இலைகள் ஏன் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன? என்ற கேள்வி எப்போதாவது உங்களுக்கு தோன்றியது உண்டா?
நம்முடைய அன்றாட வாழ்வில் மரங்கள், செடிகள், கொடிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தாவரங்களைப் பார்க்கின்றோம்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான அளவு மற்றும் வடிவங்களில் இலைகளைக் கொண்டிருக்கின்றன.
தென்னை மரம் நீண்ட, குறுகிய இலைகள் என்னும் கீற்றுக்களைக் கொண்டுள்ளது. அரசமரம் இதய வடிவிலான இலைகளையும், வேப்பமரம் மெல்லிய குறுகிய இலைகளையும், வாழை நீண்ட அகன்ற இலைகளையும், தாமரை வட்ட வடிவ இலைகளையும் கொண்டுள்ளது.
தாவரங்களின் இலைகள் ஏன் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன? என்ற கேள்விக்குப் பதில் அதனுடைய வாழிடம் மற்றும் சுற்றுசூழல்.
இலைகள் தங்களின் பணிகளை செவ்வனே செய்வதற்கு ஏற்றவாறு அவற்றின் வடிவம் மற்றும் அளவுகளை இயற்கை வடிவமைத்துள்ளது.
இலைகள்தான் தாவரங்களின் சமையலறை. இங்குதான் தாவரங்களுக்குத் தேவையான உணவு தயாரிக்கப்படுகிறது.
தாவரங்கள் தங்களுக்குத் தேவையான உணவினை பச்சையம், சூரிய ஒளி, நீர், தாது உப்புக்கள், கார்பன்-டை-ஆக்ஸைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி தயார் செய்கின்றன.
இதில் நீர் மற்றும் தாதுஉப்புக்கள் வேர்களால் பூமியிலிருந்து உறிஞ்சப்படுகின்றன. சூரியஒளி மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு இலைகள் மூலமே பெறப்படுகிறது.
சூரியஒளியானது இலையின் மேற்பரப்பு வழியாகவும், கார்பன்-டை-ஆக்ஸைடு ஸ்டோமாட்டே எனப்படும் இலைத்துளைகளின் வழியாகவும் பெறப்படுகிறது.
கார்பன்-டை-ஆக்ஸைடினைப் பெற இலைத்துளைகள் திறக்கும்போது, இலைகளில் உள்ள நீர் துளைகளின் வழியாக ஆவியாகி விடுவதோடு தாவரங்களின் வெப்பநிலை அதிகரிக்கவும் செய்யும்.
ஆதலால் தாவரங்கள் கார்பன்-டை-ஆக்ஸைடினைப் பெறும் போது அதிகப்படியான நீரிழப்பைத் தவிர்த்து வெப்பநிலையை சமநிலையில் வைக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
இப்பொறுப்பு தாவரத்தின் இலைகளுக்கே உண்டு. எனவேதான் பல்வேறு சூழ்நிலைகளில் வாழும் வெவ்வேறு தாவரங்கள் பல்வேறு வடிவங்களிலும், அளவுகளிலும் காணப்படுகின்றன.
இலைகளின் வெவ்வேறு வடிவங்கள்
மழைக்காடுகளில் மரக்கவிகையின் வெளிப்புற அடுக்கில் உள்ள மரங்களின் இலைகள் மிகவும் சிறிதாகவும், சிக்கலான விளிம்புகள் மற்றும் மடல்களைக் கொண்டும் உள்ளன.
வெளிப்புற அடுக்கில் சூரிய வெப்பம் மிகுதியாதலால் குறைந்த வெப்பத்தைப் பெறும் பொருட்டும், மரக்கவிகையின் கீழடுக்கில் உள்ளவற்றிற்கு வெப்பம் கிடைக்கும் பொருட்டும் இலைகளின் மேற்பரப்பு குறைந்து சிறிதாக உள்ளன.
அதே நேரத்தில் மரக்கவிகையின் கீழடுக்கில் உள்ள தாவரங்களின் இலைகள் சூரிய வெப்பத்தை அதிகமாக பெறும் நோக்கில் பெரிதாகவும், மேற்பரப்பு அகன்றும் காணப்படுகின்றன.
வறண்ட நிலத்தில் உள்ள தாவரங்களின் இலைகள் குறைந்தபட்ச நீரிழப்பிற்காகவும், நீண்ட நாட்கள் இருக்கும் பொருட்டும் ஊசியாகவும், இலைகளின் மேற்பரப்பில் மெழுகுப்பூச்சும் குழியான இலைத்துளைகளையும் கொண்டுள்ளன.
இலைகள் தண்டில் இணைப்பட்டிருக்கும் பகுதியில் வளையும் தன்மை கொண்டும், நெகிழ்வானதாகவும், எளிதில் பிரிக்கக் கூடியதாகவும் இருக்கிறது.
ஏனெனில் காற்று வீசும் போது காற்றானது எளிதாக இலையை கடந்து செல்ல வேண்டும். இல்லையெனில் காற்றின் சக்தியானது மரத்தினை வேரோடு சாய்த்து விடும்.
ஆகவேதான் காற்று அதிகமாக வீசும் இடங்களில் உள்ள தாவரங்களில் ஒன்றான தென்னை மரமானது நீண்ட கீற்று போன்று எளிதில் காற்று கடந்து செல்லும் வகையிலான இலைகளைக் கொண்டுள்ளது.
பைன் போன்ற மரங்கள் நூல் வடிவிலான இலைகளைக் கொண்டுள்ளன.
தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களின் தாவரங்கள் சதைப்பற்றான தண்ணீரை தக்க வைத்துக் கொள்ளும் சிறிய அளவிலான இலைகளைக் கொண்டுள்ளன. இதனால் இவ்வகைத் தாவரங்களில் நீரிழப்பு தடுக்கப்படுகிறது.
தண்ணீரில் வளரும் தாவரங்கள் அவற்றின் இலைகளை தண்ணீருக்கு மேலே வைத்திருக்கின்றன. ஏனெனில் அங்குதான் அத்தாவரத்திற்குத் தேவையான ஒளி மற்றும் காற்று கிடைக்கும். இத்தவாரங்கள் காற்றுப் பைகளுடன் கூடிய தடிமனான இலைகளைக் கொண்டுள்ளன.
வறண்ட குளிர்ந்த இடங்களில் உள்ள தாவரங்கள் தடிமன் குறைந்த, நீரிழப்பு குறைவான இலைகளைக் கொண்டுள்ளன. இதனால் குளிரால் இலைகள் சேதமடைவது தடுக்கப்படுகிறது.
ஒரு தாவரத்தின் இலைகளின் வடிவம் ஒளிர்ச்சேர்க்கையின் முதன்மை செயல்பாடு மற்றும் அதனுடைய சுற்றுசூழல் ஆகியவற்றால் சமமாக தீர்மானிக்கப்படுகிறது.