ஊர்க்குருவியும் பருந்தாகும் உன்னதக் கணக்குகள்

அந்த பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் அதிகமாக வர ஆரம்பித்தன. அங்கு ஏற்கனவே இருந்த பறவைகளுக்கு இவர்களைக் கண்டாலே பிடிப்பதில்லை.

“இவங்க வந்தா மட்டும் தான் இந்த மனுசங்க பார்க்க வராங்க, நாம நாளுபூராவும் இவங்கள சுத்தியே அலையுறோம். ஆனால் நம்மள கண்டா இவங்களுக்குப் பிடிக்காது”.

“இந்தக் கடவுளும் கூடப் பறவைகளுக்கு வஞ்சகம் செஞ்சிருக்குது” என்று பொருமியது ஒரு பறவை.

“அப்படி என்ன வஞ்சகம் நமக்கு மட்டும் கடவுள் செஞ்சிருக்காரு” என்று மற்றொரு பறவை கேட்டது.

“ஆமா வஞ்சகம் தான்! குதிரைக்கு நல்லா ஓடுறதுக்கு வசதியான கால்கள் கொடுத்திருக்காரு யானைக்குத் தும்பிக்கையின்னு ஒன்ன குடுத்து இலைகளைப் பறிக்க வசதி பண்ணியிருக்காரு, ஆடு மாடுகளுக்குக் கொம்புகள குடுத்துப் பாதுகாப்பாஇருக்க வச்சதோடு பாலைத் தந்து மனுசங்களோட இருக்க வச்சிருக்காரு, ஆனா நமக்கு மட்டும்தான் ஒன்றுமேயில்லை” அலுத்துக் கொண்டது ஆந்தை அருக்காணி.

“ஏன் நமக்கு ஒன்றுமேயில்லை? நம்ம குயிலு குப்பு மாதிரி குரல் யாருக்கு இருக்கு? நம்ம கிளி கீதா மாதிரி பேச யாருக்குத் தெரியும்? இதெல்லாம் கடவுள் கொடுத்ததுதானே? ஏன் மொத்தத்துலே நமக்குப் பறக்கற ரெக்கை கொடுத்தது கடவுள்தானே?” என்று ஆந்தையைச் சமாதானப்படுத்தியது, பறவைகளில் தலைவரான கழுகு கரிகாலன்.

“ஆமாம் ஆமாம் நம்ம தலைவர் சொல்லுறதும் சரிதான்” என்று காக்கை கருப்பன் கூற அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

“சரி இப்போ தேவையில்லாதத பேசவா நாம் கூடினோம்?” என்று நினைவூட்டியது குருவி குறுமணி.

“ஆமா, நாம இப்ப வெளிநாட்டுல இருந்து வர்ற பறவைகளைப் பத்தி பேசத்தானே கூடினோம்?” என்று வந்த காரியத்தை ஆரம்பித்தது பருந்து பாப்பம்மாள்.

வெளிநாட்டுல இருந்து வர்ற பறவைகள வருசத்துல கொஞ்சநாள்தான் இங்க இருக்கும். அத விட வருசம் பூராவும் நம்மகூட இருக்குற மனுசங்களப் பத்திப் பேசுறது தானே முக்கியம்? என்றது ஆந்தை அருக்காணி.

“ஆமா அருக்காணி சொல்லுறதும் சரிதான்” என்று கூறியது வெள்ளைக் கொக்கு வெள்ளையம்மாள்.

“பாடும் பறவை, பாயும் மிருகம் இவைகளுக்கெல்லாம் பகுத்தறிவில்லை அப்படின்னல்லாம் நம்மளப்பத்தி பாட்டெழுதிப் பாடுறாங்கப்பா!” என்றது குருவிகுறுமணி.

“அதே மனுசங்கதான் காக்கை குருவி எங்கள் சாதின்னும் பாடியிருக்காங்களே!” என்று அதற்குப் பதில் கூறியது காகம் கருப்பன்.

“ஏன் என்ன மாதிரி இருக்கிறவங்களப் புடிச்சி கூண்டுல அடச்சி சீட்டுகளவச்சி அத எடுக்கச் சொல்லி ஜோசிய முன்னு பேருவச்சி அதையும் நம்புறவங்களே அதுக்கென்ன சொல்றீங்க?” என்றது கிளி கீதம்மா.

“எங்க அண்ணன் ஒருத்தன் காட்டுல இருக்கான், அங்க உள்ள விலங்குகள்ல கூட இது மாதிரி ஒரு பிரச்சனை வந்ததாம்” என்று கூறியது காக்கை கருப்பன்.

“சரி அவங்க என்ன செஞ்சாங்களாம்?” எனப் பறவைகளுள் தலைவனான கழுகு கரிகாலன் கேட்டது.

“மனுசங்க கிட்ட இருந்து தப்பிக்க எல்லா விலங்குகளும் புத்திசாலியா இருக்கனுமுன்னு சொல்லி அவங்க குழந்தைகள ஒன்னா சேர்த்து சில கணக்குகளைச் சொல்லி அதுக்கு விடைகளை சொல்லச் சொல்லி அறிவ வளர்த்தாங்களாம்” என்று காக்கை கருப்பன் பதில் கூறியது.

“நாம என்ன அறிவில்லாமலா இருக்கோம்; அவங்கள மாதிரி நமக்கும் கணக்கு போடுறதுக்கு” என்று கேட்டது ஆந்தை அருக்காணி.

“ஆனா இப்படிச் செய்யலாம்” என்று சத்தமாகக் கூறியது கிளி கீதம்மா.
“எப்படி” என்றவர்கள் அமைதியாகக் கிளி கீதம்மாவையே என்ன சொல்லப் போகிறது என்று பார்த்தன.

“நமக்கு இப்ப பிரச்சனையே வெளிநாட்டுல இருந்து வர்ற பறவைகள் தானே! நாம நமக்குத் தெரிஞ்ச கணக்குகளை புதிராக  அவங்ககிட்ட கேட்டு அதுக்கு அவங்க விடை சொன்னா இங்கு தங்கலாம், இல்லையினா இங்க தங்கக்கூடாதுன்னு சொல்லிட்டா” என்று பாதியில் நிறுத்தியது கிளி கீதம்மா.

“ஆகா! அதுவும் சரியான யோசனைதான் பதில் சொல்லாம தோத்துட்டா அவங்கள அங்கிருந்து விரட்டிடலாமே!” என்று கூறியது குருவி குறுமணி.

பறவைகளின் தலைவனான கழுகு கரிகாலன் கிளி கீதம்மாவின் திட்டத்தை ஏற்றுக் கொண்டது. அதன்படியே அங்கு புதிதாகக் குடியேற வரும் வெளிநாட்டுப் பறவைகளுக்கு புதிர் கணக்குகளை சொல்ல வேண்டுமென்றும் அதற்காக ஆளுக்கு இரண்டு கணக்குகளாவது கண்டிப்பாகத் தெரிந்து கொண்டுவரவேண்டுமென்றும் முடிவு செய்தன.

“அனைவரும் பல இடங்களுக்குச் சென்று எங்கெல்லாம் புதிரான கணக்குகளைத் தெரிந்து கொள்ள முடியுமோ தெரிந்து கொள்ளுங்கள். அதையே இங்கு வந்து கேள்வியாகக் கேட்டு வெளிநாட்டுப் பறவைகளை வெற்றி கொள்ளுங்கள்” என்று கட்டளையிட்டது தலைவனான கழுகு கரிகாலன்.

அந்தக் கட்டளையின்படியே ஒவ்வொரு பறவைகளும் மனிதர்கள் வாழும் பகுதியை நோக்கிப் பறந்து சென்றன. பலவிதமான புதிர்களை மனிதர்களிடம் இருந்து கற்றுக் கொண்டு வந்தன.

அனைவரும் தமது தலைவனின் பின்னால் ஒன்று சேர்ந்து அங்கு தங்கியிருந்த வெளிநாட்டுப் பறவைகளைச் சந்திக்கச் சென்றன.

“நீங்கள்லாம் வெளிநாட்டுலருந்து வந்திருக்கீங்க! இது நாங்க இருக்குற இடம். இங்க எங்களக் கேட்காம தங்கக்கூடாது ஆமா!” என்று முதலில் அவசரப்பட்டு ஆரம்பித்தது ஆந்தை அருக்காணி.

“ஏய் அவங்களே வெளிநாட்டுகாரங்க அவங்களுக்கு நீ சொல்றது எப்படிப் புரியும்?” என்று கேட்டது வெளவால் வாணி.

ஊருக்கு ஒரு மொழிய வச்சுப் பேசிகிட்டு ஒவ்வொருத்தரும் அவங்க பேசுற மொழிதான் உலகத்திலேயே பெரிசுன்னு சொல்றதுக்கும் ஒருத்தருக்கு ஒருத்தரு சண்டை போட்டுக்கறதுக்கும் நாம என்ன மனுசங்களா? நாம எல்லாரும் பறவையினத்தைச் சேர்ந்தவங்க. நமக்கு எங்க போனாலும் ஒரே மொழி தான். அதபுரிஞ்சிக்க நீ!” என்றது காக்கை கருப்பன். “ஆமா ஆமா கருப்பன் சொல்றதும் உண்மைதான்” என்று கிளி கீதம்மாவும் ஒத்துக் கொண்டது.

“நீங்கள்லாம் இங்கேயே இருக்குறவங்களா நாங்க வருசத்துக்கு ஒருதரம் இங்க வர்றது வாடிக்கைதானே!” என்று கேட்டது வெளிநாட்டுப் பறவைகளில் ஒன்று.

“இதுவரைக்கும் அப்படி வந்திருக்கலாம் இனிமே நீங்க இங்க தங்கனுமுன்னா எங்க கண்டிசனுக்கு ஒத்துக்கிட்டா தங்கலாம் இல்லேனா…!” என இழுத்தது காக்கை கருப்பன்.

“முதல்ல உங்க கன்டிஷனைச் சொல்லுங்க அதுக்கப்புறம் மற்றது பற்றி பேசலாம்” என்று ஒரு வெளிநாட்டுப் பறவை கூறியது.

“தம்பிகளா! நீங்க வருசத்துக்கு ஒரு தரம் இங்க வர்றீங்க. நீங்க வந்து தங்கினா மட்டும்தான் இந்த மனுசங்க உங்களப் பார்க்கக்கூட்டம் கூட்டமா வாராங்க‌, போறாங்க. ஆனா வருசம் முழுக்க இங்கேயே இருக்குற எங்களக் கண்டா மட்டும் வெறுக்குற மாதிரி தெரியுது எங்களுக்கு. அதனால இங்க நீங்க இந்த வருசம் தங்கனுமின்னா நாங்க கேட்குற சில கணக்குகளுக்கு நீங்க விடைகளைச் சரியா சொல்லனும். அப்படிச் சொன்ன வினடை தவறா இருந்தா எங்க ஆளுங்களேவிடைகளைச் சொல்லிருவாங்க. இதுல யாரு ரொம்ப விடைகளைச் சொல்லுராங்கன்னு பாத்திட்டு மத்ததைப் பத்தி முடிவு செய்யலாம்னு நாங்க நினைக்கிறோம்” என்று நீண்ட விளக்கமளித்தது கழுகு கரிகாலன்.

வெளிநாட்டுப் பறவைகளும் தங்களுக்குள்ளாகச் சிறிது நேரம் பேசிக் கொண்டன. பிறகு தயங்கியவாறே “சரிங்கண்ணா, உங்க விருப்பப் படியே நாங்க நடக்குறோம். ஆனா இந்தப் போட்டி முடியுற வரைக்கும் நீங்க எங்கள வெளியேறச் சொல்லக்கூடாது” என்று கேட்டுக்கொண்டன.

உள்ளுர்ப் பறவைகளும் ஒத்துக்கொண்டன. போட்டிகள் மறுநாள் முதல் ஆரம்பமாகும் என்றும் ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு புதிர்களாவது கேட்கப்படும். அதில் இரண்டிலாவது வெளிநாட்டுப் பறவைகள் சரியான பதில் சொல்ல வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டன.

உன்னதக் கணக்குகள் உருவாகும் சூழ்நிலை உருவானது.

– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.