ஈடுபாடு – கதை

நவக்கிரகத்தை வலம் வந்த சமயம் கோயிலை ஒட்டிய புல்தரையில் அமர்ந்து அந்த இரு பெண்மணிகளும் உரையாடிக் கொண்டிருந்தனர். இருவருமே சம வயதுக்காரர்கள்; ஐம்பதைத் தாண்டியவர்கள்.

“என்னவோம்மா, நானும் தவறாமல் தினம் இந்த கோயிலுக்கு வந்து ஒரு சந்நிதி பாக்கியில்லாமல் வேண்டிக்கிட்டுத்தான், தெய்வத்திடம் புலம்பிக்கிட்டுத்தான் இருக்கேன். தெய்வம் கண் திறந்து பார்த்தால்தானே?”‘ சுபத்ரா அம்மாள் சலித்துக் கொண்டாள்.

“பையனோட வேலை சமாச்சாரத்தைத் தானே சொல்றே சுபத்ரா. நம்பிக்கையில் என்ன இருக்கு? ஏதெது எப்பெப்போ எப்படி எப்படி நடக்குமோ அப்படித்தான் நடக்கும்” என்றாள் சுபத்ரா அம்மாளின் தோழி.

“இதுவரைக்கும் பத்து இண்டர்வியூ போயிட்டு வந்துட்டான். என்ன படிச்சு என்ன செய்ய?”

அந்த அம்மாள் மீண்டும் சலித்துக் கொண்டிருக்கும் சமயம் நான் அவர்களைக் கடந்தேன்.

இருவருமே எழுந்து நின்று “வணக்கம் தம்பி!” என்றனர்.

“வணக்கம்மா! தினேஷ் எப்படியிருக்கான்? என்ன செய்யறான்!” என்றேன்.

“அவனைப் பற்றித்தான் பேசிக்கிட்டிருக்கேன் தம்பி. இதோட பத்து ஸ்கூலுக்கு இண்டர்வியூ போயிட்டு வந்துட்டான். உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்தால் சொல்லுங்க தம்பி” என்றாள் சுபத்ரா அம்மாள்.

சுபத்ரா அம்மாள் எங்கள் தெருதான். நான் அந்த தெருவுக்குக் குடிவந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு, எங்கள் வீட்டுக்குப் பத்து பதினைந்து வீடுகள் தள்ளி குடி வந்த குடும்பம்.

அந்த அம்மாளின் கணவர் ஏதோ தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்கிறார் என்பது மட்டும் தெரியும்.

சுபத்ரா அம்மாளுக்கு மூன்று பிள்ளைகள். ஒரு பெண். பெண் திருமணமாகிச் சென்று விட்டாள். பெரியவன்தான் தினேஷ். அடுத்தடுத்த இருவரும் கல்லூரியிலும், பள்ளியிலுமாக படித்து வருகின்றனர்.

யுனிவர்சிட்டில் வேதியியல் பேராசிரியராகப் பணிபுரியும் என்னிடம் தினேஷூம் அவன் தம்பியும் பாடம் சம்பந்தப்பட்ட ஐயங்களைத் தீர்த்துக் கொள்ள அடிக்கடி வந்து போனதால் ஏற்பட்ட பழக்கம்.

தட்டுத்தடுமாறி ஒருவழியாய் எம்.எஸ்ஸியை முடித்து வேலைக்கு அலைந்து கொண்டிருக்கிறான் தினேஷ்.

குடும்ப நிலை புரியாமல் விளையாட்டுப் பிள்ளையாய், தான் தோன்றித்தனமாய் திரியும் பொறுப்பில்லாத பிள்ளை.

பெட்டிக்கடை வாசம்தான் எப்போதும். கூடவே இவனை ஊக்கப்படுத்தும் இவனைப் போன்ற நண்பர்கள்.

என் தலை தெரிந்ததும் சிகரெட்டை அவசர அவசரமாக இழுத்துக் காலின் கீழ் போட்டு மிதித்து சபாரியை வாயில் போட்டு மென்று அசட்டுச் சிரிப்புடன் ‘குட்மார்னிங் சார்’ சொல்லும் ரகம்.

சுபத்ரா அம்மாளைத் தோழியுடன் கோயிலில் பார்ப்பதுடன் சரி. பேச்சு கொடுப்பதில்லை. தினம் கோயிலுக்கு வருவார்கள்.

ஒவ்வொரு நாளும் தரிசனம், பிரதட்சணம் யாவும் முடிந்து புல்தரையில் அமர்ந்திருக்கும் போதெல்லாம் இவர்களைக் கவனித்திருக்கிறேன்.

சுபத்ரா அம்மாளின் கைகள்தான் தொழுதவண்ணம் இருக்குமே தவிர, வாய் சலசலவென எதையாவது தோழியுடன் பேசிக் கொண்டிருக்கும்.

“இந்த மாசம் சீட்டுக் குலுக்கலில் கசறு பணம் கொஞ்சம் தாண்டி வந்தது”

“இருந்தாலும் தேங்காய் விலை அநியாயமா விக்குதடி. சட்னியை எல்லாம் மறந்துவிட வேண்டியதுதான்”

கோவில் சன்னதி முன்பு எவரைப் பற்றியும் கவலை கொள்ளாது சுபத்ரா அம்மாள் சப்தம் போட்டு தோழியிடம் பேசிக் கொண்டிருப்பாள்.

தீபாதாரணையாகட்டும், அர்ச்சனையாகட்டும், நமஸ்கரிக்கும் போதாகட்டும், பிரதட்சணம் செய்யும் போதாகட்டும் சுபத்ரா அம்மாளின் வாய் ஓயவே ஓயாது.

சம்பந்தமில்லாமல் கோயில் என்பதைக்கூட மறந்து தொணதொணத்துக் கொண்டிருப்பாள். அவள் தோழியும் நிம்மதியாகத் தரிசனம் செய்ய முடியாமல் தவிப்பாள்.

“என்ன தம்பி? மௌனமாயிட்டீங்க? உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்தா சொல்லுங்களேன்” என மறுபடியும் சுபத்ரா அம்மாள் கேட்டதும் நினைவலைகளிலிருந்து மீண்டு சமாளித்துக் கொண்டு,

“இப்படி உட்காருங்கம்மா. உங்களைப் பார்த்து பேசணும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டிருந்தேன். இன்னிக்குதான் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு” என்றவாறே கர்ச்சீப்பைத் தரையில் போட்டு அமர்ந்தேன்.

அவர்கள் என் எதிரில் அமர்ந்து கொள்ள, நான் பேச ஆரம்பித்தேன்.

“இதப் பாருங்கம்மா. எந்த ஒரு காரியமாகட்டும் முன் ஈடுபாடுங்கிறது ஒவ்வொருத்தருக்கும் ரொம்ப அவசியம் இல்லையா?

பரீட்சை எழுதுற மாணவன் மனசை திசை திருப்பாம படிச்சதையெல்லாம் நினைவுக்கு கொண்டு வந்து கவனத்தோட எழுதினாத்தான் பாஸ் பண்ண முடியும். பேப்பரையும் பேனாவையும் வச்சுக்கிட்டு மனசை வேறு எங்கேயோ செலுத்துக்கிட்டிருந்தா என்ன பிரயோஜனம்?

உங்க மகன் தினேஷ் நடவடிக்கைகளை எல்லாம் ஊன்றி கவனிச்சீங்களா? அவன் போக்குகளைக் கண்காணிச்சீங்களா?”

“என்ன தம்பி…? என்னென்னவோ சொல்றீங்களே?” பதறினாள் சுபத்ரா அம்மாள்.

“இண்டர்வியூவுக்குப் போகிறவன், போவதற்கு முன்னாலேயே ஸ்கூல் ஆச்சே, ஆசிரியர் வேலை ஆச்சேன்னு படிச்சதையெல்லாம் மீண்டும் ஞாபகத்துக்குக் கொண்டு வந்து முன்னதாகவே தயார் நிலையிலே போகணும். எவ்வித முன் ஆயத்தமும் இல்லாமல் போய், அங்கே கேட்கிற கேள்விகளுக்கு விடை தெரியாமல் முழிச்சிக்கிட்டிருந்தா எப்படிம்மா இவனை ஆசிரியர் வேலைக்கு செலக்ட் பண்ணுவாங்க…?”

“அவன் எங்க தம்பி வீட்ல தங்கறான், எப்பப் பார்த்தாலும் வெளியே சுத்தறான்.”

“அங்கேதான் நீங்க கோட்டை விட்டுட்டீங்க. கேள்வி கேட்பார் இல்லைன்னு தெரிஞ்சதும் பழக்க வழக்கங்களும் மாறிடுச்சு அவனுக்கு. ஏதோ ஒப்புக்கு வேலை தேடறதா பாவ்லா காட்டிக்கிட்டிருக்கான். இவ்வளவு ஏன்? உங்களையே எடுத்துக்குங்க.

கோயிலுக்கு சாமி கும்பிட வர்றீங்க. முழு மனசோட பய பக்தியோட உங்க மனம் சாமிகிட்ட ஈடுபடுதா?

யந்திரத்தனமா நமஸ்காரம் செய்யறீங்க, கோயிலைச் சுத்தறீங்க. உள்ளம் வேறு எங்கேயோ போயிடுது. வாய் பல விஷயங்களைப் பேசுது. சிரத்தையில்லாம, ஏனோ தானோன்னு, கடமையேன்னு கோயிலுக்கு வர்றீங்க. உங்க பிரார்த்தனைக்கு தெய்வம் செவி சாய்க்கலேங்கறீங்க.

பிரார்த்தனையின் போது உங்க மனம் தெய்வத்தோட லயிச்சு இருக்கா? சொல்லுங்கம்மா…! முழு ஈடுபாட்டோட, சாஸ்திர சம்பிரதாயத்தோட சாமி கும்பிடுறீங்களா?

பிரதிபலனை எதிர்பார்க்காம, ஆத்மார்த்தமாய் நாம் சாமியோட ஒன்றிப் போய், மனமுருக பிரார்த்தனை பண்ணி, நம்ம முயற்சியையும் விடாம செஞ்சுக்கிட்டிருந்தா, மற்றதையெல்லாம் அந்த ஆண்டவன் பார்த்துக்குவான்மா…”

“இப்பதான் புரியுது தம்பி! எவ்வளவு சுயநலத்தோட நான் கோயிலுக்கு வந்து போயிக்கிட்டிருக்கேன்னு…?”

“அது மட்டுமில்லைம்மா. தினேஷ் என்றைக்காவது இந்த கோயில் பக்கம் தலைகாட்டிருக்கானா? அவன் மனசுல பக்தின்னு ஒண்ணு இருக்கா?

ஆண்டவனையும் வேண்டிக்கணும். அதே சமயம் நம்ம முயற்சியும் இருக்கணும். எந்த காரியத்தையும் யந்திரத்தனமாய் செய்யாம, முழு ஈடுபாட்டோட செய்யச் சொல்லுங்க!”

“வாஸ்தவம்தான் தம்பி” என்றவாறே ஒருவிதப் புதுத்தெம்புடனும் மனத்தெளிவுடனும் ஒரு முடிவோடு எழுந்தாள் சுபத்ரா அம்மாள்.

ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998

One Reply to “ஈடுபாடு – கதை”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.