உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று எனத் தொடங்கும் இப்பாடல் திருவெம்பாவையின் பத்தொன்பதாவது பாடல் ஆகும்.
சைவ சமய குரவர்களில் ஒருவரான திருவாதவூரர் என்றழைக்கப்படும் மாணிக்கவாசகர் சைவத்தின் தலைவனான சிவபெருமானின் மீது திருவெம்பாவை பாடல்களைப் பாடினார்.
கி.பி.9-ம் நூற்றாண்டில் பாடப்பெற்ற திருவெம்பாவை பாடல்கள், இன்றைக்கும் மார்கழியில் இறைவழிபாட்டின் போது பாடப்படும் சிறப்பினைக் கொண்டுள்ளன.
பாவை நோன்பிருக்கும் பெண்கள் தங்களுக்கு வரும் கணவன்மார்கள் எத்தகையவர்களாக இருக்க வேண்டும்? என்று எண்ணி அதனை விண்ணப்பமாக இறைவனிடம் வேண்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
நோன்பிருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பின்னரும் சிவனை வழிபட ஏற்றவாறு, சிவனின் அடியவர்களையே தங்களின் கணவர்களாக வர வேண்டுகின்றனர்.
தங்களுடைய கைகள் சிவதொண்டையே செய்பவைகளாகவும், கண்கள் இரவும் பகலும் சிவனையே காணுமாறும் வேண்டுகின்றனர்.
சிவதொண்டர்கள் மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும் இறைவனின் திருப்பணிக்கே என்று எண்ணுவர். ஆதலால் மேற்கூறிய மூன்றாலும் இறைவனை இடைவிடாது எப்போதும் வணங்க வேண்டும் என்று இப்பாடல் கூறுகிறது.
இனி திருவெம்பாவை பத்தொன்பதாவது பாடலைக் காண்போம்.
திருவெம்பாவை பாடல் 19
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம்கொங்கை நின்அன்பர் அல்லாற் தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்குஇப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழில் என் ஞாயிறு எமக்கு ஏலோர் எம்பாவாய்
விளக்கம்
பாவை நோன்பிருக்கும் கன்னிப் பெண்கள் நல்ல கணவனைத் தருமாறு இறைவனை வேண்டியே நோன்பிருக்கின்றனர். மேலும் அவர்கள் சிவபெருமானையே அடைக்கலமாகக் கருதுகின்றனர்.
தங்களுடைய எதிர்காலத்திலும் சிவவழிபாட்டினை மேற்கொள்ளும் பொருட்டு, சிவனின் அடியவர்களையே தங்களின் கணவர்களாக வாய்க்குமாறு அருள வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
“எங்கள் பெருமானே, உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்ற சொல் பழமையானது. அந்த சொல்லை புதுப்பித்துக் கூற வேண்டிய அச்சம் எங்களுக்கு உள்ளது. எங்களுடைய விண்ணப்பத்தைக் கேட்டு அதன்படி அருள் புரிவாயாக.
எங்களுடைய தோள்கள் உன்னடியவர் தவிர வேறு எவருக்கும் உரிமை இல்லாததாக இருக்கட்டும்.
எங்களுடைய கைகள் உனக்கு அல்லாமல் வேறு எந்தப் பணிகளையும் செய்யாது இருக்கட்டும்.
எங்கள் கண்கள் இரவும், பகலும் உன்னைத் தவிர வேறு எதனையும் காணாது இருக்கட்டும்.
எங்கள் தலைவனான நீ எங்களுக்கு இவ்வாறு அருள் புரிந்தாயானால், கதிரவன் எந்த திசையில் உதித்தாலும் எங்களுக்கு என்ன குறை? ஒன்றும் இல்லை.
வாழ்நாள் முழுவதும் மனம், மொழி, மெய் ஆகியவற்றால் இறைவனை இடைவிடாது நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதையே அடியவர்கள் விரும்புவர் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.