ஒரு வயது முதிர்ந்த பெரியவர் பனியன், வேட்டி, இடுப்பில் பச்சை நிற பெல்ட் அணிந்து, பார்க்க கம்பீரமான உடல்கட்டு, மினுமினுத்த தேகம், நடையில் ஒரு மிடுக்கு என்று ஒரு இளைஞனை போல் இருந்தார்.
யாரும் அவ்வளவு எளிதில் அவரை வயது முதிர்ந்தவர் என்று சொல்லி விட முடியாது, அப்படி ஓர் கம்பீரத்துடன் இருந்தார் அவர்.
அவருக்கு ஓர் சிறிய உணவகம் உள்ளது. சந்தைக்கடை, மார்கெட் என்று சுத்தி சுத்தி விலை மலிவான காய்கறிகளையும் மளிகை சாமான்களையும் பார்த்துப் பார்த்து வாங்குவார்.
பொருட்களை யெல்லாம் வாங்கி சேகரித்து ஒரு இடத்தில் வைத்து பின்பு அங்கிருந்து யாரையாவது ஒருவரை அழைத்து வந்து சாமான்களை யெல்லாம் கடைக்கு கொண்டு செல்வார். இது இயல்பாகவே எப்போதும் நடப்பதுதான்.
பெரியவரின் ‘ஜெயராமன் சாப்பாட்டு’க் கடையில் மீன் சாப்பாடு, கறி குழம்பு, சிக்கன் ரோஸ்ட் என்று அசைவமும், இட்லி, பொங்கல், பூரி என்று சைவமும் மிக அருமையாக இருக்கும்.
பெரியவரின் கை பக்குவமும் சுவையும் தனித்தன்மை கொண்டது. அவரது சமையல் வீட்டு சமையலை போன்ற உணர்வை ஏற்படுத்தும். அவ்வளவு அருமையாக இருக்கும்.
தடுமாற்றம் இல்லாத நிதானமான வியாபாரம் அவருடையது.
வாடிக்கையாளர்களை கையெடுத்து வணங்கி வரவேற்கும் பண்பு உடையவர்.
ஜெயராமன் சாப்பாட்டுக் கடைக்கு என்று தனி மதிப்பும், பெரியவருக்குகென்று தனி மரியாதையும் எப்போதும் இருக்கும்.
ஜெயராமன் சாப்பாட்டுக் கடைக்கு எதிரே ஒரு டீக்கடையும், அதன் பக்கத்தில் பீடி, சிகரெட், வெற்றிலை, பாக்கு விற்கும் பெட்டி கடையும் உள்ளது .
சாப்பாட்டுக் கடையின் பின் பக்கத்தில் பெரிய தோட்டத்துடன் கூடிய அந்த காலத்து பழைய மெத்து வீடு ஒன்று இருந்தது.
ஜெயராமன் சாப்பாட்டுக் கடை வழியாகவே மெத்து வீட்டிற்குச் செல்லலாம். மெத்து வீடு அவருடையதுதான்.
அந்த வீட்டில் தன் மனைவி, மகள், இரண்டு பேரக்குழந்தைகளுடன் சாப்பாட்டுக் கடையில் வரும் வருமானத்தை வைத்து மிகவும் சந்தோஷமாகவே வாழ்ந்து வருகிறார் பெரியவர்.
இந்நிலையில் நகரில் பதற்றம் ஏற்பட்டது. காவல்நிலையத்தில் உயர் அதிகாரி உரத்த குரலில் கத்திக் கொண்டிருந்தார்.
“என்னதான் செஞ்சுகிட்டு இருக்கீங்க நீங்க எல்லாரும். ஜனங்கள் எல்லாம் ஒவ்வொருவராக காணாமல் போயிட்டு இருக்காங்க.
இது வரைக்கும் நம்ப மாவட்டத்தில் மட்டும் 18 பேர் காணாம போய் இருக்காங்க. இந்த வாரம் மட்டும் மூன்று பேரைக் காணல.
ஒருத்தரைக்கூட இன்னும் கண்டுபிடிக்கல. இவங்க எல்லாம் எங்க தான் போனாங்க? என்ன ஆனாங்க? ஒண்ணுமே தெரியல.
மாசாமாசம் கரெக்டா கையெழுத்து போட்டு சம்பளம் வாங்க தெரியுதுல! ஒரு கேஸயாவது கண்டுபிடித்தீர்களா?
எனக்கு மேலிடத்திலிருந்து துருவித்துருவி கேள்வி மேல கேள்வி கேக்குறாங்க. அவங்களுக்கு நான் என்ன பதில் சொல்றது?”
போலீஸ் ஸ்டேஷன் முழுவதும் அமைதியாக இருந்தது. யாரும் எந்த பதிலும் சொல்லவில்லை.
“நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள இந்த கேஸ் எல்லாம் முடிச்சு ஆகணும். இல்லன்னா விஷயம் வேற மாதிரி போயிடும்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
டியூட்டி முடித்துவிட்டு வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் கான்ஸ்டபிள் தேசமுத்து.
சிறிது தூரம் சென்றதும், அவர் பாக்கெட்டிலிருந்து செல் உயிர் பெற்று அழைத்தது.
சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து காதருகே கொண்டு சென்று “ஹலோ லலிதா! சொல்லு. என்னமா! என்ன பண்ணிட்டு இருக்க? ஏன் போன் செஞ்ச?”
மறுமுனையில் “அது ஒன்னும் இல்லைங்க. டியூட்டி முடித்துவிட்டு வீட்டுக்கு தானே வந்துக்கிட்டு இருக்கீங்க.”
“ஆமாம் இப்போ உனக்கு என்ன வேணும்?”
“அப்படியே மார்கெட்டுக்கு போயி, காய்கறி, கொத்தமல்லி, கருவேப்பிலை எல்லாம் வாங்கிட்டு வந்துடுங்க.”
“சரி, சரி போன வை.” என்று கட் பண்ணினார் தேசமுத்து.
அப்படியே மார்கெட்டிற்கு சென்று காய்கறி சாமான்கள் எல்லாம் வாங்கிகொண்டு வீட்டிற்குச் சென்றார்.
தேசமுத்து தன் யூனிபாமை கழட்டி வைத்துவிட்டு கை கால்களை அலம்பிவிட்டு வந்து, சேரில் உட்கார லலிதா காப்பியுடன் வந்து காபியை கையில் கொடுக்க அதை வாங்கி மேசையின் மேல் வைத்துவிட்டு, “ஆமாம் எங்கே உங்க அருமை புதல்வன்? துரை என்ன செஞ்சுகிட்டு இருக்காரு?”
“முத்தரசன் ரூம்ல தான் இருக்கான்.”
“…ம் …நான் படிச்சதுக்கு கான்ஸ்டபிள் வேலை தான் கிடைத்தது. அதுவும் டிரைவராகவும் அவர்களுக்கு எடுபுடியாகவும் என்னால் இருக்க முடிஞ்சது.
முத்தரசனாவது உயர்ந்த அதிகாரியாக வரணும்னு நினைச்சேன். எனக்கு வர்ற வருமானத்துல அவனை மேற்கொண்டு படிக்க வைக்க முடியல.
அதனால் தான் எனக்குத் தெரிந்த நண்பர் டிடெக்டிவ் ஏஜென்ட் ஆபீஸரிடம் கெஞ்சி கூத்தாடி, வேலைக்கு சேர்த்து விட்டேன்.
அவன் அங்கே போயும் எடுபுடியாகத்தான் இருக்கிறான். ஆண்டவன் அவன் தலையிலே என்ன எழுதி வச்சிருக்கானோ?
இன்னைக்கு எங்க ஸ்டேஷனுக்கு உயர் அதிகாரி வந்து எங்க எல்லாரையும் வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாரு.”
“ஏங்க என்ன ஆச்சு?”
“அதிகாரி வந்து காணாமல் போன வங்க லிஸ்ட்டை எல்லாம் எடுக்க சொன்னார். இதுவரை நம்ம மாவட்டத்தில் 18 பேர் காணாமல் போயிருக்காங்க. ஒருத்தரை கூட இன்னும் கண்டு பிடிக்கல.
எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? கேட்டா ஒரு தடயம் கூட கிடைக்கவில்லை. கண்டுபிடிக்க முடியலைங்கறீங்க.
இன்னும் ஒரு வாரத்துக்குள்ள கண்டுபுடிச்சு, கேச முடிக்கணும்முணு சொல்லிட்டு போயிருக்காரு. எல்லாரும் ஆடிப்போய் நிக்கிறாங்க. என்ன பண்றதுன்னே தெரியல” என்று சொல்லிவிட்டு எழுந்து தோட்டத்து பக்கம் சென்றார் தேசமுத்து.
தேசமுத்து சொன்னதை எல்லாம் உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த முத்தரசனுக்கு என்னவோ போல் இருந்தது.
எழுந்து மேசையின் டிராயரில் எதையோ தேடி. எடுத்து தன் பேன்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். வீட்டை விட்டு வெளியே நடந்தான்.
ஏதோ யோசித்தபடி நடந்துகொண்டிருந்த முத்தரசனுக்கு கால் வலிக்க ஆரம்பித்தது. ஒரு இடத்தில் நின்று சுற்றும் முற்றும் பார்த்தான்.
எதிரே ஒரு டீ கடை கண்ணில் பட்டது. டீ கடைக்கு சென்று அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தான்.
“அண்ணே ஒரு டீ கொடுங்க.”
“இதோ தரேன் தம்பி.”
கடையில் வேறு யாருமே இல்லை. கடை முதலாளியும் முத்தரசனும் மட்டும்தான்.
சிறிது நேரத்தில் டீக்கடை முதலாளி டேயுடன் வந்து “இந்தாங்க தம்பி டீ!” என்றார்.
கையில் வாங்கிக் கொண்ட முத்தரசன், “ஆமாண்ணே எதிரே உள்ள ஹோட்டல்ல யாவாரம் எப்படி நடக்குது?”
“பரவாயில்ல தம்பி! சுமாரா நடக்குது. அவருக்கென்று ஒரு கை பக்குவம். அவருக்கென்று கஸ்டமர்ஸ். தேடி வந்து வாங்கிட்டு போறாங்க.
அந்தக் கடையில நடக்கிற வியாபாரம் அவர் குடும்பத்திற்கு போதுமானதாக இருக்குது தம்பி. வயசான காலத்துல யார் கையையும் எதிர்பார்க்காமல் இருக்காரு.”
“ஏன் என்ன ஆச்சு? பசங்க எல்லாம் இருக்கிறாங்க இல்ல?”
டீக்கடை முதலாளி அருகே வந்து உட்கார்ந்தார்
“இருக்கிறாங்க தம்பி. அவருக்கு ஆம்பள புள்ள ஒன்னு. பொம்பள புள்ள ஒன்னு. பொம்பள புள்ளைய கல்யாணம் முடிச்சு தன் வீட்டிலேயே வைத்து விட்டார்.
ஆம்பள புள்ள பெரிய படிப்பு. டாக்டர்! சென்னையில இருக்காரு. வசதி வாய்ப்பு வந்ததும் அங்கேயே தங்கிட்டார்.
அவரும் எத்தனையோ முறை இவரை கூப்பிட்டு பார்த்தார் ஊரை காலி பண்ணிட்டு எல்லோரும் இங்கே வந்து இருங்கன்னு எவ்வளவோ சொல்லி கூப்பிட்டு பார்த்தார்.
இவரு மசியவே இல்லை. ‘போடா! உன் காசும் நீயும் ‘ன்னு சொல்லிப்புட்டு இவரு இங்கேயே தங்கிவிட்டார்” என்று சொல்லி முடித்தார்.
“ஆமாண்ணே நானும் ரொம்ப நேரமா பார்த்துகிட்டு இருக்கேன். அந்தக் கடையை நாய் சுத்தி சுத்தி வருது. அப்புறம் பார்த்தா அந்த கடை வாசல்ல போய் ஏறுது. திரும்பவும் கீழே இறங்கி சுத்தி சுத்தி வருது. அது அவங்க வளர்ப்பு நாயா?.”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல தம்பி, ரெண்டு நாளைக்கு முன்னால அவர் மார்க்கெட்டுக்குப் போய் சாமான் வாங்கிட்டு வர்றப்ப சாமான்களையெல்லாம் தூக்கிட்டு ஒரு பையன் வந்தான்.
அவன் கூடவே இந்த நாய் வந்தது. விட்டுட்டு போயிட்டான் போல இருக்கு. இது இங்கேயே ரெண்டு நாளா சுத்திகிட்டு நிக்குது.”
“அந்த ஆள் சாமான வச்சுட்டு போறதா இருந்தா இந்தப் பாதையில தானே போய் இருக்கணும். இந்த நாய் கண்ணுல படாம எப்படி போனாரு?”
“கடைக்கு அந்த பக்கமா ஒரு பாதை இருக்கு தம்பி. சாமான வெச்சுட்டு அந்தப் பாதையால் போயிருக்கலாம்.”
முத்தரசன் அதற்குமேல் பேச்சை வளர்க்காமல் காசை கொடுத்துவிட்டு கடைக்கு வெளியே வந்தான்.
பக்கத்தில் இருந்த பெட்டி கடைக்கு போய் ஐந்து ரூபாய் காயினை கொடுத்து மாஸ்க் ஒன்று வாங்கி மாட்டிக்கொண்டு எதிரே ஜெயராமனின் உணவகத்துக்கு சென்றான்.
வாசலின் ஓரத்தில் விறகுகள் அடுக்கப்பட்டு இருந்தன.
வாசற்படியில் காலை வைத்து ஏறும்போது, ஜெயராமன் கல்லாவில் இருந்து எழுந்து “வணக்கம் தம்பி! வாங்க”
என்றார்.
முத்தரசன் உள்ளே சென்றதும் மாஸ்க்கை கழட்டாமல் “சாப்பாடு ரெடி ஆயிடுச்சா?” என்று கேட்டான்.
“ஆயிடுச்சி தம்பி. உங்களுக்கு என்ன சாப்பாடு வேணும்?”
“எனக்கு மீன் சாப்பாடு அரை பிளேட் குடுங்க. கட்டி கொடுத்துடுங்க.” என்று அதற்கு உண்டான காசையும் கொடுத்தான்.
ஜெயராமன் வழக்கமான குரலில்” அரை பிளேட் மீன் சாப்பாடு பார்சல் கட்டி கொடுப்பா” என்றார்.
அவரின் குரல் போன திசையை நோக்கி திரும்பினான் முத்தரசன். மூன்று டேபிள்கள் தாண்டி நான்காவது டேபிளில் பார்சல் கட்டப்பட்டுக் கொண்டிருந்தது.
அதன் பக்கத்தில், பிளேட்டு குழம்பு வாளி எல்லாம் கொடுக்கும் அளவுக்கு ஒரு டிக்கெட் கவுண்டர் போல் இருந்தது. ‘அதன் வழியாகத்தான் சாப்பாடு குழம்பு வாளி எல்லாம் வரும்’ என்று எண்ணிக் கொண்டான்.
அந்த கவுண்டருக்கும் கொஞ்சம் தள்ளி கைகழுவும் பேஷன் இருந்தது.
அதற்கும் பக்கத்தில் பிளைவுட்டால் ஆன ஒரு கதவு. அதைத் திறந்தால் தான் சமையல்கட்டுக்கு செல்ல முடியும். அதற்குமேல் பார்வையை செலுத்த முடியவில்லை
பார்சல் ரெடியானதும் வாங்கிக்கொண்டு வெளியே வந்த முத்தரசன் கடையைத் தாண்டி சிறிது தூரம் சென்று சாப்பாடு பொட்டலத்தை பிரித்து வைத்து நாயை உச்சுக் கொட்டி கூப்பிட்டான். நாய் ஓடி வந்து சாப்பிட ஆரம்பித்தது.
வந்த வழியே திரும்பி வீட்டிற்கு சென்ற முத்தரசனுக்கு இருப்பு கொள்ளவில்லை.
தன் ரூமில் உட்கார்ந்து தன் அப்பா சொன்னதையும் உணவகத்தில் நடந்த நிகழ்ச்சியையும் யோசித்துக் கொண்டிருந்தான்.
இரவெல்லாம் அவன் தூங்காமல் என்ன செய்வது என்று நினைத்துக் கொண்டிருந்தான்.
பொழுது மெதுவாக விடிய, சூரியன் கிழக்கில் இருந்து தலைகாட்டத் தொடங்கியது.
தன் அப்பா டூட்டிக்கு கிளம்பி சென்றதும், முத்தரசன் ஒரு பையை எடுத்து அப்பாவுடைய பழைய அழுக்கு வேஷ்டி, பனியன் மற்றும் அவனுக்கு தேவையான பொருட்களை எல்லாம் தேடி எடுத்து உள்ளே வைத்தான்.
தான் வேலை செய்யும் அலுவலகத்தில் அதிகாரியிடம் கொடுக்க ஒரு லீவ் லெட்டர் எழுதி எடுத்துக்கொண்டான்
அப்போது அவனுடைய அம்மா லலிதா டீயுடன் வந்தாள்.
“என்னப்பா பைய எல்லாம் எடுத்துட்டு எங்க கிளம்பிட்டே?”
“போகும்போது எங்க போறன்னு கேட்காதம்மா”
“அப்ப சரி வரும்போது எங்க இருந்து வருவ?”
“உனக்கும் அப்பாவுக்கும் என் வாழ்க்கையில் விளையாடுறது வேலையா போச்சுல்ல?”
“இல்லப்பா அவசர அவசரமாக பையை எடுத்துக்கிட்டு கிளம்பிட்டியா அதான்.”
“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. நான் ஆபிசுக்கு போகல. என் நண்பன் ராகேஷ்க்கு கல்யாணம். ஆபீசுக்கு ரெண்டு நாள் லீவு போட்டுட்டு கல்யாண்த்துக்குப் போறேன்
“அப்பாவுக்கு தெரிஞ்சா சத்தம் போடுவாரு”
“அப்பாகிட்ட நீதான் ஏதாச்சும் சொல்லி சமாளிக்கணும். நான் போறப்போ ஆபிசுக்கு போய் லீவு லெட்டர் கொடுத்துவிட்டு போறேன்.”
“உன்னுடைய போன் எல்லாம் எடுத்துகிட்டியா? சரி சரி இந்த காபியை குடிச்சுட்டு போ. நான் அப்பாகிட்ட பேசிக்கிறேன்”
காப்பியை குடித்து விட்டு அம்மாவின் காலை தொட்டு வணங்கி புறப்பட்டான் முத்தரசன்.
என்றும் இது போலே செய்யாத முத்தரசனை திகைப்புடன் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் லலிதா.
அந்த கடையில் நடந்த நிகழ்வுகளை யோசித்தபடி வந்தான் முத்தரசன்.
‘ அந்தக் கடையில் சாமான்களை கொண்டுபோய் வைப்பவர் மீண்டும் அந்த வழியாகவே வருவதில்லை; வேறு வழியாக சென்று விடுகிறார்கள்.
அந்த நாய் வேறு அங்கேயே சுற்றி சுற்றி நின்று கொண்டிருக்கிறது. ஒன்றும் புரியவில்லை ஆனால் ஏதோ தவறாக இருக்கிறது.’ என்று யோசித்தபடி பெரியவர் வழக்கமாக சாமான்கள் வாங்கும் மார்க்கெட்டிற்கு
வந்தான்.
மறைவாக ஒரு இடத்தில் நின்று அப்பாவின் வேஷ்டி பனியனை அணிந்து கொண்டான்.
பக்கத்தில் நின்றிருந்த பைக்கின் செயினை தொட்டு அதிலிருந்து கிரிசை எடுத்து தன் கை, கால், முகம் என லேசாகத் தேய்த்து தன் நிறத்தை மாற்றிக் கொண்டான்.
அப்போது தூரத்தில் ஜெயராமன் சாப்பாட்டுக் கடை பெரியவர் வருவது தெரிந்தது.
வாயில் ஒரு சுவிங்கத்தை எடுத்து போட்டுக்கொண்டு அவர் கண்ணில் படும்படி மஞ்சள் பையை தோளில் போட்டுக் கொண்டு அங்கும் இங்கும் சுற்றி.சுற்றி திரிந்து கொண்டு நின்றான்.
பெரியவர் அவனை பார்த்து கையசைத்தார்.
முத்தரசன் அருகில் வர, பெரியவர் தன் கையில் உள்ள பையை அவனிடம் கொடுத்துவிட்டு “வா! என் கூட” என்று அழைத்துக்கொண்டு காய்கறி கடைக்கு சென்றார்.
காய்கறிகள் எல்லாம் வாங்கி கொண்டு இருவரும் வெளியே வந்தார்கள்.
“இந்த சாமான்களை எல்லாம் வைத்துக் கொண்டு இங்கே நில்லு. நான் பக்கத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்று மளிகை சாமான்கள் வாங்கி வருகிறேன்” என்று சொல்லி விட்டு சென்றார்.
சிறிது நேரத்தில் முத்தரசன் கையில் வைத்திருந்த அவரின் பையில் ஏதோ சத்தம் கேட்டது திறந்து பார்த்தான்.
பையில் ஒரு செல்போன் இருந்தது அதில் இருந்துதான் சத்தம் வந்தது. கையில் எடுத்தான் ஒரு மெசேஜ் வந்து இருந்தது.
“அப்பா எனக்கு உதிரிப்பூக்கள் கொஞ்சம் தேவைப்படுகிறது. ரெடி பண்ணிட்டு மெசேஜ் பண்ணுங்க” என்று இருந்தது. பார்த்துவிட்டு பைக்குள்ளேயே வைத்து விட்டான்.
பெரியவர் சாமான்களுடன் வந்தார்.
“அவ்வளவு தான் தம்பி இந்த சாமான்களை எல்லாம் எடுத்துக் கொண்டு பக்கத்தில் உள்ள என்னோட கடைக்கு கொண்டு போகணும். நீ கொண்டு வந்து வச்சேன்னா உனக்கு அறுபது ரூபாய் தரேன்” என்றார்
‘சரி’ என்பது போல் தலையசைத்தான். இருவரும் சாமான்களுடன் கடைக்கு சென்றார்கள்.
பெரியவர் கடைக்கு உள்ளே சென்றார். “வா தம்பி! இங்க கொண்டு வா” என்று சொல்லிவிட்டு பெரியவர் உள்ளே செல்ல பின்னே நடந்தான் முத்தரசன்.
கை கழுவும் இடத்தின் அருகே இருந்த கதவு திறக்கப்பட்டது. உள்ளே சென்றார்கள் இருவரும்.
உள்ளே சென்றதும் சமையல்கட்டு இருந்தது. சமையல்கட்டில் சாமான்களை இறக்கி வைத்துவிட்டு அங்கு உள்ள ஒரு மர ஸ்டூலில் உட்கார சொன்னார் பெரியவர்.
உட்கார்ந்தான் முத்தரசன்.
பெரியவர் “இங்கேயே இரு. நான் போய் உனக்குள்ள காச எடுத்துட்டு வர்றேன். ஆமாம் டீ சாப்பிடுகிறாயா?” என்றார்
“சரிங்க ஐயா” என்றான் முத்தரசன்.
பெரியவர் போனதும் அடுப்படியே நோட்டமிட்டான். எல்லா இடங்களிலும் கேஸ் அடுப்பு தான் இருந்தது. சந்தேகம் வலுத்தது.
தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த 2 சிறிய ரகசிய கேமராவை அவன் பையில் இருந்து தடவி எடுத்தான்.
வாயில் வைத்திருந்த சூவிங்கத்தை எடுத்து கொஞ்சத்தை கிள்ளி ஒரு மூலையில் சிறிய கேமராவை வைத்து ஓட்டினான்.
அடுப்படிக்குள் இன்னொரு கதவு இருந்தது. அதை லேசாக தள்ள திறந்தது. அதனுள் நான்கு படிக்கட்டுகள் அதைத்தாண்டி இறங்கினான்.
உள்ளே ஒரு சில்வர் டேபிள் இருந்தது. அதன் பக்கத்தில் பன், வருக்கி தயாரிக்கும் பேக்கரி அடுப்பு ஒன்று இருந்தது.
மீதி இருந்த சூவிங்கத்தை வைத்து அங்கு ஒரு ஓரத்தில் கேமராவை செட் பண்ணி விட்டு உடனே வந்து உட்கார்ந்து கொண்டான் முத்தரசன் .
பெரியவர் வேகவேகமாக காசை எடுத்துக்கொண்டு வந்தார். அவர் கூடவே எதிரே உள்ள டீக்கடை முதலாளியும் வந்தார்.
“என்ன தம்பி இப்படி பண்ணிட்டீங்களே? உங்க அப்பா எவ்வளவு பெரிய மனுஷன்? அவரு புள்ள நீங்க கூலி வேலைக்கு எல்லாம் வரலாமா?
எனக்கு நீங்க யாரு எவருன்னு எல்லாம் தெரியாது. இந்த டீக்கடை முதலாளி தான் சொன்னாரு நீங்க தேசமுத்துவோட புள்ளைன்னு” என்றார் பெரியவர். ஏம்பா அப்பாகிட்ட ஏதும் பிரச்சனையா?”
“ஆமாங்கய்யா அப்பா ஏதாச்சும் வேலைக்கு போடான்னு சொல்லி என்னைய அடிச்சுவிரட்டிடாரு ஐயா.”
“சரி! சரி தம்பி அப்பா தானே அடிச்சாரு. இதுக்கு போய்
கோவிச்சுக்கலாமா? இந்தாங்க காசு. நீங்க முதல்ல வீட்டுக்கு கிளம்புங்க” என்று சொல்லி வாசல் வழியே அனுப்பி வைத்தார்.
முத்தரசன் வீட்டுக்கு போனதும் தன் ஆண்ட்ராய்ட் மொபைலில் கேமராவுக்கு கனக்சன் கொடுத்தான்.
அதன்பிறகு மூன்று நாள் ஆனது.
தேசமுத்து டூட்டி முடித்து விட்டு வீட்டிற்கு வந்ததும், லலிதாவிடம்
“இன்னைக்கும் ஒருத்தர் காணாமல் போய் விட்டார். இப்படியே நடந்து விட்டு இருந்தா என்னதான் பண்றதுன்னே தெரியல” என்று சொனார்.
முத்தரசன் தன் ரூமில் இருந்த செல்போனை எடுத்து பார்க்க அதில் பதிவாகி இருந்த காட்சியை மாவட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தான்.
போலீஸ் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு பிடிபட்டவர்கள் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள்.
ஜெயராமன் சாப்பாட்டுக்கடை பெரியவர், ஒவ்வொருவராக மார்க்கெட்டிலிருந்து அழைத்து வருவார்.
அழைத்து வரப்பட்டவர்களுக்கு டீயில் மயக்க மருந்தை போட்டுக் கொடுத்து அடுப்படிக்கு அடுத்தாற்போல் உள்ள ரூமுக்கு கொண்டு சென்று சில்வர் டேபிளில் படுக்க வைத்து விடுவர்.
சென்னையில் டாக்டராக உள்ள பெரியவரின் மகனுக்கு மெசேஜ் செய்வார். அவருக்கு பழக்கப்பட்ட இரண்டு டாக்டர்கள் வீட்டின் வழியாக வருவார்கள்.
அவர்களுக்கு தேவையான கிட்னி, இதயம், கண், லிவர் என்று தேவையானதை எடுத்துக் கொண்டபின், மீதமுள்ள பாடியை இந்த பேக்கரி அடுப்புக்குள் தள்ளி விறகை வைத்து உள்ளேயே எரித்து விடுவார்.
வெளியே கொஞ்சோண்டு சாம்பலாக தான் வரும். வெளியே ஒருவருக்குமே இது பற்றித் தெரியாது. இதுவரை 19 பேரை இதேபோல்தான் செய்தோம்” என்று வாக்குமூலமும் கொடுத்தார்கள்.
முத்தரசனுக்கு உயர் அதிகாரியாக பணியில் சேரும் ஆணையும் பதக்கமும் வழங்கப்பட்டது.
தன் மகன் முத்தரசனை பார்த்து சல்யூட் அடித்தார் தேசமுத்து.
திட்டச்சேரி மாஸ்டர் பாபு