் போராட்டத்தைக் காட்டும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சி ஏதோவொரு வரலாற்று நிகழ்ச்சியினை நிகழ்த்திக் காட்டுவதாக அமைந்துள்ளது.

தமிழ்ப் புத்தாண்டில் இவ்விழா நடைபெறுவதால் வெண்கொற்றக் குடையைப் பிற இனத்தவர்கள் அபகரித்து விடா வண்ணம் காத்துக் கொண்ட தமிழர்களின் வீரத்தை எடுத்துக்காட்டுவதாக இவ்விழா அமைந்துள்ளது எனலாம்.

சுதந்திரப் போராட்ட காலத்திலும் இராசபாளையம் சிறந்து விளங்கியதற்குப் பல நிகழ்ச்சிகள் சான்றாக அமைந்துள்ளன. மகாத்மா காந்தி தன் மனைவி கஸ்தூரிபாயோடு 1927-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4, 5 தேதிகளில் இங்கு வந்து P.S.குமாரசுவாமி ராஜாவின் இல்லத்தில் தங்கியிருந்தார். இதன் பின்னர் 1934-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி ‘தாக்கூர் பாபா’, ‘மீராபென்’ ஆகியோருடன் காந்தியடிகள் மீண்டும் வந்து இதே இடத்தில் தங்கினார். இராஜேந்திர பிரசாத் 1935-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ஆம் தேதியிலும், ஜவகர்லால் நேரு 1936-ஆம் ஆண்டில் அக்டோபர் 13-ஆம் தேதியிலும் இங்குவந்து தங்கினார்கள்.

ஆதலால் இவர்கள் வந்து தங்கியிருந்த P.S.குமாரசுவாமி ராஜாவின் வீடு புகழ் பெற்றதாயிற்று. ஆகவே இப்பெரியவர்கள் தங்கியிருந்த தன் வீட்டை ‘காந்தி கலை மன்றம்’ என்ற பெயரில் ஒரு கலையமைப்பை 1955-ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதியன்று உருவாக்கினார். இக்கலைமன்றம் தொடர்ந்து நடைபெற தம் இல்லத்தையே தானமாக வழங்கினார். அது பிற்காலத்தில் கலை, இலக்கியம், கல்வி வளர்க்கும் ஒரு கலைக்கூடமாகவும்; சிறந்த நூலகமாகவும் விளங்கி வருகின்றது.

இராசபாளையம் வியாழன் சந்தை இராமநாதபுரம் மாவட்டத்திலேயே நடைபெறும் மிகப் பெரிய சந்தையாகும். இது நடைபெற எ.கா.த.தர்மராஜா தனது நிலத்தை வழங்கினார். 1822-ல் தொடங்கப்பட்ட ‘இவ்வாரச் சந்தை’ இன்றும் தொடர்ந்து வளர்ந்து பெரிய அளவில் மக்களைக் கவரும் வகையில் உள்ளது. இச்சந்தையின் வருமானம் எ.கா.த.தர்மராஜா அறக்கட்டளைக்காகச் செலவிடப்பட்டு வருகின்றது.

புதுப்பாளையத்திலுள்ள சத்திரம் பழமையானதாகும். இது வழிப்போக்கர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டது. தினமும் ஆறு பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. 1878-இல் எ.கா.த. தர்மராஜா குடும்பத்தாரின் பெரும் நிதியுதவியோடு இச்சத்திரம் உருவாக்கப்பட்டது. இன்றும் அவர் குடும்ப வழியினர் இச்சத்திரத்தின் பொறுப்பாளராக விளங்கி வருகின்றனர்.

இராசபாளையத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் அய்யனார் ஊற்று என்று கூறப்படும் ஒரு சுற்றுலாத்தலம் உள்ளது. அடர்ந்த காடு நிறைந்த இயற்கை அழகோடு கூடிய இவ்விடம் பல சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த ஒன்று. சுமார் பதினைந்து அடி உயரத்திலிருந்து விழும் சிறிய நீர்விழ்ச்சி இவ்விடத்திற்கு மேலும் அழகு செய்வதோடு காண்போரை மகிழ்வடையச் செய்கின்றது. இவ்விடத்திலேயே ‘வழுக்குப் பாறை’ என்றழைக்கப்படும் இடம் ஒன்று, நீர் ஓடிவரும் சரிவான மேடுபள்ளமற்ற பாறைப் பகுதியாகும். நீர் ஓடிவரும் காலங்களில் வேகமாகச் சறுக்கி வந்து தடாகத்தில் விழுவதைச் சிறுவர் சிறுமியர் விரும்புவர்.

இவ்வருவியின் நீர் தன் தளத்தில் ஓடி வரும் போது ‘முடங்கியார் ஆறு’ எனப் பெயர் பெறுகின்றது. இவ்வாற்று நீரைத் தேக்கிக் குடிநீர்த் தேவைக்கும், விவசாயத் தேவைக்கும் பயன்படுத்துகின்றனர். பஞ்சு ஆலைகளும் நூற்பாலைகளும் அதிகமுள்ள இராசபாளையம் ஒரு பெருந்தொழில் நகரம் எனில் அது மிகையாகாது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.