நீருடன் ஓர் உரையாடல் 4 – ஈரப்பதம்

காலை நான்கு மணி இருக்கும். விழித்துக் கொண்டேன். எழுந்து சென்று நீரால் முகத்தைக் கழுவினேன். நீர் சில்லிட்டது. எனது தூக்கம் முற்றிலும் நீங்கியது.

சில நொடிகள் வீட்டிற்குள் நடந்தேன். பின்னர் வாசற்கதவை திறந்து வெளியே வந்தேன். வெளிச்சம் இல்லை. செயற்கை ஒலிகளும் கேட்கவில்லை.

இரவின் அமைதி எங்கும் ஆட்கொண்டிருந்தது. எனினும் பலவித பறவைகளின் ஒலிகளை அவ்வப்பொழுது கேட்க முடிந்தது. பறவைகளின் ஒலிகள் என்னை கவர்ந்தன‌.

வீட்டின் வெளிமுற்றத்தில் வந்து நின்றேன். காற்றும் குளிச்சியுடன் இருந்தது. காரணம் ‘காற்றில் ஈரப்பதத்தின் அளவு அதிகம் இருக்கும்’ என்று எண்ணிக் கொண்டேன்.

அப்பொழுது எனது சிந்தனை ஈரப்பதத்தில் மூழ்கியது. ஈரப்பதம் குறித்த அறிவியல் செய்திகள் எனது நினைவிற்கு வந்தன.

ஈரப்பதம் என்பது வாயு நிலையில் இருக்கும் நீர் தான். ஆவியாதல் நிகழ்வு மூலமாக திரவ நீர் ஈரப்பதமாக மாறுகிறது. நீர் ஆவியாவதற்கு சூழ்நிலையின் வெப்பநிலையே போதும். நீர் கொதிப்பதற்கு தான் நூறு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படுகிறது.

மேலும், ஆவியாதலை போல், பதங்கமாதல் மூலமகாகவும் நீர் வாயு நிலைக்குச் செல்லும்.

பதங்கமாதல் என்பது திடநிலையில் இருக்கும் ஒரு பொருள் நேரடியாக ஆவிநிலைக்கு செல்லும் நிகழ்வு தான். எப்படி திடநிலையில் இருக்கும் கற்பூரம் எரியும் பொழுது, அது நேரடியாக வாயுவாக மாறுகிறதோ, அதேபோன்று பனிக்கட்டியும் நேரடியாகவும் ஆவியாகும் காட்சி என் மனதில் வந்து சென்றது.

அத்தோடு மின்னல் உருவாவதற்கும் நீர் தான் கரணமாக இருக்கிறது. அதாவது மழையின் பொழுது, மேகங்களில் இருக்கும் நீர்த்துளிகள் மற்றும் பனிக்கட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு பின்னர் விலகிச் செல்கின்றன. இதனால் மேகங்களின் அடியில் நிலையான மின்துகள்கள் உருவாகின்றன. இந்த மின்துகள்களே மின்னலுக்கு காரணமாக இருக்கின்றன. இந்த அறிவியல் விளக்கமும் என் நினைவிற்கு வந்தது.

அப்பொழுது “கொக்கரக்கோ… கொக்கரக்கோ…” என்று சேவல் கூவும் சத்தம் எங்கோ கேட்டது. மீண்டும் வீட்டுற்குள் நுழையலாம் என எண்ணி திரும்பினேன்.

“காலை வணக்கம் சார்” என்ற குரல் ஒலி கேட்டது.

திரும்பி பார்த்தேன். எதிரே யாரும் இல்லை. காற்றும் அதிலிருக்கும் வாயு நிலை நீரான ஈரப்பதத்தை தவிர. சில நொடிகள் அமைதியுடன் நின்றேன்.

“நான் தாங்க நீர். காத்துல இருக்கும் நீர் பேசுறேன்” என்றது.

“ஆ…ஆம்ம்ம் நினைச்சேன். நீயாகத்தான் இருப்பேன்னு” என்றேன்.

“இல்லையே, நீங்க கொஞ்சம் பயந்தா மாதிரி தெரிஞ்சுது”. என்றது நீர்.

“இல்லையே, நான் ஒன்னும் பயப்படலையே. உன்னோட குரல் தான் எனக்கு நல்லா பழகிடுச்சே.” என்று சமாளித்தேன்.

“அப்ப சரிங்க, என்ன காலையிலேயே ரொம்ப யோசனையா இருக்கீங்க?” என்றுக் கேட்டது நீர்.

“உம்ம்… காற்றுல நீ ஈரப்பதமாகவும் இருக்கியே அதத்தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்.” என்றேன்.

“ஓ…ஓ…” என்றது நீர்.

அப்பொழுது சமீபத்தில் நான் படித்த அறிவியல் ஆய்வுக் கட்டுரை ஒன்றும் என் நினைவிற்கு வந்தது. அதில், ஈரப்பதத்திலிருந்தும் மின்சாரம் பெற முடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை உடனே நீரிடம் கூறினேன்.

ஆச்சரியம் அடைந்த நீர் “இது எப்படி சாத்தியமுன்னு சொல்ல முடியுமா?” என்றது.

“ஆம்ம்…சாத்தியம் தான். இயற்கையாகவே அதிகப்படியான ஈரப்பதத்துல சில உலோகங்களின் மீது மின்துகள்கள் தோற்றுவிக்கப்படுது. இதுக்கு காரணம், வாயு நிலை நீர்மூலக்கூறுகள் ஹைட்ராக்சைடு (OH−) மற்றும் ஹைட்ரஜன் (H+) அயனிகளா மாறி அவை உலோகத்தின் மீது உறிஞ்சப்படுவதாலத்தான். உலோகங்கள பொருத்து அதன் மின்சுமைகளும் மாறுது.

உதாரணத்துக்கு அலுமினியம் மற்றும் குரோம் முலாம் பூசப்பட்ட பித்தளை ஐம்பது சதவிகித ஈரப்பதத்துல எதிர் மின்சுமை அடையுது. இதுவே எஃகு நேர்மின் சுமை அடையுது. வெவ்வேறு மின்சுமை பெற்ற இரண்டு உலோகங்களை ஒன்றிணைக்க, அவற்றுல மின்னழுத்தம் தோற்றுவிக்கப்பட்டு அது மின்சாரமா மாறுது” என்றேன்.

“எனக்கு இதுல நாலு கேள்விகள் இருக்கு.” என்றது நீர்.

“உனக்கும் கேள்விகளா? ஒவ்வொன்றா கேளேன்.” என்றேன்.

“உம்ம்… என்ன பொதுவா நடுநிலை மூலக்கூறுன்னு தானே சொல்லுவாங்க. காரணம், நான் ஒரு பங்கு ஆக்சிஜன் மற்றும் இருபங்கு ஹைட்ரஜன் மூலக்கூறாலத்தானே ஆக்கப்பட்டிருக்கேன்.” என்று கேட்டது நீர்.

“சரி தான். ஆனா சில குறிப்பிட்ட வேதிச் சூழ்நிலையில நீ பிரிகை அடைஞ்சு ஹைட்ராக்சைடு (OH−) மற்றும் ஹைட்ரஜன் (H+) அயனிகளா மாறுவ. உனக்கு தெரியாதா?” என்றேன்.

“ஓ…ஓ… அப்படியா! நானும் சூழ்நிலையப் பொருத்து மாறுவேனா” என்று கூறியது நீர்.

“பின்ன மாறாதது உலகத்துல எது?” என்று கேட்டேன்.

“சரி, நீங்க சொன்ன பித்தளை, எஃகு இதெல்லாம் உலோகமா?” என்று கேட்டது நீர்.

சரியான கேள்வியை நீர் கேட்டது எண்ணி வியந்தேன். “மன்னிச்சுக்கோ. பித்தளை, எஃகு-இதெல்லாம் உலோகம் இல்ல, உலோக கலவை. ஆங்கிலத்துல உலோக கலவைக்கு alloy –ன்னு சொல்லுவாங்க.” என்றேன்.

“உம்… எந்த உலோகம், நான் ஈரப்பதமா இருக்கும் பொழுது அதிக மின்துகள்கள பெறுது?” என்று கேட்டது நீர்.

“துத்தநாகம்” என்று உடனே கூறினேன்.

“சரி, என்னால உலோகங்கள்ல உருவாகும் மின்னழுத்தத்த, மின்சாரமா மாற்றி எப்படி சேமிப்பீங்க?” என்றது நீர்.

“இதுக்குன்னு ஒரு கருவி இருக்கு, அதுக்கு பேரு மின்தேக்கி. ஆங்கிலத்துல capacitor அப்படீன்னு அழைப்பாங்க.” என்றேன்.

“நன்றி” என‌க் கூறியது நீர்.

“நாங்க தான் உனக்கு நன்றி சொல்லனும். இப்போதைக்கு ஒரு வோல்ட் தான் ஈரப்பதத்துல இருந்தும் பெற முடியுங்கறது ஆய்வுகள் காட்டுது. இதுவே அதிக அளவு மின்சாரம் பெற முடிஞ்சா ஈரப்பதமாகிய நீ கூட ஒரு புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் மூலமா எங்களுக்கு இருப்ப” என்றேன்.

“சரி… சரி…என்னால் உங்களுக்கு நன்மைனா, எனக்கு சந்தோஷம் தான்.” என்று கூறி அங்கிருந்து விலகியது அந்த நீர்.

நான் மீண்டும் வீட்டிற்குள் சென்றேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
9941091461
drsureshwritings@gmail.com

இதைப் படித்து விட்டீர்களா?

நீருடன் ஓர் உரையாடல் 5 – கொதிநீராவி

நீருடன் ஓர் உரையாடல் 3 – பனிக்கட்டி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.