இலக்கியங்களில் இறைவன் உறைந்திருக்கிறான். இதை நாம் அனைவரும் உணர வேண்டும். இறைவன் நம்மை விட உயர்ந்தவன் என்பதால் மட்டுமே அவனை இலக்கியம் போற்றவில்லை. ஒரு மனிதன் நல்வாழ்வின் மூலம் உயர்நிலை அடையலாம் என்பதை உணர்த்தவே இலக்கியம் இறைவனை ஓயாது பாடுகிறது.
தமிழ் இலக்கியங்களை ‘காலத்தால் முற்பட்டவை மற்றும் பிற்பட்டவை’ என வகைபடுத்தி வைத்துள்ளோம்.
இவற்றுள் ‘சங்ககால இலக்கியங்கள்’என்றும் ‘சங்ககாலத்தை ஒட்டியவை’ என்றும்,’பெரும் காப்பியங்கள்’ என்றும்,’சிறுகாப்பியங்கள்’ என்றும் உள்ளன.
பண்டைய இலக்கியங்களில் இறைவன் பற்றிக் குறிப்பிடாத இலக்கியங்கள் இல்லை என்பதால் நம் மொழியை ‘தெய்வத்தமிழ்‘ என்று போற்றுகின்றோம்.
தெய்வமே தமிழைத் தந்ததாக போற்றுகின்றோம்.
ஊழ்வினை
இறையுணர்வு என்பது நம்மிடையே காலம் காலமாக பண்பாடாக இருந்துள்ளது. நம் சக்திக்கு மேலான சக்தி ஒன்று இருக்கின்றது என்ற நம்பிக்கை இருந்தது.
நமக்கு வரும் நன்மைக்கும் தீமைக்கும் நாம் செய்த நற்செயல்கள் மற்றும் பாவச் செயல்களே காரணம் என்னும் நம்பிக்கையும் நம்மிடையே இருந்தது. இதனால் குற்றச் செயல்கள் குறைந்திருந்தன.
இக்கருத்தையே திருவள்ளுவர்
ஊழின் பெருவலி யாவுள மற்றுஒன்று
சூழினும் தான் முந்துறும்
என்று கூறுகின்றார்.
“யாதும் ஊரே யாவரும கேளீர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிது என மகிழந்தன்றும் இலமே...
என்ற புறநானூறு பாடலில் வரும் முதல் வரியை மட்டும் மேற்காணும் கருத்துக்குப் பரவலாக சொல்லுவார்கள்.
அடுத்து வரும் “யாவும் ஊழின் வழியே நிகழ்வன” என்று தெளிவுறுத்தும் கருத்தினைச் சொல்லுவதில்லை. நாமும் படிப்பதில்லை.
அடுத்து நல்வினை, தீவினை, நரகம், சொர்க்கம், மறு பிறப்பு, இம்மை, மறுமை என நம்பிக்கைக் கொண்டிருந்தோம்.
ஒரு சிலர் இவையெல்லாம் பொய் எனச் சொல்லி, மூட நம்பிக்கையெனப் பேசிப் பண்புடை மக்களைத் தன்னிலை பிறழச் செய்தனர்.
பண்டைய கலாசாரங்கள் மற்றும் பண்பாட்டை நம் இலக்கியங்கள் வாயிலாக அறிந்தனர் முன்னோர்.
இன்று நாம் நல்வினை, தீவினை, நரகம், சொர்க்கம், மறு பிறப்பு, இம்மை, மறுமை ஆகியவற்றை யோசிப்பதில்லை. நாம் அவற்றை அறிய நம் இலக்கியங்கள் காட்டும் சில வழிகளைப் பார்ப்போம்.
நல்வினை பற்றி நாலடியார்,
வளம்பட வேண்டாதார் யார்யாரு மில்லை
அளந்தன போகம் அவரவர் ஆற்றான்
விளங்காய் திரட்டினார் இல்லை களங்கனியைக்
காரெனச் செய்தாரும் இல். – 103
பாடலின் பொருள்:
செல்வத்தோடு வளமுடன் வாழ்தலை விரும்பாதவர் யாருமில்லை. ஆனால் அவரவர் செய்த புண்ணியங்களுக்கு ஏற்ப அவரவர் இன்ப நுகர்வுகள் வரையறை செய்யப்பட்டுள்ளன.
விளாங்காயை உருண்டையாக செய்தவருமில்லை. களாப்பழத்தைக் கருப்பாக செய்தவருமில்லை. இதேபோல் அவரவர் இன்பம் அவரவர் செய்த புண்ணியத்தால் இயற்கையால் அமைந்துள்ளது.
மேலும் தீவினை பற்றியும்
அறியாரும் அல்லர் அறிவ தறிந்தும்
பழியோடும் பட்டவை செய்தல் - வளியோடி
நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப!
செய்த வினையான் வரும்
என்று -108 ஆம் பாடல் குறிப்பிடுகின்றது.
நல்லறிவு கெடுவதற்கு காரணம் தீவினையே என மேற்காணும் பாடல் குறிப்பிடுகின்றது.
இப்பாடல்களின் பொருள் நம் வாழ்க்கை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதால் நாம் முயற்சி செய்யக் கூடாது என்பது அல்ல.
நாம் வறுமையில் வாடினாலும் பிறரைப் பார்த்துப் பொறாமை கொள்ளக் கூடாது; எப்போதும் நம் மன அமைதியை இழந்து விடக்கூடாது.
சில சமயங்களில் நமது முயற்சி தோல்வியைக் கொடுத்தாலும், அதனால் சிதைந்து போகாமல், ஊழ்வினை என்று சொல்லி நம் மனதை நாமே அமைதிப் படுத்த வேண்டும்.
நாம் வெற்றியில், செல்வத்தில் திளைத்தாலும், நான் என்ற ஆணவம் கொள்ளாமல், இந்த வாழ்க்கை இறைவன் அருளியது என்று எண்ணி அடக்கத்தோடு அடுத்தவருக்கு உதவியாக இருக்க வேண்டும்.
இந்தக் கருத்துக்கள்தான் இப்பாடல்களின் உட்பொருள்.
கூடவே கீழ்க்கண்ட திருக்குறளையும் மறந்து விடாமல் இருக்க வேண்டும்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
இறைவனே உனக்கு பலன் கொடுக்கா விட்டாலும் உன் முயற்சி உனக்கு பலன் கொடுக்கும் என்பதே இக்குறளின் பொருள்.
அதாவது மன அமைதிக்கு புறநானூறு மற்றும் நாலடியார் பாடலை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் குறளின் வழியில் விடாமுயற்சி செய்யுங்கள்.
மறு பிறப்பு
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
என்பது மறு பிறப்பு பற்றிய வள்ளுவர் வாக்கு ஆகும்.
உடல் அழிந்தாலும் உயிர் அழிவதில்லை. மரணம் என்பது உயிருக்குத் தூங்குவதைப் போன்றது. அந்த உயிர் வேறோர் உடலில் பிறப்பது தூங்கி விழிப்பது போன்றது என்பது மேற்காணும் குறளின் பொருளாகும்.
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது
என்கின்றது மறு பிறப்பு பற்றி மணிமேகலை.
தொல்லை நம் பிறவி எண்ணின் தொடுகடல் மணலும் ஆற்றா
எல்லைய, அவற்றுள் எல்லாம் ஏதிலம், பிறந்து நீங்கிச்
செல்லும் அக் கதிகள் தம்முள் சேரலாம், சேர்ந்து நின்ற
இல்லினுள் இரண்டு நாளை கற்றமே இரங்கல் வேண்டா.
என்று மறு பிறப்பு பற்றி சீவக சிந்தாமணி குறிப்பிடுகின்றது.
நம் பிறவிகளை எண்ணிக் கணக்கிட்டால் அவை தோண்டப் பெற்ற கடலின் மணலும் ஒப்பிடப் போதாத அளவுடையன என்பது மேற்காணும் பாடலின் பொருளாகும்.
சொர்க்கம்
யான்எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்
என்று சொர்க்கம் பற்றி திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார்.
உலகத்தில் பற்றுக்களை விட்டவன் தேவர்களை விடச் சிறந்தவன். ‘நான்’ ‘என்னுடையது’ என்ற மயக்கத்தை விட்டவனே தேவர்களுக்கும் மேலான வீட்டின்பத்தை அடைவான் என்பது மேற்காணும் குறளின் பொருளாகும்.
நரகம்
ஓக்கிய ஒள்வாள்தன் ஒன்னார்கைப் பட்டக்கால்
ஊக்கம் அழிப்பதூஉம் மெய்யாகும் - ஆக்கம்
இருமையும் சென்று சுடுதலால் நல்ல
கருமமே கல்லார்கண் தீர்வு
என்று நாலடியாரின் 129 பாடல் நரகம் பற்றிக் கூறுகிறது.
தீயவருக்குச் செய்த உதவி நம்முடைய இம்மை மறுமைப் பயன்களை தொடர்ந்து கெடுக்கும். மறுமையில் நரகத்திற்கும் காரணமாகும் என்பதே மேற்காணும் பாடலின் பொருளாகும்.
சிலர் தான் கொண்ட எண்ணங்களை மக்களிடையே புகுத்த நினைத்து மாறுபட்ட கருத்துக்களை திணித்தனர். திணித்துக்கொண்டே உள்ளனர். எல்லோரும் இலக்கியங்களைப் படிப்பதில்லை. படித்த சிலரும் கருத்தை சிதைத்து விஷத்தைத் தூவினர்.
பெயர் வைப்பது
ஒரு சிலர் இன்றும் பிள்ளைகளுக்கு சாதகப்படி பெயர் வைக்க தத்தம் இல்லங்களில் விழா நடத்துகின்றனர். இவற்றை யாரோ இக்காலத்தில் புகுத்தியதாக கேலி பேசுகின்றனர்.
சீவக சிந்தாமணி என்ற காப்பியக் காலத்தில் பெயர் சூட்டு விழா நிகழ்வினை பார்ப்போம் .
தத்தம் நிலனும் உயர் விழிவும் பகையும் நட்புந் தந்தசையும்
வைத்து வழுவில் சாதகமும் வகுத்த பின்னர்த் தொகுத்தநாட்
சச்சந்தனனே, சுதஞ்சணனே, தரணி கந்துக்கடன், விசயன்,
தத்தன், பரதன், கோவிந்தன் என்று நாமம் தரித்தாரே.
என்ற பாடலின் வழியாக பண்டைக்கால நிகழ்வுகளைக் காண்கின்றோம்.
பொருள்
சோதிடர்கள் கோள்களின் நிலையை அறிந்து பிள்ளைக்கு ஜாதகம் கணித்தப் பின் பிறந்து பன்னிரண்டாம் நாள் சச்சந்தன், சுதஞ்சனன், தரணி, கந்துக்கடன், விசயன், தத்தன், பரதன் , கோவிந்தன் என்ற பெயர் வைப்பார்கள்.
இறை நம்பிக்கை
காலத்தால் முந்திய கலாசாரத்தை ஏற்க மனமில்லாத ஒருசாரார் பொய்யைப் புகுத்தி பண்பாட்டை சீர்குலைத்தனர்.
இன்று நாம் பின்பற்றும் இறை நம்பிக்கை பன்னெடுங்காலமாக பின்பற்றியதேயாகும். அண்மையில் புகுத்தப்பட்டதில்லை.
காலத்தால் ஒருசில முறைகள் மாற்றம் கண்டிருக்கலாம். ஆனால் அடிப்படை மிகவும் சக்தி வாய்ந்ததாகும். நாம் ஏமாற்று பேர்வழிகளிடம் விலகி இருத்தல் வேண்டும்.
நம்முடைய முன்னோர்கள் வாழையடி வாழையாக போற்றி வந்த இதிகாசக் காட்சிகளையும் இறைவழிபாட்டையும், இலக்கியங்கள் போற்றி வந்தன.
ஆதியில் இயற்கையை வணங்கினோம். இறைவன் இருப்பதாக எண்ணி மலை (கல்), மரம், காடு, நிலம், நீர் (நதி, கடல்) போன்றவற்றை வணங்கினோம்.
சூரியனையும் திங்களையும் வணங்கினோம். படிப்படியாக உருவ வழிபாட்டிற்கு வந்தோம். தத்தம் மனத்தில் தோன்றும் வடிவத்தை வடித்து வைத்து வணங்கினோம்.
நிலத்தை அதன் தன்மைக்கேற்ப ஐந்து வகையாகப் பிரித்து நிலத்திற்கு உரிய கடவுளர்களைக் காட்டினார் தொல்காப்பியர்.
நம் இலக்கியங்களில் இறைவன் இன்று நேற்று வரவில்லை; பல்லாயிரம் ஆண்டுகளாகவே உறைந்துள்ளான்.
முதலில் பழம்பெரும் நூலான பரிபாடலில் இறை உணர்வாக சொல்லப்பட்டுள்ளதை அறிந்துணர்வோம்.
பரிபாடலில் திருமாலைப் பற்றியும் முருகப் பெருமானை பற்றியும் போற்றப்படுகிறது.
திருமால் எடுத்த பத்து அவதாரங்களில் கூர்ம அவதாரத்தையும், வராக அவதாரத்தையும், நரசிம்ம அவதாரத்தையும், வாமன அவதாரத்தையும், கண்ணன் அவதாரத்தையும் போற்றுகின்றது பரிபாடல்.
கூர்ம அவதாரம்
திகழ் ஒளி முந்நீர் கடைந்த அக்கால் வெற்புத்
திகழ்பு எழ வாங்கித் தம் சீர்ச் சிர்து ஏற்றி
மகர மறிகடல் வைத்து நிறுத்துப்
புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்
அமுது கடைய இருவயின் நாண் ஆகி
மிகாஅ இருவடம் ஆழியான் வாங்க
உகாஅ வலியின் ஒரு தோழம் காலம்
அறாஅது அணிந்தோரும் தாம்
மிகாஅ மறலிய மே வலி எல்லாம்
புகாஅ டிதிர் பூண்டோரும் தாம்”... பரிபாடல் திரட்டு 1-64-73
தேவர்கள் மற்றும் அசுரர்கள் பாற்கடலை கடைந்த போது மந்தர மலை மேலே எழ, பாற்கடலில் ஆமை வடிவெடுத்து திருமால் தன் அழகிய முதுகில் நிறுத்திய செய்தியை இப்பாடல் கூறுகின்றது.
வராக அவதாரம்
பன்றி அவதாரம் எடுத்து ஊழிக் காலத்தில் இப்புவியை மீட்ட வரலாற்றையும், அதனால் இக்கல்ப காலத்தின் பெயர் ஸ்வேத வராக கல்பம் என்று வழங்குவதாக சொல்லுகின்றது பரிபாடல்.
…..“.கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய.”.. என்ற பரிபாடல் இரண்டாம் பாடல் மூலம் என அறிகின்றோம்.
மேலும் பரிபாடல் நான்காவது பாடலில்
“ புருவத்துக் கருவல் கந்தத்தால்
தாங்கி இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவன்
ஓகிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்”...
பொருள்: முன்னாளில் இந்த நிலம் வெள்ளத்தில் மூழ்கிய போது, நீ பன்றியாகி வன்மையான கழுத்தால் தாங்கி இவ்வுலகை மேலே கொண்டு வந்து திருத்திய செய்கை நிலத்தின் நடுவே நின்று, அதைத் தாங்கி உயர்ந்த பலராலும் புகழப்படும் மேரு மலையினது செய்கையை ஒக்கும்.
நரசிம்ம அவதாரம்
“செயிர் நீர் செங்கட் செல்வ நிற் புகழ
புகைந்த நெஞ்சின் புலர்ந்த சாந்தின்
பிருங்கலாதன் பலபல பிணிபட
வலந்துழி மலர்ந்த நோய்கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன் தாதை ஆகலின்
இகழ்வோன் இகழா நெஞ்சினனாக நீ இகழா
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி
ஒன்றா நட்டவன் உறுவரை மார்பின்
படிமதம் சாமப ஒதுங்கி
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப
வெடி படா ஒடி தூண் தடியொடு
தடி தடி பலவகிர் வாய்த்த உகிரினை”...
பரிபாடலின் நான்காம் பாடல் ப்ரகலாதன் சரிதத்தையும் நரசிங்க அவதாரத்தையும் காட்டுகின்றது.
பிரகலாதன் திருமாலைப் புகழ்ந்து பேச பொறுக்க மாட்டத இரணியன் பிரகலாதனுக்கு பல துன்பங்கள் அளித்ததால் துன்புற்றான்.
தன்னை இகழ்பவன் தன் தந்தையே என்பதால் இகழாதவனாய் நின்றான்.
இரணியனின் மார்பில் பகைவலி அழியும்படி பாய்ந்து துன்பத்தைக் காட்டும்படி முரசு ஒலிக்க நீ பிளவுபட்டு வெளிப்பட்டதால் ஒடிந்த தூணின் பிளப்புடன் நின்னால் பிளக்கப்பட்ட இரணியனின் தசை பற்பல விழுந்தன. அந்த இரணியனின் உடலைப் பிளந்த நகங்கள் உடையவனே!
வாமன, திருவிக்ரம அவதாரம்
“கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை” என்ற பரிபாடல் மூன்றாம் பாடலில் உலகளந்த அடியினைப் போற்றுகின்றது.
கண்ணன் அவதாரம்
“செங்கட் காரி கருங் கண் வெள்ளை
பொன் கட் பச்சை பைங்கண் மாஅல்
இட வல குட அல கோவல காவல ”
என்று பரிபாடலின் மூன்றாம் பாடலில் கிருஷ்ணாவதாரம் போற்றப்படுகின்றது.
முருகப் பெருமான்
முருகப் பெருமானையும் திருப்பரங் குன்றத்தையும் பரிபாடல் போற்றுவதைப் பார்ப்போம்.
மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செலவத்துப்
புள்மிசை கொடியோனும் புங்கவம் ஊர்வோனும்
மலர்மிசை முதல்வனும் மற்று அவனிடைத் தோன்றி
உலகு இருள் அகற்றிய பதின்மரும் இருவரும்
மருந்து உரை இருவரும் திருந்து நூல் எண்மரும்
ஆனிரை முதல்வனின் கிளந்த
நாதர் பன்னொருவரும் நன் திசைக் காப்போரும்
யாவரும் பிறரும் அமரரும் அவுணரும்
மேவரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்
பற்றாகின்று நின் காரணமாக
பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்”– பரிபாடல் 8
பொருள்
முருகப் பெருமானே! திருமாலும் சிவனும் முப்பத்து மூன்று தேவர்களும் மற்றுமுள்ள தேவர்களும் முனிவர்களும் உன்னைக் காணும் பொருட்டு இம்மண்ணுலகத்தில் வந்து தங்கும் இடமாயுள்ள திருப்பரங்குன்றமானது இமயமலையைப் போன்று உள்ளது.
இவ்வாறாக நம் முன்னோர்கள் போற்றியதை அறியாததுமன்றி அறிய முயலாததுவும் நம் தவறு. அறிந்தவர் பாமரர்க்கு விரித்துரைத்து போற்றாததுவும் தவறே.
இனியாவது நம் முன்னோர் போற்றிய கலாசாரத்தைப் பேணிப் போற்றுவது நம் கடைமை என எண்ணி இலக்கியங்களை அறிதல் வேண்டும். இலக்கியங்களில் இறைவன் பற்றி அறிதல் வேண்டும். அறிந்தாலன்றி நம் பழமையான சிறந்த காலசாரத்தை அறியாது இழந்தவராவோம்.
நம்முடைய இறைக்கொள்கை எக்காலத்தியது என்று கணக்கிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளாக பேணிக்காத்தது. இவற்றையெல்லாம் நாம் அறிவது முக்கியம்.
இராமமூர்த்தி இராமாநுஜதாசன்
திருநின்றவூர்-602024
கைபேசி: 94444104