உணவு கலப்படம் – கண்டறிவது எப்படி?

உணவு கலப்படம்

உணவு கலப்படம் ஒரு முக்கியமான பிரச்சினை. நாம் அன்றாடம் உண்ணும் உணவுப்பொருட்களில் பல பொருட்கள் கலப்படமாகக் கலக்கப்படுகின்றன. அவற்றை இனம் கண்டு ஒதுக்கித் தள்ளுவது உடல்நலத்திற்கு அவசியமானது ஆகும்.

எளிய சோதனை முறைகள் மூலம் உணவுப்பொருட்களில் கலப்படத்தை கண்டறிவது எப்படி? என்று பார்ப்போம்.

 

காபித் தூளுடன் சிக்கரி கலப்படமாகச் சேர்க்கப்படுகிறது.

இவ்வாறாக மிளகாய் பொடியுடன் செங்கல் பொடியும்,

தேங்காய் எண்ணெயுடன் மற்ற எண்ணெய்களும்,

ஐஸ்கிரீமுடன் சோப்புத்தூளும்,

நெய்யுடன் தாவர எண்ணெயும்,

சர்க்கரையுடன் சுண்ணாம்புத்தூளும்,

தேனுடன் சர்க்கரைபாகும் கலப்படமாகச் சேர்க்கப்படுகிறது.

சீரகம் மற்றும் மல்லித்தூளுடன் உமி அல்லது மரத்தூளும்,

பச்சை பட்டாணியுடன் நிறமிகளும்,

அயோடின் உப்புடன் சாதா உப்பும் கலப்படப் பொருள்களாக சேர்க்கப்படுகின்றன.

உணவு கலப்படம் நம்மைப் பாதிக்காத வண்ணம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

உணவு கலப்படம் கண்டறிவது எப்படி?

வ. எண் உணவுப் பொருள் கலப்படம் சோதனை முறைகள்
1 காபித் தூள் சிக்கிரி

ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை ஊற்றி அதில் காபித் தூளைத் தூவ வேண்டும்.

காபித் தூள் மேலே மிதக்கும். சிக்கிரித் தூள் நீரின் அடியில் தங்கி விடும்.

2 மிளகாய்த் தூள் செங்கல் பொடி

ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை ஊற்றி அதனுடன் மிளகாய்த் தூளைச் சேர்த்து கலக்கும் போது,

நீரின் நிறம் மாறினால் அதில் செங்கல் பொடி கலந்துள்ளது என்பதை அறியலாம்.

3 தேங்காய் எண்ணெய் பிற எண்ணெய்கள்

ஓரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் 30 நிமிடம் வைக்கவும். அதன்பின் எடுத்துப் பார்க்கும் போது முழுவதும் உறைந்து இருந்தால் சுத்தமான தேங்காய் எண்ணெய் எனவும்,

உறையவில்லை எனில் பிற எண்ணெய்கள் கலந்து உள்ளது எனவும் அறியலாம்.

4 ஐஸ்கிரீம் சோப்புத் தூள்

ஐஸ்கிரீமில் எலுமிச்சைச் சாற்றினை ஊற்றும் போது,

நுரைத்து பொங்கினால் சோப்புத் தூள் கலந்து உள்ளது என்பதை அறியலாம்.

5 நெய் தாவர எண்ணெய்

மூடியுள்ள ஒரு கண்ணாடிக் சீசாவில் நெய்யினை உருக்கி ஊற்றி, ஒரு சிட்டிகை சர்க்கரை கலந்து, சீசாவை மூடி குலுக்கவும்.

5 நிமிடம் கழித்து பார்க்கும் போது சிவப்பு நிறமாக மாற்றம் அடைந்தால் தாவர எண்ணெய் கலந்து உள்ளதை அறியலாம்.

6 சர்க்கரை சுண்ணாம்புத் தூள்

ஒரு கண்ணாடி டம்ளரில் நீரினை எடுத்து சர்க்கரையை போடும் போது தூய்மையான சர்க்கரை நீரில் அடியில் படிந்து விடும்.

சுண்ணாம்புத் தூள் நீரின் மேல் மிதக்கும்.

7 தேன் சர்க்கரை பாகு

ஓரு தேக்கரண்டி தேனை எடுத்து அதனுடன் சிறிது நீரும் 2 அல்லது 3 துளி வினிகரும் சேர்த்து கலக்கும் போது,

நுரை வந்தால் கலப்படம் என அறியவும்.

8 சீரகம் மற்றும் மல்லித்தூள் உமி மரத்தூள்

ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீரை எடுத்து அதனுடன் சீரகம் மற்றும் மல்லித்தூளினைப் போடும் போது அவை அடியில் படிந்து விடும்.

உமி, மரத்தூள் தண்ணீரில் மிதக்கும்.

9 பச்சை பட்டாணி நிறமி

ஒரு கிண்ணத்தில் பட்டாணியை போட்டு மூழ்கும் வரை நீர் ஊற்றி 30 நிமிடம் வைக்கவும்.

அந்நீரானது பச்சை நிறமாக மாறினால் நிறமி சேர்க்கப்பட்டுள்ளதை அறியலாம்.

10 அயோடின் உப்பு சாதா உப்பு

ஒரு உருளைக்கிழங்கினை பாதியாக வெட்டி அதில் உப்பினை தூவி, ஒரு நிமிடம் கழித்து இரண்டு துளி எலுமிச்சை சாற்றினை விடும்போது,

நீலநிறமாக மாறினால் அயோடின் இருப்பதை அறியலாம்.

 

உணவு கலப்படம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்; மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.

 

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.