இறுதிப் பேருரைகள் நூல் வரலாற்றை சரியான கோணத்தில் பதிவு செய்து அடுத்த தலைமுறைக்குப் பரிமாறுகிறது. அதன் ஆசிரியர் பாவலன் நமது பாராட்டுக்கு உரியவர்.
பிரமாண்டங்களின் உச்சத்தைக் கண்டு பிரமிப்பது மனதின் எதார்த்த நடவடிக்கையாக இருக்கலாம்.
ஆனால் வாழ்வின் கடைசி நாட்களில், எதிர் நிற்கும் மரணமெனும் மிகப்பெரும் பிரமாண்டத்தைக் கண்டு ஆட்டம் காணாதவர் உலகில் யாருண்டு?
அதை நினைத்து நினைத்து மருண்டு போய் கண்ணீர் வழியே பதை பதைப்பாய் இருப்பவர் உலகில் பலருண்டு…
ஆனால் உள்ளெழும் கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்து விட்டவர்கள், வீரத்தோடு அதையும் வரவேற்றுப் பிரமாண்டத்தோடு பிரமாண்டமாகத் தானும் கலப்பர்.
இரண்டு எதிரெதிர் முனைகளிலும் வாழ்வின் நடத்தைகளே இறுதியைத் தீர்மானிக்கின்றன.
பேராசிரியர் பாவலன் அவர்களின் ‘இறுதிப் பேருரைகள்’ நூல் படித்தேன்.
தொகுப்புகள் தான் தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரும் இலக்கிய வடிவமைப்பைப் பெற்றிருக்கின்றன என்பது நிதர்சனமான ஒன்று.
சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், நீதி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் எனத் தொகுப்புக்களாலேயே சிறப்புற்றிருப்பது நம் மொழியாகும்.
அவ்வகையில் இறுதிப் பேரூரைகள் எனும் தொகுப்பும் மிக முக்கியமான சிறப்பினைப் பெற்றிருக்கின்றது.
வரலாறு படைத்தவர்களின் வீரதீரச் செயல்கள் மானிட சமூகத்தை வழிநடத்தி மேம்படுத்திட உதவுகின்றன.
ஒழுங்கற்ற பாதைகளைச் செப்பனிட்டு, உலகத்தினைச் சீராய் நடப்பதற்குப் பழக்கிவிட்டு, அழகு பார்க்கும் மேன்மைத் தன்மை வாய்ந்ததாக அவர்களின் சிந்தனைகளும் செயல்களும் உள்ளன.
காலம் இருக்கும் வரை இறப்பினைப் பெறாத, சாகாவரம் பெற்ற விஸ்வரூபிகள் அவர்கள். அவர்களின் வரலாற்றை மறுபடி மறுபடி மக்கள் மனதில் விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
இந்நூலில் கூறப்பெறும் ஏழு புரட்சியாளர்களும் உலகத்தின் நடைமுறைகளைப் புரட்டிப் போட்டு ஒழுங்குபடுத்தியவர்கள்.
தமக்காக வாழாமல், தமக்காக ஏதும் சேர்த்து வைக்காமல், உலக மக்களுக்காகவே தம் வாழ்நாள் முழுவதும் சிந்தித்தவர்கள் இவர்கள்.
அண்ணல் அம்பேத்கரின் கண்ணீர்த் துளிகள் சமூக மேம்பாட்டை முழுவதுமாக ஏற்படுத்தி விடவே கீழே விழுந்தன.
அவர் தனக்காக, தன் உடம்பின் நோய்க்காக அழவில்லை. தன் அறிவால் தன் சமூகம் மேம்பாடடைய வேண்டும் என்பதில் அவர் எவ்வளவு உறுதியாக இருந்தார் என்பதை முதல் பேரூரையின் மூலம் அறிகின்றோம்.
அம்பேத்கரின் இந்தப் பக்கங்களைப் படிக்கும்போது, கண்கள் நமக்கு வலிக்கின்றன.
அவர் சதாகாலமும் மக்களையே நினைத்துக் கொண்டிருந்தவராகவும் அதற்காகவே உலகத்தை முழுவதும் படித்துத் தெளிந்தவராகவும் இருந்திருக்கிறார். அதை நானக் சந்த் ராட்டு சொன்ன விதம் நெஞ்சை நிறைக்கிறது.
அண்ணலின் கடைசிக்கால ஆசை விருப்பம் போன்றவற்றோடு, சோகமாக அமைந்திருந்த அவரது கடைசி நாட்களை எண்ணி எண்ணி வியக்கத்தான் வேண்டியிருக்கிறது.
தமிழில் மொழிபெயர்த்தவரின் மொழித்திறனும் இங்கு முக்கியமாகக் கூறப்பட வேண்டிய சிறப்பைப் பெற்றிருக்கின்றது.
இந்தியாவிற்கான சிந்தனைவாதியாக மட்டும் அண்ணலைக் காண முடியாது.
உலக மக்களின் விடுதலைக்கான சிந்தனையாளராகவே எண்ண வேண்டியுள்ளது. அவருக்குப் பணிவிடை செய்த நானக் சந்த் உண்மையில் பெரிதும் போற்றப்பட வேண்டியவர் ஆவார்.
கடவுள் பெயரால் நடைபெறும் ஏற்ற தாழ்வுகளையும் அடிமைத்தனத்தையும் பொருளாதாரச் சுரண்டல்களையும் தொடர்ந்து பேசிப் பேசித் தமிழகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார்.
மதம் குறித்த ஆன்மீகத் தெளிவை, இதை விடத் தெளிவுபடுத்திவிட முடியாது எனுமளவில் 19-12-1973 அன்று சென்னை தியாகராசர் நகரில் ‘சிந்தனையாளர் மன்றம்’ சார்பில் நடந்த கூட்டத்தில் பெரியார் பேசிய உரை இருந்தது எனலாம்.
அதுவே இறுதிப் பேரூரை நூலில் காணப்படும் உரைகளில் மிகப் பெரியதும், ‘பண்பாட்டு மானிடவியல்’ (Cultural anthropology) குறித்த ஆய்வுமாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
அவ்வுரையே தந்தை பெரியாரின் ‘மரண சாசனமாக’ அமைந்தது என்கிறார் நூலாசிரியர் பாவலன்.
உலகப் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்திய மாபெரும் சிந்தனைவாதி, விஞ்ஞான சோசலிச வித்தகர் காரல் மார்க்ஸ்.
அவரின் இறப்பிற்கு பின் அவர் குறித்தும், அவரின் கொள்கைக் கோட்பாடுகள் குறித்தும் பேரறிஞர் பி.ஏங்கெல்ஸின் உரை மார்க்ஸ் குறித்தான மிகச்சிறந்த பதிவாக வரலாற்றில் எண்ணப்படுகின்றது.
அவ்வுரையை நேர்த்தியாகக் கண்டெடுத்துத் தமிழில் தந்திருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர்.
மேற்கண்ட உரையினைப் போலவே பொதுவுடைமைத் தத்துவவாதி விளாதிமிர் இலீச் லெனின் நினைவுக் கூட்டத்தில், தோழர் ஸ்டாலின் ஆற்றிய எழுச்சி உரை அமைந்திருந்தது.
உலக வரலாறுகள் அவ்வுரையில் அலசி ஆராயப்படும் திறன் எண்ணி வியக்கத்தக்கதாகும். இருவருக்குமான எண்ணவோட்டங்களை இவ்வுரையின் மூலம் நாம் அறியலாம்.
இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காகப் போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தில், நவம்பர் 27, 2008 அன்று ஆற்றிய பேரூரை, தமிழீழத்தின் ஒட்டு மொத்த வரலாற்றையும் நினைவு கொள்வதாக அமைந்திருக்கும்.
தமிழனத்தின் மேல் அவர் கொண்டிருந்த அளவிலாத பாசத்தை அப்பேரூரை விளக்குகிறது.
“நான் உரையாற்றுவது இதுவே கடைசியாகக் கூட இருக்கலாம்.” என கியூபா கம்பயூனிஸ்ட் கட்சியின் 7-வது மாநாட்டில் உரை நிகழ்த்தும்போது பேசிய ஃபிடல் காஸ்ட்ரோவின் உரை, அவரின் மிக முக்கியமான உரையாகப் பார்க்கப்படுகின்றது.
அறிஞர்கள், புரட்சியாளர்கள் எப்போது பிறந்தாலும், தான் சார்ந்த நாட்டை மற்றும் சமூகத்தைச் செதுக்கி வைரமாக்கி மின்னும் ஒன்றாக மாற்றுகின்றனர் என்பதற்கு அவருமொரு உதாரணமாவார்.
உடலின் இரத்த நாளங்களெலாம் உணர்வு பெறும் உரையாக இவ்வுரை அமைந்திருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் ச.ஜெ.ரவி மிக அழகாக இதைத் தமிழ்ப்படுத்தியுள்ளார்.
கடைசிக் கட்டுரையில், புரட்சியாளர் மாவீரர் பகத்சிங் வாழ்க்கையின் கடைசி 12 மணிப் பொழுதுகளில் நடந்த சம்பவங்களை உணர்வு பொங்கக் காட்சிப்படுத்தியுள்ளார் ரெஹான் ஃபஸல்.
சோகம், வீரம், பற்று மற்றும் தாகம் இவையனைத்தும் அக்காட்சிகளில் வெளிப்படுகின்றன. எதிர்கால சந்ததி வீரமிக்க பகத்சிங்கின் எண்ணப் போராட்டங்களைப் புரிந்து கொள்ள இக்காட்சி வெளிப்பாடுகள் கட்டாயம் உதவும்.
பேராசிரியர் பாவலன் அரிதின் முயன்று ஜெர்மன், ரஷ்யா, இலங்கை, கியூபா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் வாழ்ந்த மாபெரும் புரட்சியாளர்களின் கடைசிகால உணர்வு மற்றும் வெளிப்பாட்டுப் பேரூரைகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார் இந்நூலில்.
அவற்றைத் தனித்தனியாகப் படிக்கும் போது, படித்தோம் மறந்தோம் என்ற நிலை ஏற்படலாம்.
ஆனால், ஒருமுகத்தான் ஒரேயிடத்தில் படிக்கும் வாய்ப்பில், ஒருமித்த உணர்வுடன் மேன் மேலும் உணர்வுகள் பொங்க வாய்ப்புள்ளது. அதனை உருவாக்கித் தந்த பெருமை பேராசிரியர் பாவலன் அவர்களுக்கே உரித்தானதாகும்.
.
சரியான கோணத்தில் பதிவு செய்வதாலேயே வரலாறுகள் அடுத்த அடுத்த தலைமுறைக்குப் பரிமாறப்படுகின்றன. அந்தப் பேரூதவியை இப்பேரூரை நூல் செய்கின்றது.
பேராசிரியர் பாவலனின் எழுத்தாளுமையினால், இப்பேரூரைகள் நமக்கு ஒன்று சேரக் கிடைத்திருப்பது மாபெரும் பயனாகும்.
மனித சமூகம் உயர வேண்டும் என நினைக்கும் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இறுதிப் பேருரைகள்.
நூல் விபரம்
நூல் பெயர்: இறுதிப் பேருரைகள்
ஆசிரியர் : பேராசிரியர் பாவலன்
பதிப்பு வருடம் : 2023
பக்கங்கள்: 150
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
விலை : 90 ரூபாய்
இணையத்தில் வாங்க
https://tamizhbooks.com/product/irudhu-peruraikal/
https://www.panuval.com/irudhi-peruraikal-10022997
https://www.commonfolks.in/books/d/irudhi-peruraigal

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
தமிழ்ப் பேராசிரியர்
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி
ஆவடி, சென்னை – 600062
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!